மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; (லூக்கா 6:37) . சமீபத்தில் ஒரு கோவிலில் காணிக்கையாக போடப்பட்டிருந்த தங்க செயின் இரண்டை ஒருவர் யாருக்கும் தெரியாமல் திருடி விட்டார். ஆனால் அங்கே பொறுத்தப்பட்டிருந்த கேமரா அதை காட்டிவிட்டது. உடனே காவலாளர்கள் அவரை பிடித்து விட்டார்கள். அவரது முகம் வேர்த்து, தான் பிடிக்கப்பட்டோமே என்கிற வருத்தம் முகத்தில் அப்படியே தெரிந்தது. அதை செய்தியில் வெளியிட்டு, டெலிவிஷன் செய்தியிலும் போட்டு, உலகமெங்கும் பரப்பி விட்டார்கள். ஒருவேளை அவரிடம் தனிமையாக கேட்டு விசாரித்து, தண்டித்திருந்தால் அவர் திருந்தியிருப்பார். இப்போது உலகமே அவரை திருடன் என்ற பட்டத்தை கட்டிவிட்டது. அந்த மனிதரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. . அதைப்போல ஒரு சகோதரன் ஒரு தவறான காரியத்தை செய்வதை நாம் அதை கண்கூடாக பார்த்தோம் என்று வைத்துக் கொள்வோம். உண்மையிலேயே அது மிகப்பெரிய தவறாக இருக்கலாம். அந்த தவறினை பிறரிடம் ஏன் சொல்ல கூடாது? இவருடைய குற்றத்தை பலருக்கு தெரிவித்து ஏன் சரியாக பாடம் கற்பிக்க கூடாது? இப்படி ஒரு தவறினை இவர் எப்படி செய்யலாம்? என பல கேள்விகள் நமக்குள் எழும்புகின்றது. . ஆனால் அதே தவறை நாம் செய்தோம் என்று வைத்துக் கொள்வோம், இப்போது நாம் குற்றவாளி. இந்த நிலையில் நம்மைக் குறித்து பலரிடம் சொல்வதை நாம் விரும்புவோமா? நமக்கு சரியான பாடம் கற்பிக்க எண்ணுகின்ற ஒருவரின் செயலை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் முடியுமா? நிச்சயம் அதை விரும்ப மாட்டோம் அல்லவா? அதே வேளையில் ஒருவர் தனியாக நம்மிடம் வந்து நம் தவறினை மென்மையாக சுட்டிக்காட்டி திருந்தும்படி கூறினால் அந்த நபரை நாம் மனசாட்சியின்படி நல்ல மனிதர் என்று கூறுவோம். . இப்போது பிறரிடம் தவறுகளையும் குறைகளையும் காணும்போது, நாம் ஏன் அப்படி ஒரு நல்ல மனிதராக இருக்கக்கூடாது? . விபச்சாரத்தில் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட பெண்ணை எல்லாரும் கல்லெறிய தயாராக நின்றார்கள். அவர்களோடு சேர்ந்து இயேசுகிறிஸ்துவும் கல்லெறியவில்லை. மாறாக அவர்களிடமிருந்து அவளை தப்புவித்தார். அதே வேளையில் அவளுடைய தவறை சுட்டிக் காட்டி இனி இதுப்போல செய்யாதே என்று கூறினார். . பிறருடைய தவறுகளை காணும்போது, நாம் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று எண்ணிவிடக் கூடாது. ஏதாவது ஒரு சூழ்நிலையில் தவறக்கூடிய இயற்கை சுபாவம் உடையவர்கள்தான் நாம். எனவே பிறர் தவறை மற்றவர்களிடம சொல்லி, அதில் மகிழ விரும்பாமல், பக்குவமான மனநிலையுடன் நடந்துக் கொள்ள வேண்டும். . ஒரு குறிப்பிட்ட தவறினை பலருக்கு விளம்பரம் செய்வதால் அவர்களுக்கு ஏதாவது பிரயோஜனம் உண்டா என்று சிந்திக்க வேண்டும். அநேகர் தங்களது தவறுகைள உணர்ந்து திருந்த நினைக்கின்றனர். ஆனால் அதற்குள் அந்த தவறுகள் அனைவருக்கும் விளம்பரப்படுத்ததுப்பட்டடு விட்டதால், ஆயுள் முழுவதும் வருந்தத்தக்க பல நஷ்டங்க்ள நேரிட்டு விடுகிறது. வெகு ஜனங்களை பாதிக்கின்ற அல்லது அநேகரை இடறிப் போக தூண்டுகின்ற தவறுகள் உண்டு. அவைகள் வெகு ஜனங்களுக்கு அறிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்தான். ஆனால் அப்படியில்லாத பட்சத்தில் சிறுசிறு தவறுகளையும் பிறரிடம் கூறி அவரது பெயர் தூற்றப்படுவதால் அந்த ஆத்துமாவை புண்படுத்துவதுடன், வாழ்வையே நாம் கெடுத்து விடுகிறோம். . பிரியமானவர்களே, உலகத்தில் எல்லாம் சரியானபடி செய்கிற உத்தமனோ, நீதிமானோ ஒருவரும் இல்லை. அனைவரும் ஏதாவது ஒரு வகையில் தவறு செய்கிறவர்களே! நாம் இரட்சிக்கப்பட்டிருந்தாலும், இந்த பாவ உலகத்தில் இருப்பதால், நம்மை பாவம் செய்ய தூண்டும் காரியங்கள் அதிகமாகவே இந்த உலகத்தில் இருக்கிறது. அதனால்தான் 'அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்' என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. ஆகையால் மற்றவர்களுடைய தவறுகளை நாம் மற்றவர்களுக்குக்கூறி அவர்களையும் இடறல் அடைய செய்யாதபடி, கர்த்தருக்கு பயந்து, தேவையற்ற தூற்றி திரிவதை விட்டுவிடுவோம். நமது இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுவோம். ஆமென் அல்லேலூயா! . கோணலும் மாறுபாடுமான உலகத்தில் குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம் இராஜா வருகிறார் விரைவில் வருகிறார் ஆயத்தம் ஆயத்தமாவோம் |