ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்ளூ அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். - (மத்தேயு 10:29-31). . இந்தியாவில் ஒரு கிறிஸ்தவ வாலிப பெண் தான் வாழும் சமுதாயத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தாள். அவள் அழகாய் இருந்தாள். அவளை அவளுடைய சமுதாயம் நேசித்தது. அவளுக்கு திருமண நாள் குறிக்கப்பட்டது. அவளுக்கு திருமணமாக சில வாரங்களே இருக்கும்போது அவளுடைய கைகளில் ஒரு வித புண்கள் தோன்றியது. அதை சோதனை செய்த போது அவளுக்கு தொழுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவளுடைய இருதயம் சுக்கு நூறாக உடைந்தது. அந்நாட்களில் தொழுநோய் உள்ளவர்கள் மற்றவர்களுடன் சமுதாயத்தில் வாழ முடியாது. அவர்கள் அந்த நோய் உளளவர்கள் வாழுகின்ற ஒரு மையத்தில்தான் போய் வாழ முடியும். ஆகவே அவளது சகோதரன், அவளை அந்த மையத்திற்கு கொண்டு சென்ற போது, அந்த இடம் மிகவும் அழுக்காக, வாழ தகுதியில்லாத இடமாக, அங்கிருந்த பெண்கள் மிகவும் அழுக்கானவர்களாக, அவர்கள் புண்கள் நாற்றமெடுத்து, அந்த இடமே நரகமாக காட்சியளித்தது. அதை கண்ட அப்பெண் 'ஐயோ எனக்கு ஏன் இந்த நிலைமை! நானும் இவர்களை போல மாறிவிடுவேனோ? கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் எங்கே?' என்று தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். . அவள் மிகவும் சோர்ந்து போயிருந்ததால் அவள் தன்னையே மாய்த்து கொள்ளகூடும் என்று மற்றவர்கள் நினைத்தனர். அங்கு தொழுநோய் வியாதியஸ்தர் மத்தியில் ஊழியம் செய்யும் மிஷனரிகள் அவள் மேல் பரிதாபம் கொண்டனர். அவள் படித்தவளாய் இருந்தபடியால் அவளிடம் அங்குள்ள பெண்களுக்கு உதவுமாறு வேண்டினர். அப்போது அவளுடைய இருதயத்தில் ஒரு நம்பிக்கை தோன்றியது. இங்குள்ள மக்களை மாற்ற வேண்டும் என்கிற உந்துதல் அவளுக்கு ஏற்பட்டது, அதன்படி, அவள் மிஷனரிகளின் உதவியால் ஒரு பள்ளியை ஆரம்பித்து அங்கிருந்த பெண் நோயாளிகளுக்கு கற்று கொடுக்க ஆரம்பித்தாள். அவளுக்கு இசைகருவிகளை வாசிக்க அறிந்திருந்தபடியால் அவள் அப்பெண்களுக்கு கர்த்தரை துதிக்கும்பாடல்களை சொல்லி கொடுக்க ஆரம்பித்தாள். அவர்களுடைய தனிப்படட சுகாதாரத்தை குறித்து சொல்லி கொடுக்க ஆரம்பித்தாள். அந்த இடம் முழுவதையும் சுத்தபடுத்தவும், தங்களை தூய்மையாய் வைக்கவும் சொல்லி கொடுத்தாள். அந்த இடமே பரலோக இடமாக மாறியது! . சில காலங்கள் கழித்து அவள் சொன்னாள், ' நான் முதலில் இந்த இடத்திற்கு வந்த போது, கடவுளே இல்லை என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டடது. நான் ஒரு தொழு நோயாளியாயில்லாதிருந்தால் தேவன் எனக்கென்று வைத்திருந்த வேலையை அறியாமலே போயிருப்பேன். இன்று இத்தனை பெண்களுக்கு என்னை தேவன் ஆசீர்வாதமாக மாற்றியதற்காக தினமும் அவரை துதிக்கிறேன்' என்று மனம் நிறைந்து கூறினாள். . நீங்கள் கூட நினைக்கலாம், ஏன் அந்த காரியத்தை தேவன் ஏன் என் வாழ்வில் அனுமதித்தார் என்று! நிச்சயமாக அது மற்றவர்களுக்கு நீங்கள் ஆசீர்வாதமாக இருக்கும்படியாகவே தேவன் சில காரியங்களை நம் வாழ்வில் அனுமதிக்கிறார். உடனே அதை குறித்து நாம் அறியாதிருக்கலாம், ஆனால் அவருடைய சித்தமில்லாமல் நம் வாழ்வில் ஒன்றும் நடப்பதில்லை. . ஒரு வேளை நீங்கள் நினைக்கலாம் ஏன் நான் இந்த இடத்திற்கு வந்தேன், என் உறவினர்களும், என் சொந்தங்களும் சந்தோஷமாக இருக்கிறார்களே, நான் மட்டும் ஏன் இந்த இடத்தில் தனிமையாக என் நாட்களை கழிக்க வேண்டும்? என்று. யோசேப்பு தன் சகோதரர்களால், இஸ்மவேலரிடம் விற்கப்பட்டு, எகிப்தில் அடிமையாக கொண்டு செல்லப்ட்டபோது அவன் இருதயம் எப்படியாய் துடித்திருக்கும், 'என் தகப்பனை நான் மீண்டும் காண்பேனா? ஏன் எனக்கு இந்த நிலைமை' என்று. ஆனால் தேவன் அவனது சிறையிருப்பை மாற்றியது மாத்திரமல்ல, எகிப்து தேசம் முழுவதற்கும் அதிபதியாக மாற்றியதுமன்றி, அவனாலே அவனது குடும்பம் மட்டுமல்ல, எகிப்தும், அதை சுற்றியுள்ள நாடுகளும்கூட பஞ்சகாலத்தில் அவன் மூலம் உணவினாலே பராமரிக்கும்படியாக மாற்றினார். . தேவன் உங்களை கொண்டு வந்ததற்கும் ஒரு நோக்கம் உண்டல்லவா? உங்களால் அநேகர் ஆசீர்வாதத்தை அனுபவிக்கும்படியாக ஒரு வேளை நீங்கள் உங்கள் இடத்தில் இருக்கலாம்! உங்களால் முடிந்தவரை கடினமாய் உழையுங்கள், உண்மையாயிருங்கள். எதை செய்தாலும் ஸ்தோத்திரத்தோடு செய்யுங்கள். ஏன் இந்த நிலைமை என்று முறுமுறுக்காமல், தேவன் நீர் என்னை இந்த இடத்தில் கொண்டு வந்ததன் நோக்கததை நிறைவேற்றும் என்று தொடர்ந்து ஜெபியுங்கள். உங்களால் ஆயிரங்கள் ஆசீர்வாதத்தை காணட்டும். . அந்த பெண் ஏன் எனக்கு இந்த நிலைமை என்று நினைத்து தன் வாழ்வை முடித்திருந்தால், அந்த தொழுநோய் மையம், நம்பிக்கையற்ற மக்களால், ஏதோ உயிர் இருக்கும்வரை வாழ்வோம் என்று நடைப்பிணமாக வாழ்ந்திருப்பார்கள். ஆனால், தேவனுடைய அழைப்பிற்கு அவள் செவிகொடுத்தபோது, அவளை அந்த இடத்தில் தேவன் ஆசீர்வாதமாக வைத்தது போல நாம் இருக்கிற இடங்களில் தேவன் கொடுக்கும் அழைப்பை ஏற்று, அவருக்கென்று மற்றவர்களை ஆதாயப்படுத்தும்படி ஆசீர்வாதமாக இருக்க தேவன் தாமே ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக! . இந்த வேளையில் என் மனதை பாதித்த காரியம் ஒன்று இருப்பதால் இந்த இடத்தில் அதை எழுத துணிகிறேன். ஒரு சகோதரன், புதிதாக வேறு நாட்டிற்கு வந்து அங்கு வேலை செய்ய ஆரம்பித்தபோது, வேலை பளு அதிகமாக இருந்தபடியால், தன் வீட்டை நினைத்து, நான் என் ஊரிலே இருந்திருந்தால் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்க வேண்டாமே என்று நினைத்து வருந்த ஆரம்பித்தார். பணம் எவ்வளவோ செலவு செய்து, மற்ற நாட்டிற்கு வந்து தன் குடும்பத்தை எப்படியாவது கரை ஏற்ற வேண்டும் என்று வந்தவர், அங்குள்ள சூழ்நிலைகளை பார்த்து, திரும்பவும் என் ஊருக்கே செல்ல வேண்டும் என்று முடிவு செய்தவராக, தான் வேலை செய்யும் இடத்து எஜமானனிடம் என்னை ஊருக்கே அனுப்பி விடுங்கள் என்று மன்றாடினார். அந்த மனிதரோ, 'நான் இவ்வளவு பணம் கொடுத்து என் வேலைகளை செய்ய உன்னை எடுத்திருக்கிறேன் அது எப்படி உன்னை அனுப்ப முடியும்? என்று மறுத்து விட்டார். வேறு வழியில்லமல் அந்த வாலிபன், தனக்கு இரத்த வாந்தி வருகிறது என்று பொய் சொல்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று, அங்கு வைத்தியர்கள் சோதித்து, அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். மனம் சோர்ந்து போயிருந்த அந்த சகோதரனை உற்சாகபடுத்தி, 'உண்மையாய் உழையுங்கள், அந்த எஜமானன் மகிழ்நதால், அவர் உங்களை பளு குறைந்த இடததிற்கு மாற்றுவார்' என்று புத்தி சொல்லி அனுப்பினேன். . இன்று அநேகர் வெளிநாட்டில் (மத்திய கிழக்கு) நன்றாக சம்பாதிக்கலாம் என்று நினைத்து, எத்தனையோ பணத்தை ஏஜன்டிற்கு கொடுத்து வருகிறார்கள். ஆனால், அதன் பிறகு அவர்கள் படுகிற பாடுகள் சகிக்க முடியாதவை. எத்தனையோ பெண்கள், தப்பிக்கும்படியாக மூன்றாவது அல்லது நான்காவது மாடியிலிருந்து கீழே சாடி விழுந்து, எலும்பு முறிவினால், அங்கு இங்கு அசைய முடியாதபடி, ஆஸ்பத்திரியில் அவர்களை பார்க்ககூட யாரும் இல்லாதபடி துடிக்கிற மக்கள் ஏராளம். அநேகருக்கு வெளிநாட்டில் வேலைக்கு சென்றால், தங்கள் வறுமை நிலைமை மாறிவிடும் என்று எண்ணி, சரியான சான்றிதழ் பெறாத ஏஜன்டுகளிடம் விசா வாங்கி, வருகிறார்கள். ஆனால் அவர்கள் சந்திக்கும் உபத்திரவங்களுக்கு அளவே இல்லை. கர்த்தர் உங்களை ஒரு நல்ல இடத்தில் வேலையில வைத்திருந்தால் அதிலிருந்து வேறு இடத்திற்கு மாற வேண்டாம். அவருடைய சித்தத்திற்காக ஜெபியுங்கள். நல்ல முறையானபடி அரசாங்க அங்கீகாரம் பெற்ற ஏஜென்டின் மூலமாக வேலைக்கு முயற்சி செய்யுங்கள். இந்தியாவில் இருக்கும்போது, உங்களுக்கு மேனேஜர் வேலை, இவ்வளவு சம்பளம் என்று சொல்பவர்கள், வெளிநாட்டுக்கு வந்தவுடன், காரை துடைப்பதற்கும் அங்குள்ள மக்களுக்கு காப்பி போட்டு கொடுக்கும் வேலை செய்யவும் பயன்படுத்துவார்கள். புடித்தவர்களுக்கும் அந்த கதியே! உடனே திரும்ப முடியாத நிலைமையும், யாரும் உதவி செய்ய முடியாத நிலைமையும் ஏற்படும். ஆகவே யோசித்து எதையும் செய்யுங்கள். கர்த்தருடைய சித்தமில்லாமல் எதையும் செய்ய முற்படாதிருங்கள். கர்த்தர்தாமே உங்களுக்கு உதவி செய்வாராக! . திக்கற்றோராய் கைவிடேனே கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா யாதும் நேரிடா என் தலை முடியும எண்ணினீரே .
|