அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார். - (லூக்கா 5:3). . இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் இருந்தபோது, மூன்று வகையான ஊழியங்களை செய்து வந்தார். போதித்தல், பிரசங்கித்தல், சுகப்படுத்துதல் ஆகிய மூன்று ஊழியங்களையும் தாம் சென்ற இடங்களில் செய்து வந்தார். . நம்மிடம் யாராவது சொந்த ஊர் எது என்றுக் கேட்டால், நாம் பிறந்த ஊரையாவது, வளர்ந்த ஊரின் பெயரையாவது சொல்வோம். ஆனால் கிறிஸ்து தம்முடைய பட்டணம் என்று சொன்னது தாம் பிறந்த ஊரையுமல்ல, வளர்ந்த ஊரையுமல்ல, அவர் பிறந்த ஊர் பெத்லகேமாக இருந்தாலும், வளர்ந்த ஊர் நாசரேத் ஆக இருந்தாலும் கப்பர்நகூமையே அவரது பட்டணம் என்று சொன்னார். 'அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்' (மத்தேயு 9:1). ஏனெனறால் அந்த பட்டணத்திலிருந்தவர்களே அவரை ஏற்றுக் கொண்டார்கள். அதனால் அந்த பட்டணம் அவருடைய பட்டணமாயிற்று. இஸ்ரவேலில் உள்ள கப்பர்நகூமிற்கு உள்ளே நுழையும்போது, Town of Jesus என்றே அங்குள்ள பெரிய கதவில் எழுதப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவ பெயரை வைத்திருப்பதினால் அல்ல, பெற்றோர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதினால் அல்ல, அவரை ஏற்றுக் கொண்டவர்களே அவருக்கு சொந்தமாகிறார்கள். அல்லேலூயா! . இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியத்தை ஆரம்பிக்கும்போது, அவா கலிலேயா கடலருகே நிற்கும்போது, அநேகர் அவர் சொல்வதை கேட்கும்படி நெருக்கினார்கள். அதனால் அவர் ஒரு படகின் மீது ஏறி, போதகம் பண்ணலாம் என்று சொல்லி, அந்த படகின் சொந்தக்காரராகிய பேதுருவிடம், கொஞ்சம் படகை உள்ளே தள்ளச் சொன்னார். இயேசுகிறிஸ்து போதகம் செய்ய தெரிந்துக் கொண்ட இடம், ஒரு நாற்றம் எடுத்த படகு. ஏன் நாற்றம் எடுத்த படகு என்றால் சீமோன் பேதுரு ஒரு மீனவராயிருந்தார். அவர் மீன்களை பிடித்து அந்த படகில்தான் வைத்துக் கொண்டு வரவேண்டும். இயேசு அந்தப்படகில் தான் ஏறி, பிரசங்கத்தை ஆரம்பித்தார். . இந்த நாளின் பிரசங்கிகளுக்கும் அவருக்கும்தான் எத்தனை வித்தியாசம்! இந்த நாளில் பிரசங்கி பீடத்திற்கு இலட்சக்கணக்கில் செலவழிக்கிறார்கள். விதவிதமான கலர்களில், புகை வரும்படி செய்து, ஜிலுஜிலு என்று உடைகளை அணிந்து, அப்பப்பா எத்தனை பாவனை? எத்தனை மினுமினுப்பு! . கிறிஸ்து பேதுருவின் படகில் ஏறி அவரை படகை சற்றே தள்ளும்படி கேட்டுக் கொண்டார். பேதுருவும் அப்படியே கீழ்ப்படிந்தார். அங்கிருந்து மக்களுக்கு போதனை செய்த ஆண்டவர், முடித்தவுடன் பேதுருவின் நிலை அறிந்த கிறிஸ்து, படகை ஆழத்திற்கு கொண்டு சென்று வலையைப் போடுங்கள் என்று சொன்னார். அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லைளூ ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள் (லூக்கா 5:5-6). . சீமோன் பேதுரு ஒரு மீனவராக இருந்தார். அவருக்கு எந்த நேரத்தில் எந்த இடத்தில் மீன்கள் கிடைக்கும் என்று நன்றாகத் தெரியும். ஆனாலும் கர்த்தரிடத்தில் வாக்குவாதம் பண்ணாமல், நீர் சொல்கிறபடியே போடுகிறேன் என்று சொன்ன போது, வலை கிழியத்தக்கதாக மீன்களை பிடித்தார்கள். அல்லேலூயா! . சீமோன் பேதுரு கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வலையை வீசி, அநேக மீன்களை பிடித்தபோது, 'சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான் (8ம்வசனம்).அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்' (10ம் வசனம்). ஆம், அப்படியே பேதுருவை மனுஷர்களை பிடிக்கிறவராய் கர்த்தர் மாற்றினார். . ஒன்றுமறியாத பேதுரு, மீனவராயிருந்த பேதுரு செய்த முதல் பிரசங்கத்தில் 3000 பேர் இரட்சிக்கப்பட்டார்கள், அடுத்த முறை செய்த பிரசங்கத்தில் ஐயாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள். அல்லேலூயா! . கர்த்தருடைய வார்த்தைக்கு நாம் கீழ்ப்படிவோமானால், கர்த்தர் நம்மையும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக வைப்பார், மாற்றுவார். நம்முடைய பெலனையோ அறிவையோ நாம் நம்பினால் ஒரு வேளை அதிகமாய் பிரயாசப்பட்டும் மீனவனராயிருந்த பேதுருக்கு ஒரு மீனும் கிடைக்காததுப் போல நம்முடைய எந்த தேவையும் கூட ஒருவேளை சந்திக்கப்பட்டிருக்க முடியாது. ஆனால் கர்த்தரை சார்ந்து, அவருடைய வார்த்தைக்கு முதலிடம் கொடுத்து நம் வாழ்வையும், எந்த காரியத்தையும் செய்வோமானால், எல்லாவற்றிலும் வெற்றி நமக்கே! . கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவோம், நம்மைக் கொண்டு ஆயிரமாயிரமான பேர்களுக்கு ஆசீர்வாதமாக கர்த்தர் மாற்றுவார். ஆமென் அல்லேலூயா! . என் ஞானம் கல்வி செல்வங்கள் எல்லாம் ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன் என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே உணர்ந்தேன் என் இயேசுவே . அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அனுக்கிரகம் தர வேண்டுமே என்னால் ஒன்றும் கூடாதையா எல்லாம் உம்மால் கூடும் |