உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். - (சங்கீதம் 121:3). . நாம் அனைவரும் நம் பிள்ளைகளை நேசிக்கிறோம். நாம் சம்பாதிப்பதே அவர்களுக்காகத்தான் என்று சொல்லுகிறோம். நாம் தான் அனுபவிக்கவில்லை, நம் பிள்ளைகளாவது அனுபவிக்கட்டுமே என்று அவர்கள் கேட்டதெல்லாம் வாங்கி தருகிறோம். நல்ல படிப்பை தருகிறோம். எல்லாம் சரிதான். ஆனால் அவர்களோடு நாம் செலவிடும் நேரம் தான் மிகவும் குறைவு. அவர்களோடு நாம் குறைவாகவே பேசுகிறோம். குறைவான நேரங்களே பழகுகிறோம். எனவே தெரிந்தோ, தெரியாமலோ நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் இடையில் ஒரு கணிசமான இடைவெளி ஏற்பட்டு விடுகிறது. . அவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாம் சொல்லுகிறோம். ஆனால் நாம் அவர்களுக்கு எப்படியிருக்க வேண்டும் என்ற நமக்கு தெரிவதில்லை. பிள்ளைகளிடம் ஒரு பெலவீனத்தையோ, ஒரு குறைவான சுபாவத்தையோ காண நேரிடும்போது அவர்களை கண்டிக்கவும், தண்டிக்கவும் முந்துகிறோம். அவர்களை புரிந்து கொண்டு அவைகளை மென்மையான முறையில் அகற்றுவதற்கு நமக்கு பொறுமையில்லை. எனவே அவர்கள் தங்களில் பெலவீனத்தையும், கறைகளையும் மாற்றுவதற்கு பதிலாக நமக்கு தெரியாமல், மறைத்து கொள்கிறார்கள். ஒரு முறை என் மகன் சிறுவயதாயிருக்கும்போது, எங்களிடம் வந்து, டீச்சர் என்னை அடித்து விட்டார்கள் என்று சொன்னான். அவன் முதுகில் பிரம்பால் அடித்த தழும்பு இருந்தது. உடனே பெற்றோராகிய நாங்கள் புறப்பட்டு, தலைமை ஆசிரியரிடம் போய் முறையிட்டோம். அவர்கள் அந்த ஆசிரியையை கூப்பிட்டார்கள். அந்த ஆசிரியை வந்து அவனிடம், 'நான் உன்னை அடித்தேனா' என்று கேட்டபோது, அவன் 'இல்லை, நீங்கள் அடிக்கவில்லை, நான் கீழே விழுந்து விட்டேன்' என்று சொன்னான். எங்களுக்கு முகத்தை எங்கு வைப்பது என்று தெரியவில்லை. அப்போது அந்த டீச்சர் எங்களை பார்த்து, 'நீங்கள் உங்கள் மகனை என்ன காந்தி என்று நினைத்து கொண்டிர்களா பொய்யே சொல்லாமல் இருப்பதற்கு? நீங்கள் அடிப்பதால், திட்டுவதால் அவன் உங்களிடம் பொய் சொல்கிறான். ஆகவே அதிகமாக கண்டிக்காதீர்கள்' என்று எச்சரிக்கை விட்டு சென்றார்கள். ஆகவே நாம் அதிகமாய் கண்டிக்கும்போது பிள்ளைகள் அவைகளை மறைப்பதற்காக பொய் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அவர்களிடம் அங்கே போகாதே, இங்கே போகாதே என்று தடையுத்தரவு பிறப்பிக்கிறோம். ஆனால் நம்மிடம் அவர்கள் வரத்தக்கதாக நாம் அவர்களோடு பழகுவதில்லை. . பல பிள்ளைகளுக்கு வெளியே ஏராளம் நண்பர்களுண்டு. வீட்டிலோ அவர்களுக்கு நண்பர்களில்லை. அவர்கள் வீட்டிற்குள் உம் என்று முகத்தை வைத்து கொண்டிருக்கிறார்கள். வெளியே போய் விட்டாலோ முகமெல்லாம் குதூகலமாய் பிரகாசிக்கிறது. அவர்கள் உடல் வீட்டிற்குள் உலாவினாலும், உள்ளமோ வீட்டிற்கு வெளியே உலா சென்று கொண்டிருக்கிறது. . சிறுவயதுகளிலே பிள்ளைகள் நம்மோடு அதிகமாக பேச விரும்புகின்றார்கள். நம்மிடம் பல காரியங்களை கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகின்றார்கள். நம்மிடம் மட்டுமே தங்களின் சிறுபிள்ளைத்தனமான கேள்விகளை கேட்க விரும்புகின்றனர். சிறுவயதுகளிலே தாய் தந்தையின் உறவிலும் ஐக்கியத்திலும் பேச்சு வார்த்தைகளிலும் மட்டுமே அதிக திருப்தியையும், பாதுகாப்புணர்ச்சியையும் உணர்கின்றார்க்ள. சிறுவயதுகளிலே அவர்களிடம் நாலு வார்த்தைகள் அன்பாய் பேசி விட்டால் அவர்களின் மகிழ்ச்சி அளவில்லாமல் போய் விடுகிறது . பல பிள்ளைகள் வாலிப வயதுகளை எட்டும் முன்பே தங்கள் தவறான பழக்க வழக்கங்களினாலும், தகாத உறவுகளினாலும், ஆகாத நடக்கைகளினாலும் பெற்றோரின் மனதை புண்படுத்துகின்றார்கள். பெற்றோரின் உள்ளம் வருந்துவதும், உடைக்கப்படுவதும் அவர்களுக்கு சாதாரணமான விஷயமாக உள்ளது. பெற்றோரின் மனம் துன்புறுவதை குறித்து அவர்களுக்கு கவலையில்லை. பெற்றோரின் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிற அளவிற்கு பெற்றோரும், பிள்ளைகளும் உணர்வு பூர்வமாக நெருங்கி வராமையும் இதற்கு முக்கிய காரணமாகும். பிள்ளைகளோடு நண்பர்களை போல நெருங்கி வாழ்ந்து அவர்களை நேசித்தால்தான் நம்முடைய மனம் புணபடுவது அவர்களுக்கு பெரிய விஷயமாயிருக்கும். பெற்றோர் மனம் புண்பட எதையும் செய்ய கூடாது என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும். . ஆம் எல்லாவற்றையும் விட விலையேற பெற்றவை நேரம் தான். அந்த நேரங்கள் தான் பிள்ளைகளுக்கும் மிகப்பெரிய தேவையாக உள்ளது அதனை ஒரு நஷ்டமாக எண்ணவே வேண்டாம். பிள்ளைகளின் நல்ல உறவையும் ஐக்கியத்தையும் இழப்பதை விட பணத்தையோ, பொருளையோ இழப்பது பெரிய நஷ்டமேயில்லை. நம்மை அவர்களுக்கு எடுத்துகாட்டாக வைப்போம். நாம் அவர்களை ஏதாவது செய்ய சொன்னால் நாம் முதலில் அவற்றை அவர்கள் கண்களுக்கு முன்பாக செய்வோம். அதை காண்கிற பிள்ளைகள் அவர்களும் அதை செய்ய பழகுவார்கள். பிள்ளைகளோடு நண்பர்களை போல பழகுவோம். அவர்களுக்கென்று நேரத்தை ஒதுக்குவோம். அப்போது பிள்ளைகள் வெளியே நண்பர்களை தேடி போகாமல், வீட்டிலே பெற்றாரோடு சந்தோஷமாக இருப்பார்கள். அப்படியே நம் பிள்ளைகள் நம் பந்தியை சுற்றி ஒலிவமர கன்றுகளை போல இருக்கும்படியாக தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென் அல்லேலூயா! . மனைவி கனிதரும் திராட்சை செடி பிள்ளைகள் ஒலிவ கன்றுகள் போல் இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள் இடைவிடாமல் ஜெபிப்பார்கள் கர்த்தரை நம்பிடும் பேறுபெற்றோர் சீயோன் மலைபோல் உறுதியுடன் அசையாமல் இருப்பார்கள் . |