ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது. - (நீதிமொழிகள் 24:10). . ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு பெண்ணின் மேல் ஒரு கரப்பான் பூச்சி வந்து அமர்ந்தது. அதைக் கண்டவுடன் அவள் கத்தி கூப்பாடு போட ஆரம்பித்தாள். பெண்கள் அருவருக்கிற பூச்சி இந்த கரப்பான் பூச்சியாகும். உடம்பை உதறி தன் மேலிருந்த பூச்சியை பயத்தோடு தள்ளிவிட்டபோது, அது பக்கத்தில் இருந்த மற்றொரு பெண்ணின் மீது விழுந்தது. . அந்த பெண்ணும் அதே மாதிரி கத்தி, ஆர்ப்பாட்டம் பண்ணி, தன் மீது இருந்த பூச்சியை தள்ளிவிட்டாள். அது அங்கு உணவு பறிமாறிக் கொண்டிருந்த சர்வர் மேல் விழுந்தது. அதைக் கண்ட அந்த சர்வர் அந்த பெண்கள் போல கூப்பாடு போடவில்லை. ஆர்ப்பாட்டம் பண்ணவில்லை. அது சரியாக தான் கையில் பிடிக்கும் இடத்திற்கு வந்தவுடன், அதை கையில் பிடித்து வெளியேக் கொண்டுப் போய் நசுக்கிவிட்டு வந்தார். . பிரியமானவர்களே, அந்த சர்வர் செய்ததையும், அந்த பெண்கள் செய்ததையும் பார்க்கும்போது, எந்த ஒரு ஆபத்தானதோ, பயப்படக்கூடிய சூழ்நிலை வரும்போது, நாம் எப்படி அதை கையாளுகிறோம் என்பது எத்தனை முக்கியம் என்று சிந்திக்க ஆரம்பித்தேன். அந்த சர்வர் நிதானமாய் செயல்பட்டதுப்போல நாம் செயல்படுவோம் என்றால் பாதிக்கு மேல் பிரச்சனையே நம் வாழ்வில் இருக்காது. . ஒரு வேளை நாம் வேலை செய்யும் இடத்திலோ, நம் குடும்பத்திலோ யாராவது நம்மிடம் சத்தம் போட்டு விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். நாமும் திரும்ப சத்தம் போட்டு, பெரிய குழப்பத்தை உண்டுப்பண்ணுவதற்குப் பதில் அமைதியாக அதை கையாளுவோமென்றால் இன்னும் அதிக பிரச்சனை வராதபடி காத்துக் கொள்ள முடியும். . விசுவாசிக்கிறவன் பதறான் (ஏசாயா 28:16) என்று வசனம் கூறுகிறது. கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, அமைதியாக நம் காரியங்களை செய்வோமானால், நாம் செய்த நன்மையை மற்றவர்கள் தீமையாக எடுத்துக் கொண்டாலும், கர்த்தர் அவர்களோடு இடைப்பட்டு, தங்கள் தவறை உணரச் செய்வார். பதறிப் போய் நாம் வாய்க்கு வாய் பேசி, பிரச்சனையை அதிகப்படுத்துவோமானால், அதினால் லாபம் யாருக்கும் இல்லை. தேவையற்ற மனச்சங்கடங்களும், விரோதங்களும், சண்டைகளுமே ஏற்படும். நம் விசுவாசம் எந்த அளவு இருக்கிறது என்பதும் தெரிந்து விடும். . நம் வாழ்வில் என்ன சூழ்நிலை வந்தாலும், அதை நாம் அமைதியாக கையாளும்போது, கர்த்தர் நமக்கு துணையாக இருந்து நாம் வெற்றி எடுக்க உதவி செய்வார். பதறிப் போவோமானால் எல்லாமே தலைகீழாக மாறிவிடும் அபாயம் உண்டு. ஆகவே கர்த்தரை சார்ந்து, விசுவாசத்தில் ஊன்றக் கட்டப்பட்டு, நிதானமாக, அமைதியாக நடந்துக் கொள்ள தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை தருவாராக. ஆமென் அல்லேலூயா! . விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான் . கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே சுத்தர்களாய் மாறிடவே சுதன் அருள் புரிந்தனரே |