அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள். - (ரூத் 1:16-17). . புதிதாய் திருமணமான தன் மகளை பார்க்க ஒரு தாய் அவர்கள் தங்கியிருந்த பண்ணைக்கு சென்றிருந்தார்கள். போனவுடனே, அந்த இடம் முழுவதையும் தான் பார்வையிடவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அந்த விவசாய கணவர் தன்னால் இயன்ற மட்டும் அந்த மாமியாரோடு தோழமையோடு இருக்க பார்த்தார். ஆனால் அவர்களோ, முரண்டு பண்ணி, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்து கேள்விகள் கேட்டு கொண்டிருந்தார்கள். தேவையில்லாத ஆலோசனைகளையும் சொல்லி கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார்கள். . அவர்கள் அப்படியே பார்த்து கொண்டு வந்து கொண்டிருந்தபோது, குதிரைகள் கட்டியிருந்த லாயத்திற்கு வந்தார்கள். அப்போது ஒரு குதிரை அந்த மாமியாரின் தலையில் ஓங்கி எட்டி உதைத்ததால் அவர்கள் தலை உடைபட்டு, அந்த இடத்திலேயே மரணமடைந்தார்கள். . சிலநாட்கள் கழித்து, நடந்த அடக்க ஆராதனையில் வந்த ஒவ்வொருவரிடமும் அந்த தம்பதியினர் பேசி கொண்டிருந்தனர், அப்போது, அந்த அடக்க ஆராதனையை நடத்திய போதகர், அந்த கணவரிடம் யாராவது பெண் வந்து பேசினால், அவர் ஆம் என்பது போல தலையை ஆட்டி பேசுவதையும், யாராவது ஆண் வந்த பேசினால், இல்லை என்று தலையை ஆட்டி ஏதோ பேசுவதையும் வெகு நேரமாக கவனித்து கொண்டிருந்துவிட்டு, மெதுவாக அந்த கணவரிடம் சென்று 'என்ன விஷயம்?' என்று கேட்டார். அப்போது அந்த கணவர், 'என்னிடம் பெண்கள், பாவம், என்ன ஒரு வருத்தமான செய்தி என்று சொல்லும்போது நான் ஆம் என்று சொன்னேன். ஆனால் ஆண்கள் வந்து என்னிடம் அந்த குதிரையை வாடகைக்கு கொடுக்க முடியுமா? என்று கேட்டபோது, அவர்களுக்கு இல்லை, ஒரு வருடத்திற்கு அந்த குதிரையை தொடர்ந்து வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள் என்று சொன்னேன்' என்று சொன்னார். . நாம் இது மாதிரி அநேக மாமியார் மருமகள் கதைகளையும், நாத்தனார் கதைகளையும் நம் ஊரில் கேட்டிருக்கிறோம். இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்களும் மிகவும் ஆசீர்வாதமானவர்களாகவும், மிகவும் உதவியானவர்களாகவும் சிலர் மிகவும் மோசமானவர்களாகவும் இருக்கிறார்கள். வேதத்தில் நாம் அநேக மாமனார் மருமகன்களையும் மாமியார் மருகமக்கள்மாரையும் பார்க்கிறோம். சிலர் நல்லவர்களாகவும் சிலர் நல்லவர்களாக இல்லாமல் இருந்ததையும் பார்க்கிறோம். யாக்கோபு பத்து முறை அவருடைய சம்பளத்தை மாற்றி, தந்திரமாக இரண்டாவது மகளுக்கு பதிலாக மூத்த மகளை திருமணம் செய்து வைத்த மோசமான மாமனாரான லாபானிடம் கஷ்டப்பட்டார். ஆனால் மோசே தனக்கு நல்ல ஆலோசனை கொடுத்து, அவருடைய பாரத்தை குறைத்த நல்ல மாமனாரான எத்திரோவினால் ஆசீர்வாதம் பெற்றார். . வேதத்தில் அருமையான ஒரு மாமியார் மருமகள் உறவைக் குறித்து பார்க்கிறோம். அதுதான் நகோமியும் ரூத்தும். இவர்களின் உறவு எல்லாரும் வியக்கும் வண்ணம் இருந்தது. மருமகள் மிகவும் அன்புடன் தன் மாமியாரிடம் கூறும் இந்த வசனம் எல்லாரையும் ஆச்சரியப்பட வைக்கும். அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள். இத்தனைக்கும் கணவர் மரித்து போனார். ஆனாலும் தன் மாமியாரை பற்றிக் கொண்ட ரூத் மிகவும் ஆசீர்வாதத்தை பெற்று கொண்டார்கள். இயேசுகிறிஸ்து அவளுடைய சந்ததியில் பிறக்கும் படியாக அவர்கள் பெரிய பாக்கியத்தை பெற்றார்கள். மட்டுமல்ல, தாவீது இராஜாவிற்கும் கொள்ளு பாட்டியாக மாறினார்கள். அவர்கள் கூறிய இந்த வார்த்தைகள் அநேக திருமணங்களில் இன்றளவும் சொல்லப்படுகிறது. . கிறிஸ்தவ மாமியார் மருமகள் இடையே எந்த பிரச்சனையும் வர நாம் அனுமதிக்கக் கூடாது. எந்த நாத்தனார் பிரச்சனையும் வர நாம் அனுமதிக்க கூடாது. முடிந்தவரை சமாதானமாயிருக்க முயற்சிக்க வேண்டும். மாமியாருக்கு ஏற்ற கடமைகளை செய்யும்போது அவர்கள் மனம் குளிர்ந்து ஆசீர்வதிப்பது குடும்பத்திற்கு நல்லது. நிச்சயமாக நகோமி தன்னைவிட்டு பிரியாத அந்த மருமகளான ரூத்தை ஆசீர்வதித்திருப்பார்கள். அதனால் உலகமே புகழும் வணங்கும் தெய்வமாகிய இயேசுகிறிஸ்துவை தன் சந்ததியில் பெற்று பெரிய பாக்கியத்தை ரூத் பெற்றார்கள். . உங்கள் மாமியாருக்காக மாமனாருக்காக நாத்தனாருக்காக மற்ற உறவினர்களுக்காக கர்த்தரை துதியுங்கள். அந்த உறவை கொடுத்தது தேவனல்லவா? வயதான மாமியாரையும் மாமனாரையும் கண்ணீர் விட வைக்கக்கூடாது. அவர்களை ஆதரிக்க வேண்டும். அவர்களை கரிசனையோடு நடத்த வேண்டும். அவர்கள் இளவயதில் என்னை என்ன கொடுமை படுத்தினார்கள் தெரியுமா? ஆகவே நான் இப்போது அவர்களை இப்படி நடத்துகிறேன் என்று கிறிஸ்தவர்கள் சொல்ல கூடாது. அப்படி நடத்தவும் கூடாது. மாமியார் மெச்சும் மருமகளாக, மருமகனாக இருந்து கர்த்தரின் ஆசீர்வாதத்தை பெற்று கொள்வோம். . இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு அன்பு நிறைந்திடும் இடம் உண்டு இன்பம் உண்டு சமாதானம் உண்டு வெற்றி உண்டு துதிபாடல் உண்டு இராஜாதி இராஜா இயேசு என்றென்றும் ஆண்டிடுவார் . |