அதற்குள்ளாகப் படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது. இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். - (மத்தேயு 14:24-27). . கலிலேயா கடல் என்னும், கின்னரேத் கடல் அல்லது கெனசரேத் கடல் இஸ்ரவேல் தேசத்தில் உள்ளது. அதை சுற்றி இயேசுகிறிஸ்து தாம் வாழ்ந்த நாட்களில் அநேக அற்புதங்களை செய்தார். இது 13 மைல் நீளமும் 7 மைல் அகலமும் 150 அடி ஆழமும் உடையது. சமீபத்தில் நாங்கள் இஸ்ரவேல் சென்றிருந்தபோது, அந்த கடலில் படகு சவாரி செய்தோம். அது ஒரு ஆனந்த அனுபவமாக இருந்தது. நல்ல தண்ணீரால் நிரம்பியிருக்கிற 130 அடி ஆழமுள்ள இக்கடலில், எதிர்காற்றினால் படகு அலைமோதிக் கொண்டிருந்த நேரத்தில் இயேசுகிறிஸ்து அந்த கடலின் மேல் நடந்து வந்தார். அதை கண்ட சீஷர்கள் அது ஆவேசம் அல்லது பிசாசு என்று பயந்தார்கள். ஆனால் பேதுரு மாத்திரம் கடல் கொந்தளிக்கும் நேரமாயிருந்தாலும் கிறிஸ்து பக்கத்திலிருந்தால் அது பத்திரமான இடம் என்று அறிந்திருந்தார். ஒரு வேளை மற்ற சீஷர்கள் கீழ்கண்டவாறு நினைத்திருப்பார்களோ? . தோமா: இப்படி தண்ணீரின் மேல் நடப்பது சரீர பிரகாரமாக நடக்க முடியாத காரியம்! . மத்தேயு: பழைய ஏற்பாட்டில் எந்த தீர்க்கதரிசனமும் கடலின் மேல் நடப்பதைக் குறித்து வெளிப்படுத்தவில்லையே! . யோவான்: நான் இங்கு படகிலே இருப்பதையே விரும்புகிறேன். . பிலிப்பு: பேதுருவே நீர் போம், எங்களுக்கும் வழியை காட்டும். . யாக்கோபு: நான் யோவானுடன் படகிலேயே இருக்கிறேன். . யூதாஸ்: எனக்கு இதற்காக பணம் கொடுத்தாலொழிய நான் நடக்க மாட்டேன்! . இப்படி ஒவ்வொருவரும் பேசி கொண்டிருந்தார்களே தவிர யாரும் இயேசுவோடு கடலில் நடக்க விரும்பவில்லை. இன்றும் கர்த்தர் விசுவாசிகளின் வாழ்க்கையில் அற்புதங்களை நடப்பிக்கும்போது, அநேகர் இதுபோன்று பேசுகிறார்கள். ஆனால் விசுவாசத்தோடு, இயேசுகிறிஸ்துவின் வழிநடத்துதலோடு, நடக்க முடியாததை நடப்பித்து காட்டி, தங்கள் விசுவாசத்தை தேவன் மேல் வைத்து, சத்துருவுக்கு சவால் விடுபவர்கள் இன்று நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்? இடையில் நமது விசுவாசம் பேதுருவைப்போல தடுமாறினாலும், இயேசுவின் பலத்த கரம் நம்மை பிடித்து நிறுத்தி, நம்மை பத்திரமாக படகில் கொண்டு போய் சேர்க்கும். 'பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின் மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்' - (மத்தேயு 14:28-31). . சமீபத்தில் ஒரு வாசகர் அனுப்பியிருந்ததை, அதாவது ஒரு மனிதன் தண்ணீரில் நடப்பதை You Tube - ல் பார்த்தோம். மந்திரவாதியாகிய அந்த மனிதன், கண்களை கட்டி கொண்டு ஒரு நீச்சல் குளத்தில் நடந்து காட்டுகிறான். அலைகளினால் அடிபடும், எதிர் காற்று வீசும் கடலில் நடந்த ஒரே தேவன் இயேசுகிறிஸ்துவே. மற்றவர்கள் அவர் செய்ததை செய்ய முயற்சிக்கிறார்களே தவிர நடத்தி காட்டவில்லை. மோசே பார்வோனின் முன் நடத்தி காண்பித்த அற்புதங்களை அந்த நாட்டு மந்திரவாதிகளும் செய்து காண்பித்தார்கள். ஆனால், எல்லாவற்றையும் அல்ல, எகிப்தின் தலைச்சனைகளை சங்காரத்தூதன் அழித்தபோது, அந்த மந்திரவாதிகளின் பிள்ளைகளும் மரித்தார்கள். அதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லையே! . இயேசுகிறிஸ்து 'மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன்: நான் என் பிதாவினிடத்திற்கு போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்' - (யோவான் 14:12) என்று கூறினார். விசுவாசிகளுக்கு தான் அந்த சிலாக்கியமே தவிர மந்திரவாதிகளுக்கு அல்ல. . விசுவாசத்தோடு காத்தருடைய கரத்தை பிடித்து, கொந்தளிக்கும் அல்லது தாங்க முடியாத பிரச்சனைகளிலும், அவரையே நோக்கி பார்த்து நடப்போம். பிரச்சனைகளை பார்த்தால், பேதுரு அமிழ்நது போகும்போது கதறியது போல, நாமும் அதில் மூழ்கிவிட நேரிடும். ஆனால் பிரச்சனைகளை பார்க்காதபடி, அதன் தீர்வை கொடுக்கிற கர்த்தரையே நோக்கி பார்த்து, வெற்றியெடுப்போம். நான்தான் பயப்படாதிருங்கள் என்று சொன்னவர், நம்மை பிரச்சனைகளிலிருந்து மீட்டு பத்திரமாக கரை சேர்ப்பார். ஆமென் அல்லேலூயா! . அலைகடல் மேலே நடந்தவர் எங்கள் இயேசு அற்புதர் அகோர காற்றையும் அமைதிப்படுத்தின இயேசு அற்புதர் அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர் . |