உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய். - (பிரசங்கி 11:1). . ஒரு சுவிசேஷ துண்டு பிரதி மாபெரும் எழுப்புதலை உண்டாக்கியது. ஒன்பது மிஷனெரிகளை உலகிற்கு தர காரணமாயிருந்தது. தமிழ்நாட்டிலும் சிறந்த மருத்துவ பணி மூலம் சரீர சுகம் மட்டுமல்லாமல், ஆத்மீக சுகத்தையும பெற செய்தது. அது என்ன துண்டு பிரதி, யார் அதை படித்தார்? அதன்; மூலம் தமிழ்நாட்டில் மருத்துவ பணியா? . ஆம், ஒரு நாள் ஜான் ஸ்கடர் என்பவர் தனது நண்பரை பார்க்க ஓரிடத்தில் காத்திருந்தார். அப்போதுதான் அவர் கண்களில்பட்டது, அந்த துண்டு பிரதி! அதின்தலைப்பு 'உலகத்தின் மனந்திரும்புதல்'. கண்டதும் கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தார். தன் வாழ்வை இயேசுகிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். பின்நாட்களில் தன்னை ஊழியத்திற்கு அர்ப்பணித்தார்;. அவர் தனது ஏழு மகன்களையும் இரண்டு மகள்களையும் மிஷனெரி பணிக்கு அர்ப்பணித்தார். அவரது குடும்பத்திலுள்ள 43 பேர்களும் கிறிஸ்தவ பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்களே! . ஜான் ஸ்கடரின் பேத்திதான் நம் வேலூரில் C.M.C. மருத்துவமனையை நிறுவி மருத்துவ பணியோடு, சுவிசேஷ பணியையும் செய்த ஐடா ஸ்கடர் அம்மையார் ஆவார். தலைமுறை தலைமுறையாய் ஒரு குடும்பம் கிறிஸ்துவின் பணியை செய்து வருமாயின் அது சரித்திரத்திலேயே சிறந்த உதாரணம் தானே! ஒரு கைபிரதி ஒருவரை மாற்றியதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் இரட்சிப்பின் பாதையில் கடந்து வந்துள்ளனர். . தேவன் நமக்கு கொடுத்துள்ள கட்டளை 'நீங்கள் உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள' என்பதே. அப்படியென்றால் முழு நேர ஊழியர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு விசுவாசிக்கும் சுவிசேஷம் அறிவிக்கும் கடமையுள்ளது. ஊழியம் என்றதும் நம் நினைவிற்கு வருவது மேடை ஏறி மைக் பிடித்து பிரசங்கிப்பது மட்டும் தான். இதை நினைத்ததும் நாம் 'ஐயோ நான் மிகவும் பயந்தாங்கோளி நமக்கெல்லாம் இந்த ஊழியம் செய்ய முடியாது' என முடிவு கட்டி, இது முழு நேர ஊழியர்களின் வேலை என ஒதுங்கி விடுகிறோம். . நாம் தேவனுக்காக நம்மால் இயன்ற ஏதாவதொன்றை செய்யும்படி அழைக்கபட்டிருக்கிறொம். வேதம் சொல்கிறது, 'நீ செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ அதை முழு பலத்தோடு செய்' என்று. ஆம் நாம் செய்யும் காரியம் சிறியதோ, பெரியதோ, பிரம்மாண்டமானதோ, அற்பமானதோ எதுவாயினும் அதை முழு உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் செய்ய வேண்டும். அதையே தேவன் எதிர்ப்பார்க்கிறார். . நம் அனைவராலும் செய்யக்கூடிய ஒரு ஊழியமுண்டு. அது கைப்பிரதி கொடுத்து சுவிசேஷம் அறிவிக்கும் ஊழியம். இதில் உடனே எந்த வித விளைவையும் காண முடியாது ஆனால் நிச்சயமாக பரலோகில் காணலாம். எப்போதும் உங்கள் கையில் இதை வைத்திருப்பீர்களென்றால், பேருந்திலே, ரயிலிலே, வேலை ஸ்தலத்திலே, படிக்கும் இடங்களிலே சந்தையிலே கொடுக்கலாம். சிலவேளை பஸ்ஸில் நாம் இருந்துவிட்டு எழுந்திரிக்கும்போது, அந்த இடத்தில் டிராக்ஸ் எனப்படும் கைப்பிரதிகளை வைத்து விட்டு எழுந்து வரலாம். அங்கு அமர வருபவர்கள் அதை கையில் எடுத்து, என்னவென்று நிச்சயமாய் பார்ப்பார்கள். . ஆனால் அவைகளை கொடுக்குமுன், நாம் ஜெபித்திருக்க வேண்டும். 'இதை நான் கொடுக்க போகிறேன், கர்த்தாவே இதை பெறும் இந்த நபருடன் இடைபடும்' என சின்ன ஜெபம் செய்து விட்டு கொடுக்க வேண்டும். நாம் கொடுக்கும் டராக்ஸ் தெளிவாய், எளிய முறையில் இயேசுகிறிஸ்துவின் இரட்சிப்பை பற்றியதாக இருக்க வேண்டும். புறமதங்களை தாக்கும் வார்த்தைகள் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். முக்கியமாக வாங்குகிறவர்கள் படிக்கவும், படிப்பவர்கள் இருதயம் மாற்றப்படவும் கருத்தாய் ஒவ்வொரு நாளும் ஜெபிக்க வேண்டும். ஜெபமின்றி நாம் செய்யும் அனைத்தும் வீண் என்பதை மனிதில் கொள்ள வேண்டும். . ஒரு கைப்பிரதி ஒரு தலைமுறையினரையே மிஷனெரிகளாக உலகிற்கு தர காரணமாயிருந்துள்ளது, என்றால் நீங்களும், இந்த எளிய ஊழியத்தை செய்யலாமே! ஒரு சகோதரன், ஊழிய வாஞ்சை உள்ளவர், கிறிஸ்துவை பற்றி பகிரங்கமாக சொல்லக்கூடாத ஒரு நாட்டில் வேலைக்கு வந்தார். அவருக்கு எப்படியாகிலும் தான் காண்கிற ஒவ்வொரு புறமதத்தினருக்கும் கிறிஸ்துவை பற்றி சொல்ல ஆவல். அந்த நாட்டின் மொழியில் கை நிறைய டிராக்ஸ்களை எடுத்து கொண்டு, மருத்துவ மனைக்கு சென்று, அங்கு தனியாக நின்று வைத்தியருக்காகவோ, மருந்துக்காகவோ காத்து கொண்டிருக்கும் ஆட்களிடம் சென்று, ஆங்கிலத்தில், Don't worry, God loves you, He will heal you என்று சொல்லிவிட்டு, அவர்கள் கையில் ஒரு பிரதியை கொடுத்து விட்டு, வேகமாய் சென்று விடுவார். அவருடைய ஊழியம் ஒரு சவாலாக இருந்தது. (மாட்டினால் அவ்வளவுதான், ஆனால் கர்த்தர் அவரை காத்து கொண்டார், அவர் இப்போது அங்கு இல்லை, நம் நாட்டிற்கே வந்து விட்டார்). சுவிசேஷத்திற்கு தடை விதித்திருக்கும் அந்த நாட்டிலேயே அவர் அறிவித்தார் என்றால், சுதந்திரமான நம் நாட்டில் நாம் இந்த எளிய ஊழியத்தை செய்வதற்கு தடை ஏதுமில்லையே! . கர்த்தருக்கென்று எதையாவது செய்வோம். ஆத்துமாக்களை கர்த்தரிடம் கொண்டு வருவோம். உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய். ஆமென் அல்லேலூயா! . தரிசு நிலங்கள் அநேகம் உண்டு தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர் பரிசாக இயேசுவை அவர்களுக்கும் அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர் திறவுண்ட வாசல் அடைபடுமுன் நொறுங்குண்ட மனதாய் முன் செல்வோர் யார் நாட்கள் கொடியதாய் மாறிடுதே காலத்தை ஆதாயம் செய்திடுவோம் . |