எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். - (கொலோசேயர் 3:24). . 'இந்த பகுதி நேர ஊழியம் என்பதெல்லாம் கர்த்தர் விரும்புகிற ஊழியங்கள் இல்லை. அவருக்கென்று முழு நேர ஊழியம் செய்வதையே கர்த்தர் விரும்புகிறார்' என்று சிலர் சொல்வதை கேட்டிருக்கிறேன். . கர்த்தர் முழு நேர ஊழியத்திற்கென்று அழைத்திருந்தால் அழைத்தவர்களுக்கு தெரியும், கர்த்தர் அவர்களை அப்படிப்பட்ட ஊழியத்திற்கு அழைக்கிறார் என்று. ஆகையால் அவர்கள் தங்கள் படிப்பு, வேலை, நாடு, வீடு எல்லாவற்றையும் விட்டுவிட்டு கர்த்தருக்கு உண்மையாக ஊழியம் செய்கிறார்கள். மட்டுமல்ல அநேக முழு நேர ஊழியர்களை தேவன் அழைத்தவிதமே வித்தியாசமாயிருக்கும்! உதாரணம், அகஸ்டின் ஜெபக்குமார் அண்ணன் அவர்கள். அவர் படித்தது பொறியாளருக்கு! அவருக்கு எத்தனையோ கனவுகள் இருந்திருக்கலாம், தான்தான் குடும்பத்தில் மூத்தவர், தனக்கு பின் இருக்கும் சகோதரிகளுக்கு தான்தான் முன்னின்று கலியாண காரியங்களை செய்ய வேண்டும் என்றுப் பல கனவுகள் இருந்திருக்கலாம். ஆனால் கர்த்தர் அழைத்தவுடன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, மொழி, பாஷை, இடம் தெரியாத இடமாகிய பீகாருக்கு சென்று ஊழியத்தை கர்த்தருடைய திட்டத்தின்படி சித்தத்தின்படி செய்து வருகிறார். அல்லேலூயா! . ஆனால் வேலை செய்துக் கொண்டே கர்த்தருக்கு ஊழியம் செய்யவும் முடியும். கர்த்தர் அடியேனை அனுதின மன்னா ஊழியங்களுக்கு அழைத்தபோது நான் மூன்று ஷிப்ட் வேலை செய்து கொண்டிருந்தேன். இன்னும் செய்துக் கொண்டிருக்கிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் எப்படி வேலையும் செய்துக் கொண்டு கர்த்தருக்கு ஊழியம் செய்ய முடியும் என்று ஒரு நாளும் நினைக்கவில்லை. கர்த்தர் ஊழியத்தை தரும்போது அதை செய்வதற்கான பெலத்தையும் ஞானத்தையும் தருகிறார். நம்முடைய பெலனோ, ஞானமோ அங்கு தேவையில்லை. கர்த்தர் சொல்வதை ஆத்துமாக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதே நம் வேலை! . வேதத்தில் நெகேமியா இராஜாவுக்கு பானபாத்திரக்காரனாக வேலை செய்துக் கொண்டிருந்தார். ஆனால் எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு பதைத்துப் போன அவர் தன் வேலையை விட்டுவிட்டு. இராஜாவிடம் அனுமதி வாங்கிக் கொண்டு முழு நேரமாக அலங்கத்தை கட்டும் வேலையில் ஈடுபட்டார். திரும்ப அவர் இராஜாவிடம் சென்றாரோ இல்லையோ தெரியாது. அவரைக் கொண்டு கர்த்தர் எருசலேமின் இடிந்த மதிலையும், வாசல்களையும், அலங்கத்தையும் கட்ட வைத்தார். . யோசேப்பு இராஜாவின் வேலையில் இருந்தாலும், அதை கர்த்தருடைய வேலையாக கருதி, பஞ்சத்தில் மக்களை காக்கும்படியான பெரிய பொறுப்பை ஏற்று, அதில் வெற்றியும் கண்டார். தானியேலும் இராஜாவுடைய வேலையில் இருந்தாலும் அதை உண்மையாக செய்தபடியால் உயர்த்தப்பட்டார். . கர்த்தருக்கு ஊழியம் செய்வது என்பது, பாஸ்டர், சுவிசேஷகர் அவர்களின் வேலைகள் மாத்திரமல்ல, இந்த உலகத்தில் தேவன் நமக்கு கொடுத்திருக்கிற பொறுப்புகளில், வேலைகளில் அவர் நாமம் மகிமைப்படும்படியாக உண்மையோடும் நேர்மையோடும் செய்வதே ஆகும். சிறிய காரியத்திலும் நாம் உண்மையாக இருந்தால் அதை காண்கிற தேவன் ஏற்ற வேளையில் நம்மை உயர்த்துவார். யார் என்னை காண்கிறார்கள் என்று நினைத்து, கொடுக்கப்பட்டிருக்கிற வேலையை செய்யாமல், சோம்பேறித்தனமாக இருந்தால் எந்த உயர்வும் இல்லாமல், எனக்கு கீழே வேலை செய்கிறவர்களுக்கெல்லாம் உயர்வு, எனக்கு மாத்திரம் கிடைக்கவில்லை என்று முறுமுறுத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். . தாவீது இராஜா சமஸ்த இஸ்ரவேலுக்கும் இராஜாவாக இருந்தும், அவர் தீர்க்கதரிசனமாக சொன்ன வார்த்தைகள் எத்தனை எத்தனை! அவர் கர்த்தரை துதித்து பாடிய சங்கீதங்கள்தான் எத்தனை எத்தனை! ஒரு இராஜாவாலே கர்த்தருக்கு பிரியமாக, இராஜ வேலை செய்துக் கொண்டே கர்த்தருக்கு ஊழியம் செய்ய முடியுமென்றால், நம்மாலே கர்த்தர் கொடுத்திருக்கிற சிறிய பொறுப்பில் உண்மையாக இருக்க முடியும் அல்லவா! . பிரியமானவர்களே, எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள் என்ற வார்த்தையின்படி கர்த்தருக்கென்று முழு இருதயத்தோடு நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற வேலைகளில், பொறுப்புகளில், ஊழியங்களில் பகுதி நேரமாக இருக்கட்டும், முழு நேரமாயிருக்கட்டும் உண்மையாக செய்வோம். கர்த்தரை அதன் மூலம் கனப்படுத்துவோம். நம் மூலம் கர்த்தரின் நாமம் மகிமையடையட்டும். அதைக் காணும் நம் கர்த்தர் நம்மை உயர்த்துவார். ஆமென் அல்லேலூயா! . தள்ளப்பட்ட கல் நான் எடுத்து நிறுத்தினீரே உண்மை உள்ளவன் என்று கருதி ஊழியம் தந்தீரையா . உந்தன் துதியைச் சொல்ல என்னை தெரிந்து கொண்டீர் உதடுகளைத் தினம் திறந்தருளும் புது ராகம் தந்தருளும் . உம்மை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா நன்றி நன்றி ராஜா நன்றி இயேசு ராஜா . |