நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான். - (எஸ்தர் 4:14). . ஒரு மனிதர் தன் வேலையிடத்திற்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறு பையன் அவரிடம் வந்து காசு கொடுக்கும்படி கேட்டான். அவர் அவனை போய் வேலை செய்து சம்பாதிக்கும்படி கூறினார். அந்த சிறுவன், 'நான் போய் கேட்ட இடத்திலெல்லாம் மற்றவர்கள் வந்து, நாங்கள் இந்த இடத்திற்கு உரியவர்கள், அவனுக்கு கொடுக்காதீர்கள், எங்களுக்கு கொடுங்கள் என்று சொல்லி அந்த வேலையை வாங்கிப் போய் விடுகிறார்கள். அப்படியும் கஷ்டப்பட்டு கிடைத்த வேலையை நான் முடித்து பணத்தை பெற்றுக் கொண்டவுடன், ஒரு ஆள் வந்து என்னை அடித்து, அந்த பணத்தை எடுத்துக் கொண்டுப் போய் விட்டான். எனக்கு ஏதாவது வேலை தாருங்கள், நான் அதை முடித்தவுடன் எனக்கு காசு தந்தால் போதும் எனக்கு பசிக்கிறது' என்று கெஞ்சினான். . ஆனால் அந்த மனிதரோ, 'உங்களைப் போன்ற ஆட்களுக்கு காசு கொடுத்து பழக்கினால், நீங்கள் சோம்பேறி ஆகிவிடுவீர்கள். போ, எங்காவது மூட்டை தூக்கி பிழைத்துக் கொள்' என்று அதட்டினார். அவனோ, 'என் அப்பாவும், அம்மாவும் இறந்துப் போனதால்தான் நான் வேலைக்கு வந்தேன். எனக்கு சாப்பிடுவதற்கு மட்டும் ஏதாவது கொடுங்கள்' என்று கெஞ்சினான். அதற்குள் பஸ் வந்துவிடவே அந்த மனிதர் ஒன்றும் கொடுக்காமல் பஸ்ஏறி புறப்பட்டார். . பஸ்ஸில் ஏறி போகும்போது பார்த்தபோது, அந்த பையனை ஒரு முரட்டு ஆள் அடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ஐயோ அந்த பையனுக்கு உதவி செய்யாமல் வந்து விட்டோமே என்று உள்ளுணர்வு சொன்னாலும், அதை கேட்காதபடி அவர் போய் விட்டார். . சாயங்காலத்தில் அதே வழியாக வந்தபோது, ஒரு கூட்டம் கூடியிருந்தது. இவர் என்ன என்று கேட்டபோது, ஒருவர், 'யாரோ ஒரு சிறுப்பையனாம், செத்துக்கிடக்கிறான்' என்று கூறினார். இவர் கூட்டத்தை தள்ளிவிட்டு, உள்ளே சென்று போய் பார்த்தபோது, அதே சிறுவன்! இவருடைய உள்ளத்தில் ஆயிரம் இடிகள் இடித்தது போலிருந்தது. 'ஐயோ இந்த பையன் வேலை கொடுங்கள், பின்பு காசு பெற்றுக் கொள்கிறேன் என்றுதானே சொன்னான், அவனுக்கு உதவாமல் போனதினால், அநியாயமாய் மரித்துப் போய் விட்டானே' என்று மிகவும் துக்கப்பட்டார். அவரது இருதயத்திலிருந்து அந்த நிகழ்ச்சி வெகுநாள் மறையவே இல்லை. . பிரியமானவர்களே, நம்மை சுற்றிலும் வாழ்கிற மக்கள் அநேகர் கர்த்தரை அறியாதபடி ஒவ்வொரு நாளும் மடிந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பாவத்தின் பரிகாரி இயேசுகிறிஸ்துவே என்று அறியாதபடியால், அவரிடம் வராமல், வேறு என்னென்னவோ செய்து, தங்கள் பாவம் போக்கப்படும் என்று நம்பி, அதிலேயே வாழ்ந்து மறைந்து கொண்டிருக்கிறார்கள். . ஒருவேளை அந்த சிறுவனுக்கு தன் வேலையிடத்திலோ, தனக்கு தெரிந்தவர்களிடத்திலோ ஒரு சிறு வேலை வாங்கி கொடுத்திருந்தால், ஒரு நல்வழியை காட்டியிருந்தால், அந்த சிறுவன் பிழைத்திருப்பான். வாழ்ந்திருப்பான். ஆனால் ஒன்றும் செய்யாமல் போய் விட்டபடியால், அவனது சடலத்தையே அவரால் பார்க்க முடிந்தது. அதற்குப்பின் அவர் எத்தனை கதறினாலும், எத்தனை வேலை வாங்கி தருவதாக கூறினாலும், அவரால் அவனை திரும்ப கொண்டுவரவே முடியாது. . நாமும் கூட கர்த்தரே வழி சத்தியம் ஜீவன் என்றும், அவராலேயன்றி இரட்சிக்கப்படுவதற்கு வேறு வழியில்லை என்றும் மற்றவர்களுக்கு வழியைக் காட்டி கொடுத்தாலே போதும், கர்த்தர் மற்றவற்றை பொறுப்பெடுத்துக் கொள்வார். அதை நாம் நம்மேல் விழுந்த கடமையாக எடுத்துக் கொள்ளவேண்டும். நாம் அதை செய்யாத பட்சத்தில், அவர்கள் கிறிஸ்துவை அறியாமலேயே மரிக்கும்போது, பின் நாம் எத்தனை முறை கதறினாலும், கிறிஸ்துவை அறிவியாமற் போனேனே என்று வருந்தினாலும் ஒன்றும் செய்ய முடியாது. . எஸ்தரிடம் மொர்தெகாய் எச்சரித்தது அதுதான், 'நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்'. எஸ்தரே உனக்கு இராஜ மேன்மை கிடைத்தது என்று சந்தோஷமாக மற்றவர்களை மறந்து நீ ஜீவித்தால், யூதருக்கு இரட்சிப்பு வேறு இடத்திலிருந்து கர்த்தர் அனுப்புவார். நீ அவர்களுக்கு உதவும்படியாகத்தான் ஒருவேளை உனக்கு இந்த இராஜ மேன்மை கிடைத்திருக்கலாம் என்று எச்சரித்தார். அதன்படி எஸ்தர் தன் ஜனத்தை மறவாதபடி அவர்களுக்காக தன் ஜீவன் போனாலும் பரவாயில்லை என்று நின்றபடியால் யூத ஜனங்களுக்கு ஆமானின் சதி திட்டத்திலிருந்து விடுதலை கிடைத்தது. . நமக்கு கிடைத்திருக்கும் மேன்மைக்கூட ஒருவேளை நாம் நம் ஜனத்திற்காக கர்த்தரை அறிவிக்க வேண்டும், கர்த்தருக்காக வாழ வேண்டும் என்று கர்த்தர் கொடுத்திருக்கலாம். நமக்கு கர்த்தர் கொடுத்திருக்கிற இடத்தில், குடும்பத்தில், சபையில், சமுதாயத்தில் அவருக்காக நிற்கும்போது, சாட்சியாக இருக்கும்போது, கர்த்தரை அறிவிக்கும்போது, அநியாயமாய் ஜனம் மரிக்காது. நித்தியத்தின்மேல் நம்பிக்கையோடு அவர்கள் செல்வார்கள். . இரட்சிப்பு அவர்களுக்கு வேறு இடத்திலிருந்து வராதபடி, நம் தேவன் அந்த இடத்தில் வைத்ததன் நோக்கத்தை நாம் நிறைவேற்றும்படி, கர்த்தரை அறிவிப்போம், கர்த்தருக்கு சாட்சி சொல்வோம். அவருக்காக வாழ்வோம். நம் ஜனத்தை தேவன் சந்திக்கும்படி மன்றாடுவோம். அவர்களும் நித்திய இராஜ்யத்தை அடையும்படி தேவன் கிருபை செய்யும்படி ஜெபிப்போம். கர்த்தர் அவர்களை இரட்சிப்பார். பரலோகத்தை அவர்கள் நிரப்புவார்கள். ஆமென் அல்லேலூயா! . இந்தியர் இயேசுவை அறிந்திடும் காலம் இதுதான் இதுதானே இந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால் இரட்சிப்புதான் வருமோ? .. அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால் அறுவடை இழப்பாயே ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால் இரட்சிப்புத்தான் வருமோ . இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் மௌனமாயிருக்காதே |