நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. - (எபிரேயர் 13:5). . பழங்காலத்து கதை ஒன்று உண்டு. ஒரு சேவலும், ஒரு எலியும், ஒரு முயலும் நண்பர்களாக ஒற்றுமையாக ஒரு வீட்டில் வசித்து வந்தன. அவை தங்கள் வேலைகளை சரியாக பங்கிட்டு, எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. சேவல், காட்டிற்கு சென்று, விறகுகளை பொறுக்கி கொண்டு வந்தும், எலி; பக்கத்திலிருந்த ஓடையில் தண்ணீரை கொண்டு வந்தும், முயலானது சமைத்தும் தங்கள் வேலையை ஒழுங்காக செய்து வந்தன. . ஒரு நாள் சேவல் விறகுகளை பொறுக்கி கொண்டு இருந்தபோது, ஒரு காகம் அதனிடம் வந்து, நீ என்ன செய்கிறாய் என்று கேட்டது. அப்போது சேவல் தான் செய்து வருகிற வேலையை சொன்னபோது, அந்த காகம், 'இது சரியே யில்லை, நீ பாவம் எத்தனை கடினமான வேலையை செய்கிறாய், மற்ற இருவரும் சுகமாக இலகுவான தங்கள் வேலைகளை செய்து வருகிறார்கள், நீ பாவம் உன்னை அவர்கள் ஏமாற்றுகிறார்கள்' என்று அதனிடம் மூட்டிவிட்டது. சேவல் தன் வேலையை தொடர்ந்தாலும், அதற்கு காகம் கூறின காரியத்தை மறக்க முடியவில்லை, அதை தொடர்ந்து சிந்தித்து, தான் உண்மையாகவே மற்றவர்களை காட்டிலும் அதிகமாக வேலை செய்வதாக நினைத்து, வீட்டிற்கு சென்றவுடன், கண்ணீரும் கம்பலையுமாக " இது அநியாயம், நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்கிறேன், நீங்கள் ஜாலியாக சின்ன சின்ன வேலைகளை செய்கிறீர்கள், எனக்கு தான் கடினமான வேலை, போதும், இனி நான் விறகு பொறுக்க போக மாட்டேன்" என்று கத்தியது. . அதிருப்தியும் கோபமும் அங்கு நிலவ ஆரம்பித்தது. முயலும் எலியும் கூட தாங்களும் மிக கடினமாக வேலைகளை செய்வதாகவும், இனி எந்த வேலையும் செய்ய போவதில்லை என்றும் முடிவெடுத்தன. இதற்காக வாதித்து, வாதித்து கடைசியாக ஒரு முடிவெடுத்தன. அதன்படி, சேவல், தண்ணீர் எடுக்கவும், முயல் விறகு பொறுக்கவும் எலி சமைக்கவும் முடிவெடுத்தன. . அடுத்த நாள், முயல் குதித்து, குதித்து விறகு பொறுக்க சென்றபோது, ஒரு நரி அதை தொடர்ந்து வந்து, அதன் மேல் பாய்ந்து அதை கொன்று சாப்பிட்டது. சேவல் தண்ணீர் எடுக்க ஓடைக்கு வந்தபோது, அதில் வந்த சுழியில் சிக்கி தண்ணீரில் மூழ்கி போனது, எலி சமைக்கும்போது, அதற்கு எட்டாதபடியால், எக்கி பார்த்தபோது, அதில் விழுந்து மரித்து போனது. . திருப்தியில்லாததால், அது அவர்களுடைய சந்தோஷத்தை குலைத்தது மாத்திரமல்ல, அவர்களுடைய வாழ்க்கையையே அழித்து போட்டது. . நாம் எல்லாருக்கும் செய்வதற்கென்று ஒரு வேலையை கர்த்தர் கொடுத்திருக்கிறார். அந்த வேலையில் நாம் உண்மையாக உத்தமமாக செய்ய வேண்டும். எந்த வேலையும் மற்ற வேலையை விட பெரிய வேலை கிடையாது. ஒரு மனிதனும் மற்ற மனிதனை விட பெரிய மனிதனும் இல்லை. அவரவருக்கு தேவன் தகுதிக்கேற்ப வேலையை கட்டளையிட்டிருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தை சுத்தப்படுத்துகிற மனிதன் வரவில்லை என்றால் எத்தனை அசொளகரியங்கள்! அவரவர் செய்ய வேண்டிய வேலையை அவரவர் தான் செய்ய வேண்டும். சாதாரண கிளர்க்காக இருந்து கொண்டு மேனேஜர் வேலையை தான் நான் செய்வேன் என்றால், அது நடக்க கூடிய காரியமா? தேவன் கொடுத்திருக்கிற வேலையில் திருப்தியாக இருந்து, அந்த வேலையை உத்தமமாக செய்ய வேண்டும் என்றே தேவன் எதிர்ப்பார்க்கிறார். சில வேளைகளில், நமக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு நம்மை விட அதிகபடியான சம்பளம் கிடைக்கலாம், அதற்காக நாம் நான் கொஞ்ச வேலையை மட்டும் தான் செய்வேன், அவன் என்னை விட அதிக சம்பளம் வாங்குகிறான், அவன் செய்யட்டும் என்று பொறாமையோடு இருந்தோமானால், தேவன் அதில் மகிழ்கிறவரல்ல, அவர் அவனுக்கு அந்த சம்பளத்தை கொடுப்பது அவரது சித்தம். மட்டுமல்ல, நாம் உண்மையாக நம் வேலையில் நேர்மையாக இருக்கும்போது, நமக்கு கிடைக்கும் சொற்ப சம்பளத்தையும் தேவன் ஆசீர்வதிப்பார். அது நிச்சயமாகவே அதிக சம்பளம் வாங்குகிறவனைவிட நிறைவானதாக இருக்கும். . 'நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே'. காகத்தை போன்று மற்ற தந்திரமானவர்கள் சொல்லும் காரியங்களுக்கு செவிகொடாதிருங்கள். உங்கள் வேலையிடத்தில் காணப்படும் சந்தோஷமான சூழ்நிலையை மாற்றி நரகமாக்கி கொள்ளாதிருங்கள். கொஞ்சத்திலும் சந்தோஷமாய் அனுபவிக்கிறவர்களாக நிறைவுள்ளவர்களாக வாழ தேவன் தாமே ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! . குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கின்றீர் நிறைவாம் பள்ளத்தாக்கில் மெதுவாக நடத்துகின்றீர் இறைவனாம் இயேசு எல்லாவற்றிலும் திருப்தியாக்குகிறீர் திருப்தியாக்குகிறீர் . ஓ இயேசு உமதன்பு எத்தனை பெரியது ஆகாயம் பூமி ஆழி மலைகளுக்கெல்லாம் பெரியது .
|