எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான். - (நீதிமொழிகள் 1:33). . எரிக் வீஹென்மாயர் என்னும் மனிதர் கண் தெரியாதவர். சிறு வயதில் அவருக்கு ஏற்பட்ட ஒருவித கண் வியாதியினால் அவருக்கு கண் தெரியாமல் போய் விட்டது. ஆனால் அதனால் அவர் மனம் தளர்ந்து போய் விடாமல், 2001 மே மாதம் 25ம் தேதி அவர் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக சென்றடைந்தார். . தொண்ணூறு சதவிகிதத்திற்கு மேல் அநேகருக்கு அந்த சிகரத்தை சென்றடைய முடியாமல் போயிருக்கும்போது, 1953 லிருந்து 163 பேர் அந்த சிகரத்தை அடையவேண்டும் என்று முயற்சித்தவர்கள் மரித்தும் போயிருக்கும்போது இந்த கண்ணிழந்த மனிதருக்கு எப்படி அது சாத்தியமாயிற்று? அவர் தன் செவிகளை திறந்திருந்தபடியால். . அவருக்கு முன்னால் சென்றுக் கொண்டிருக்கும் மலை ஏறுபவரோடு கட்டப்பட்டிருக்கும் சிறு மணியின் சத்தத்தை கூர்மையாக கவனித்து, அதன்படி ஏறினார். தன்னோடு கூட வந்திருந்த மற்றவர்களின் எச்சரிக்கை சத்தத்தைக் கேட்டு, அதன்படி அவர் நடந்துக் கொண்டார். தன் கையில் இருந்த பனியை உடைக்கும் சிறிய உளியின் சத்தத்தை வைத்து அந்த பனி கால் வைக்க சரியானதுதானா என்று பார்த்து ஜாக்கிரதையாக தன் கால்களை வைத்தார். . இப்படி தன்னைச் சுற்றி இருக்கும் காரியங்கள் என்ன சொல்கிறது என்பதை அறிந்து, அதன்படி தன்னை காத்துக் கொண்டும், முன்னேறியும் சிகரத்தை சென்றடைந்தார். . 'எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்' என்று தேவன் கூறுகிறார். இந்த நாளில் மனிதன் யார் யாரோ சொல்வதையும், டெலிவிஷனிலும், சினிமாக்களிலும் தேவையற்ற அநேக காரியங்களை சொல்வதை காதுக் கொடுத்து கேட்கிறான். ஆனால் தேவன் சொல்வதை கேட்பதற்கு அவனுக்கு விருப்பம் இல்லை. வேதத்தின் மூலம், சபையில் போதகர் மூலம், அருமையான கிறிஸ்தவ பாடல்கள் மூலம் கர்த்தர் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அவர் பேசுவதை கேட்க மனதில்லாதவனாயிருக்கிறான். அல்லது அவனது செவிகள் அவற்றை கேட்பதற்கு மந்தமாக இருக்கின்றன. . செவிக் கொடுப்பதைக் குறித்து ஏராளமாக வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. கர்த்தருக்கு செவிக் கொடுத்து அவருடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்தால் ஏராளமான ஆசீர்வாதங்கள் நமக்கு உண்டு. செவி கொடாமல் போனால் ஏராளமான சாபங்களும் உண்டு என்று வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது (உபாகமம் 28:14-15). . 'துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்' (நீதி-17:4) ஆம், கெட்டவன் கேடு செய்கிறவனோடு இருப்பதால் அவன் சொல்வதைக் கேட்டு உற்றுக் கேட்டு, அதன்படி செய்கிறான். அதனால்தான் தீவிரவாதம் இந்த நாட்களில் தலைவிரித்தாடுகிறது. . மட்டுமல்ல, தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களும், சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும் (2தீமோ-4:4) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. நாம் கேட்பதைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நூதன உபதேசங்களுக்கு நாம் விலகி இருக்க வேண்டும். . தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான் (யோவான் 8:47) என்று இயேசுகிறிஸ்து கூறினார். தேவனுடைய வார்த்தைகளை கேட்டு, அதன்படி நடக்கிறவனை புத்தியுள்ள மனிதனுக்கு கிறிஸ்து ஒப்பிடுகிறார். . நாம் அப்படி அவருடைய எச்சரிக்கும் சத்தத்திற்கு, அவருடைய வார்த்தைகளுக்கு செவிக்கொடுக்கும்போது அவரும் நம்முடைய ஜெபத்திற்கு செவிக் கொடுக்கிறார். 'கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது' (சங்-34:15). அல்லேலூயா! . கர்த்தருடைய வார்த்தைகளுக்கு நம் செவியை சாய்ப்போம். அவருடைய சத்தத்திற்கு கீழ்ப்படிவோம். அப்பொழுது அவர் நம்முடைய சத்தத்தைக் கேட்பார், பதில் கொடுப்பார். 'ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன' (வெளி: 3:6) ஆமென் அல்லேலூயா! . கற்பனைகள் யாவும் நன்றல்லவோ - ஆ- ஆ- ஆ- ஆ கற்பனைகள் யாவும் நன்றல்லவோ அதைக் கடைப்பிடித்தாக வேண்டுமே . கீழ்ப்படிந்தவர்கள் அவருக்குச் சொந்த சம்பத்து அல்லவோ கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும் கீழ்படியாவிட்டால் சாபம் பெருகும் . சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே . காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது - ஆ- ஆ- ஆ கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய் வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே |