மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான். - (மத்தேயு 13:45,46) . . இயேசுகிறிஸ்து கூறின இந்த உவமையில் விலையுயர்ந்த முத்தை குறித்து நாம் காண்கிறோம். இதில் ஒரு வியாபாரி தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று ஒரு முத்தை வாங்குகிறான். நாம் உலகத்தில் உள்ள விலையுயர்ந்த கற்களை பார்க்கும்போது, வைரம்தான் மிகவும் விலையேறப்பெற்றதாக இருக்கிறது. ஆனால் இந்த இடத்தில் முத்தை அந்த வியாபாரி விலையுயர்ந்ததாக காண்கிறான். . இயேசுகிறிஸ்துவும் பரலோகத்தில் தமக்குள்ள எல்லா வசதிகளையும், எல்லா அதிகாரங்களையும், தம் தகப்பனின் பக்கத்தில் இருப்பதையும் விட்டு, விலையுயர்ந்த முத்தாகிய உங்களுடைய என்னுடைய ஆத்துமாக்கள் இரட்சிப்பை பெற்றுக்கொள்ளும்படியாக இந்த உலக்திற்கு வந்தார். ஏன் கர்த்தர் ஒரு வைரத்தையோ, அல்லது வானளவிற்கு விலை உயர்ந்து வரும் தங்கத்தையோ குறித்து சொல்லாமல், முத்தை குறிப்பிடுகிறார்? . உங்களுக்கு தெரியுமா? வைரமானது நான்கு விதமான 'C' க்களைக் கொண்டுதான் அதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. அவை Cut, Color, Clarity & Carat-weight ஆகும். அதாவது அதை வெட்டுகிற பாணி, அதன் நிறம், அதனுடைய தெளிவு மற்றும் அதன் எடை இவைகளை கொண்டுதான் அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு மனிதனின் கைவண்ணம் அதனுடைய முக்கியத்துவத்திற்கு தேவைப்படுகிறது. மனிதன் செய்யும் கைவண்ணமாக அதன் விலையில் ஏற்றகுறைவுகள் உண்டாகிறது. . ஆனால், முத்து அப்படியல்ல, இயற்கையாகவே அது விலையேறபெற்றதாக காணப்படுகிறது. உலகத்தின் விலையுயர்ந்த கற்களில், முத்து மாத்திரமே இயற்கையாக கிடைக்கிறது. அதை வைத்து, ஆபரணம் செய்யும்போதும் அது இருக்கிறவண்ணமாகவே செய்யப்படுகிறது. . அதைபோலத்தான் நம் இரட்சிப்பும் நம்முடைய கைவண்ணம் எதுவும் இல்லாமல், நம்முடைய முயற்சி எதுவும் இல்லாமல், நமக்கு கிடைக்கிறது. அதற்காக நம் தேவன் மிகப்பெரிய கிரயத்தை செலுத்தியிருக்கிறார். தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். மகிமையின் தேவனாகிய கிறிஸ்து, பரலோகத்தின் மகிமையை விட்டு அந்த விலையேறப்பெற்ற முத்தாகிய உங்களையும் என்னையும் தமக்கு சொந்தமாக்கி கொள்ள இந்த பாவ உலகத்திற்கு இறங்கி வந்தார். நாம் கொடுக்கும் எந்த விலையுயர்ந்த காரியங்களையும்விட விலையுயர்ந்த எந்த பொருட்களையும் விட மிகவும் விலையுயர்ந்த, மாசற்ற, குற்றமற்ற தம்டைய சொந்த இரத்தத்தையே கிரயமாக செலுத்தி, விலையெறப்பெற்ற முத்தாகிய நம்மை தமக்கு சொந்தமாக்கி கொண்டார். 'கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்' - (1 கொரிந்தியர் 6:20) என்று பார்க்கிறோம். . அன்பு சகோதரனே சகோதரியே, இந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பை பெற்றிருக்கிறீர்களா? அந்த வியாபாரி தனக்கிருந்த எல்லாவற்றையும் விற்று அந்த விலையுயர்ந்த முத்தை வாங்கினதுபோல, இயேசுகிறிஸ்து தமக்கிருந்த மகிமை எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்து, விலையுயர்ந்த முத்தாகிய நம்மை தம்முடைய சொந்த இரத்தத்தை சிந்தி விலைக்கிரயம் கொடுத்து வாங்கியிருக்கிறாரே! அதை உணர்ந்தவர்களாக நம்முடைய வாழ்க்கையை கர்த்தருக்கு ஒப்புகொடுத்திருக்கிறோமா? விலையுயர்ந்த உங்கள் ஆத்துமா கர்த்தருக்கு சொந்தமாயிருக்கிறதா? இல்லை, சத்துருவுக்கு சொந்தமாயிருக்கிறதா? உங்களை மீட்பதற்காக அவர் கொடுத்த விலைகிரயம் மிகவும் அதிகம். நம்மால் அதை எந்த கிரயம் கொடுத்தும் வாங்க முடியாது. நம்மால் நம் சொந்த கிரியைகளினால், ஆத்தும இரட்சிப்பை பெற்று கொள்ளவும் முடியாது. இந்த உலகத்தில் அநேகர் நினைக்கிறார்கள், தங்கள் ஆத்துமா இரட்சிக்கப்படுவதற்கு அவர்கள் மிகவும் உழைக்க வேண்டும், பரலோகம் செல்வதற்கு தங்களுடைய சொந்த முயற்சி வேண்டும் என்று நினைக்கிறார்கள். இல்லை, நம்முடைய கிரியைகள் நமக்கு இரட்சிப்பை தராது. தங்கள் சரீரங்களை காயப்படுத்தி, இரத்தம் சிந்த வைத்து, தங்களை வருத்தி கொண்டால்தான், தங்களுக்கு பரலோகம் கிடைக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். கர்த்தர் நம் ஆத்தும இரட்சிப்பை மிக எளிதாக வைத்திருக்கும்போது, அதை அறியாதவர்களாக மனிதன் அங்குமிங்கும் அதை தேடி அலைந்து திரிகின்றான். . 'இருக்கின்ற இடம் விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்து திரிகின்றார்; ஞான தங்கமே' என்று பழைய கால புலவர் ஒருவர் பாடியுள்ளார். கர்த்தருடைய இரட்சிப்பு மிகவும் எளிதானது. அதை தேடி ஓடி எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இருக்கின்ற இடத்திலேயே முழங்கால்படியிட்டு, 'தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும். நான் பாவி என்று ஒத்து கொள்கிறேன். எனக்காக உமது ஒரே பேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வந்து, தம் சொந்த இரத்தத்தை சிந்தி அதனால் என் பாவங்களை கழுவி சுத்திகரித்தார் என்று விசுவாசிக்கிறேன். அவரை என் சொந்த இரட்சகாராக ஏற்று கொள்கிறேன். இயேசுவே என் உள்ளத்தில் வாரும். என் பாவங்களை மன்னியும். நீரே என் ஆண்டவராக இருந்து என் வாழ்க்கையை நடத்தும்' என்று ஜெபிக்கும்போது, அவர் உங்கள் பாவங்களை மன்னித்து, உங்களை ஒரு விலையுயர்ந்த முத்தாக ஏற்று கொண்டு, உங்கள் உள்ளத்தில் வந்து வாசம் பண்ணுவார். மனுஷன் உலக முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அதினால் அவனுக்கு லாபம என்ன? என்று வேதம் கேட்கிறது. உங்கள் ஆத்தும இரட்சிப்பு மிகவும் விலையுயர்ந்ததாக இருப்பதால், நீங்கள் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டு, பரலோக ராஜ்ஜியத்திற்கு உங்களை ஆயத்தப்படுத்தி கொள்ள தேவன் தாமே உங்களுக்கு கிருபை செய்வாராக. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! . வானத்தின் கீழே பூமி மேலே வானவர் இயேசு நாமம் அல்லால் இரட்சிப்படைய வழியில்லையே இரட்சகர் இயேசு வழி அவரே வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவுன்னை .
|