Friends Tamil Chat

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

23rd Sept 2014 - மோசேயின் நீண்ட பயணம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 செப்டம்பர் மாதம் 23-ம் தேதி - செவ்வாய்க்கிழமை
மோசேயின் நீண்ட பயணம்
........

கர்த்தர் உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற அந்த நல்ல தேசத்தில் நான் பிரவேசிப்பதில்லை என்றும் ஆணையிட்டார். - (உபாகமம் 4:21).

.

நாம் இந்த இடத்தில் ஒரு பரிதாபமான காரியத்தை காண்கிறோம். மோசே இஸ்ரவேல் புத்திரரை அருமையாக வழிநடத்தி வரும் வழியில், மிகவும் பொறுமையாக அவர்கள் முறுமுறுக்கும் எல்லா காரியத்திலும், அவர்கள் நிமித்தம் கர்த்தரிடம் மன்றாடி, அவர்கள் அழிந்து போகாதபடி அவர்களுக்காக திறப்பின் வாசலில் நின்று தேவனுடைய கோபம் ஜனங்களை அழித்து விடாதபடி அவர்களுக்காக ஜெபித்து வெற்றியை பெற்று தந்தபோதும், ஒரு சிறு காரியத்தில் கர்த்தருக்கு கீழ்ப்படியாமற் போனதினிமித்தம் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் காலடி எடுத்து வைக்கமுடியாதபடி போனது. "ஜனங்களுக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடினார்கள். "ஜனங்கள் மோசேயோடே வாக்குவாதம்பண்ணி: எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயிருக்கும். நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கே சாகும்படி, நீங்கள் கர்த்தரின் சபையை இந்த வனாந்தரத்திலே கொண்டுவந்தது என்ன; விதைப்பும், அத்திமரமும், திராட்சச்செடியும், மாதளஞ்செடியும், குடிக்கத்தண்ணீரும் இல்லாத இந்தக் கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன என்றார்கள்.

.

அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரைவிட்டு, ஆசரிப்புக்கூடாரவாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது. கர்த்தர் மோசேயை நோக்கி: நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார். அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான். மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச் செய்தார்கள்.

.

அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி, தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது. பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்" (எண்ணாகமம் 20:2-12).

.

தேவன் சபையோரை கூடிவரச் செய்து 'பேசுங்கள்' என்று கட்டளையிட்டிருக்க, மோசே சகல ஜனங்களுக்கும் முன்பாக, கோலை எடுத்து, இரண்டு முறை அடித்தார். தண்ணீர் புறப்பட்டு வந்தது. ஆனால், மோசேயும் ஆரோனும் கானானுக்குள் செல்லும் கிருபையை இழந்தார்கள். என்ன ஒரு பரிதாபம்! தேவன் மோசேயின் மூலம் தம் ஜனத்தை எகிப்திலிருந்து, பார்வோனின் கண்களுக்குமுன் அநேக அற்புதங்களை செய்து, கானானுக்குள் அழைத்து செல்லும் கிருபையை கொடுத்திருக்க, கோபத்தினால், தன்னையும் மறந்து, மோசே நிதானமாய் காரியத்தை செய்ய வேண்டிய மோசே, கர்த்தரோடு முகமுகமாய் பேசி கொண்டிருந்த மோசே, கண நேரத்தில் கீழ்ப்படியாமற் போனதினிமித்தம், தேவனுடைய வார்த்தையை விசுவாசியாமற் போய், அந்த மலையை கோலினால் அடித்ததினிமித்தம், சபையாரை கானானுக்குள் கொண்டு சென்று, மகிமை அடைய வேண்டிய மோசே, அதாவது மோசேக்கு சேர வேண்டிய மகிமை யோசுவாவுக்கு கிடைத்தது.

.

ஒரு வேளை நாமும் கர்த்தருக்காக வைராக்கியமாக எத்தனையோ காரியங்களை செய்து கொண்டிருக்கலாம். எத்தனையோ பேரை பரம கானானுக்கு நேராக வழிநடத்தி கொண்டிருக்கலாம், ஆனால் எவ்வளவோ பாடுகளை பட்டும், தேவன் விலக்கியிருக்கிற ஒரு காரியத்தில் கீழ்ப்படியாமற் போனால், நாம் பரம தேசத்தை குறித்து கண்டு கொண்டிருந்த, மற்றவர்களுக்கு காட்டி கொடுத்திருந்த பரம கானானுக்குள் பிரவேசிக்க வேண்டிய பாக்கியத்தை ஒரு வேளை இழக்க நேரிடலாம். என்ன ஒரு பரிதாபமான நிலை! நாம் நடத்திய மற்றவர்கள் கானானை சுதந்தரிக்கும்போது, நாம் அதை பார்க்க மட்டும் முடிந்து, அதற்குள் பிரவேசிக்க முடியாத நிலை வருமானால், அதை விட அபாக்கியமான நிலைமை வேறு எதுவும் இருக்க முடியாது!

.

கர்த்தருக்கு சிறு விஷயத்திலும் கீழ்ப்படிய கற்று கொள்வோம். "அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான்' (சங்கீதம் 106:33) என்று மோசேயை குறித் பார்க்கிறோம். ஒருவேளை விசுவாசிகள் உங்கள் மனம் புண்படும்படி பேசியிருந்தாலும், கர்த்தருக்குள் நிலைத்திருக்கிற நீங்கள், கர்த்தருக்கு ஊழியம் செய்கிற நீங்கள் பொறுமையை கைகொள்ள வேண்டும் என்றே தேவன் எதிர்ப்பார்க்கிறார். உதடுகளினால் பதறி பேசாமல், தேவனுக்கு கீழ்ப்படியாமற் போகாதபடி பொறுமையோடு கர்த்தருக்கு காத்திருந்தால், அவற்றை எதிர்கொள்ள வேண்டிய பெலனை தேவன் தருவார். தேவனுக்கு கீழ்ப்படியாமற் போனதினால், "கர்த்தர் உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற அந்த நல்ல தேசத்தில் நான் பிரவேசிப்பதில்லை என்றும் ஆணையிட்டார்" என்று மோசே அங்கலாய்போடு சொல்வதை காண்கிறோம். அவரால் பார்க்க மட்டும் முடிந்தது, ஆனால் பிரவேசிக்க முடியவில்லை. அந்த நிலைமை நமக்கு வராமல், தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் பொறுமையை தந்து, எல்லா விஷயத்திலும் அவருக்கு கீழ்ப்படிய கிருபை செய்வாராக!

.

உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து

உம்பாதம் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன்

தாரும் தேவா ஏழைக்கும் மாறாத உம் கிருபை

கண்பாரும் என்றும் நான் உம் அடிமை

.

ஆனந்தமாய் இன்பக்கானான் ஏகிடுவேன்

தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்

.

நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்

நாதன் இயேசு என்னோடிருப்பார்

.
ஜெபம்
எங்களை நேசித்து வழிநடத்தி வரும் நல்ல தகப்பனே, இந்த நாளை நாங்கள் காண தேவன் பாராட்டின கிருபைக்காக உம்மை துதிக்கிறோம் தகப்பனே. எத்தனையொ பேர் பரம கானானை அடைய விரும்பியும், அதை காண மட்டும் செய்து, பிரவேசிக்க முடியாமற் போயிருக்கிறார்கள் தகப்பனே. ஒரு சிறு கீழ்ப்படியாமற் போனதினிமித்தம், மோசேயும் ஆரோனும், கானானுக்குள் பிரவேசிக்க முடியாமற் போனதே, தகப்பனே நீர் எங்களுக்கு காட்டும் எந்த காரியத்திலும் நாங்கள் கீழ்ப்படிந்து, பரம கானானை சுதந்தரிக்க கிருபை செய்வீராக! நாங்கள் இந்த உலகில் படுகிற பாடுகள் போதும் தகப்பனே, நாங்கள் ஆனந்தமாய் இன்பகானான் வந்து தூய பிதாவாகிய உம்மை தரிசிக்க கிருபை பாராட்டும். எல்லா விஷயத்திலும் உமக்கு கீழ்ப்படிய கற்று தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.