கிறிஸ்து தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். - (1 யோவான் 3: 16). ஒரு வேதாகம கல்லூரியில் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு லூக்கா 10:25-37 வரையுள்ள நல்ல சமாரியனை குறித்த சம்பவத்தை நன்கு ஆராய்ந்து அதை குறித்த எல்லாவகையான படிப்பினையும் அறிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டது. எல்லாரும் அநேக ஸ்டடி பைபிள்களை தேடி அதை ஆராயத் தொடங்கினார்கள். . ஆனால் அங்கு படித்த மூன்று மாணவர்கள் மாத்திரம் அந்த சம்பவத்தை படித்து அல்ல, நடைமுறையாக சிந்திக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதன்படி அந்த மூன்று பேரில் ஒரு மாணவர் தன்னை, சம்பவத்தில் வரும் குற்றுயிராக விடப்பட்ட மனிதனைப் போல, தன் உடைகளை கிழித்துக் கொண்டு, மண்ணை தன் மேல் போட்டுக் கொண்டு, இரத்த நிறத்தில் திரவத்தை தன்மேல் ஊற்றிக் கொண்டு தான் யாரென்று அடையாளம் தெரியாதவாறு தன்னை மாற்றி, அந்த கல்லூரியில் தரையில் கிடந்தார். . மற்ற இரண்டு பேரும் மறைந்திருந்த என்ன நடக்கிறதென்று கவனிக்க ஆரம்பித்தனர். மாணவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். யாரும் அந்த குற்றுயிராய் கிடந்த மாணவனின் பக்கம் திரும்பவில்லை, நிற்கவில்லை. சிலர் வந்து, 'ஏன் வேறு இடம் கிடைக்கவில்லையா? இந்த இடம்தானா கிடைத்தது?' என்று அவரை ஏசினார்கள். ஒருவரும் உதவி செய்யவில்லை. . அந்த மாணவர்கள் அநேக வேதாகமங்களை தேடி ஒரு நல்ல பதிலை கொண்டு வந்திருக்கலாம், ஆனால் நடைமுறையில் யாருமே வெற்றிப் பெறவில்லை! இரக்கத்தை குறித்து அறிந்திருப்பது வேறு, ஆனால் அதை கிரியையில் வெளிப்படுத்துவது வேறல்லவா! . 'அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்' என்று வேதம் நமக்கு கூறுகிறது. மட்டுமல்ல, 'ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?' (வசனம் 17) என்றும் கூறுகிறது. . பிரியமானவர்களே, நம்மோடு இருக்கிற ஒரு சகோதரனுக்கோ, சகோதரிக்கோ உதவி தேவையான நேரத்தில் நாம் உதவாமல் இருந்தால் நாம் எத்தனைதான் வேதாகமத்தை படித்திருந்தாலும், வேதம் சொல்லும் வார்த்தைகளின்படி மற்றவர்களுக்கு உதவவில்லை என்றால் என்ன பயன்? . 'என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்' (வசனம்18) என்ற வார்த்தையின்படி நாம் பேசுகிறதினால் மாத்திரமல்ல, உண்மையாக கிரியையில் நாம் தேவனை நேசிக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும்படியாக மற்றவர்களுடைய தேவையில் உதவ வேண்டும். அவர்களுடைய குறைச்சலில் நம் இருதயத்தை அடைத்துக் கொள்ளக்கூடாது. . கிறிஸ்து பரலோகத்தில் செல்ல பிள்ளையாக இருந்தாலும் நமக்காக எல்லாவற்றையும் இழந்து, மனித அவதாரம் எடுத்து, தம் ஜீவனையே நமக்காக கொடுத்தாரே! அவருடைய வழியில் செல்லுகிறோம் என்று சொல்லுகிற நாம், சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் என்ற வார்த்தையின்படி நம் ஜீவனை ஒருவேளை கொடுக்காவிட்டாலும் அவர்களது தேவையில், குறைவில், துன்பத்தில், துயரத்தில் நாம் பங்கெடுக்க வேண்டுமல்லவா? . வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். ஆமென் அல்லேலூயா! . பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப் பட்சமாக உதவி செய்வோம் உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே . நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை நீசரை நாம் உயர்த்திடுவோம் பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள் நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே . தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் . நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம் மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம் |