பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். - (லூக்கா 22:42). . ஒரு மனிதருக்கு ஒரு வியாதி இருந்தது. அந்த வியாதி நீங்கும்படி அவர் தேவனிடத்தில் ஒரு முறை ஜெபித்தார். ஆனால் தேவன் அமைதியாக இருந்தார். இரண்டாவது முறையும் ஜெபித்தார். அவருடைய ஜெபம் கேட்கப்படவில்லை. மூன்றாம் முறையும் அந்த வியாதி நீங்கும்படி ஜெபித்தார். அப்போதும் அவருடைய ஜெபம் கேட்கப்படவில்லை. கடைசி வரை அவருடைய வியாதி நீக்கப்படவே இல்லை. . 'நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்' (யோவான் 16:23) என்று இயேசுகிறிஸ்து கூறினாரே, பின் அவரிடம் ஜெபித்தும் ஏன் அவர் கேட்டது அவருக்கு கிடைக்கவில்லை? அவருடைய விசுவாசம் குறைந்து காணப்பட்டதோ? அவருடைய பாவம் அவர் ஜெபத்தை கேட்காதபடி தடை செய்ததோ? அவர் மனமார ஜெபிக்கவில்லையோ? . இது எதுவும் இல்லை. ஏனெனில் அந்த வியாதிப்பட்டிருந்த மனிதர் விசுவாசத்தைக் குறித்தும், சபையைக்குறித்தும் அநேக நிருபங்களை எழுதிய பவுல் அப்போஸ்தலனே ஆவார். 'அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்' (2 கொரிந்தியர் 12:7-9) என்று பவுல் அப்போஸ்தலன் தன்னுடைய நிலையைக் குறித்து விளக்குகிறார். . அவர் ஏன் சுகமடையவில்லை என்றால், அவர் தன்னை பெருமைப்பட்டு உயர்த்தாதபடிக்கும், கிறிஸ்துவின் வல்லமை அவர்மேல் தங்கும்படிக்கும் அவருடைய ஜெபம் கேட்கப்படவில்லை. பவுலுக்கு தேவனிடத்திலிருந்து 'என் கிருபை உனக்கு போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்' என்று பதில் வந்தபோது, 'ஏன் ஆண்டவரே, நான் உமக்காக ஊழியம் செய்கிறேனே, ஏன் ஜெபத்தை கேட்கவில்லை, எத்தனையோ பாடுகளுக்கு நடுவே நான் உண்மையாக உமக்கென்று சாட்சியாக இருக்கிறேனே, என்னையே நீர் குணப்படுத்தவில்லையே' என்று கேள்வி மேல் கேள்வி கேட்கவில்லை, தேவன் என் ஜெபத்தைதான் கேட்கவில்லை, மற்றவர்கள் எனக்காக ஜெபித்தால் அவர் கேட்பார் என்று மற்றவர்களிடம் ஜெபிக்க சொல்லி கேட்கவில்லை. தேவன் கொடுத்த பதிலில் திருப்தி அடைந்து, அந்த பலவீனத்தை மனப்பூர்வமாய் அனுபவித்தார். . நாம் சுகமாயிருப்பதே தேவனுடைய சித்தம் என்றாலும், சில வேளைகளில் நாம் வியாதிப்பட்டும், அநேகர் ஜெபித்தும் நம் ஜெபம் கேட்கப்படவில்லை என்றால், அது ஒருவேளை தேவன் நம் வாழ்வில் அவருடைய வல்லமையை ஒவ்வொரு நாளும் நாம் அனுபவிக்கும்படியாக அனுமதித்திருப்பார். . அநேக ஊழியர்கள் தங்கள் வியாதிகளின் மத்தியிலும், வேதனைகளின் மத்தியிலும் கர்த்தருக்காக எழும்பி பிரகாசித்ததுண்டு. உதாரணத்திற்கு சகோதரன் தினகரன் அவர்களை நாம் சொல்லலாம். அவருடைய கூட்டங்களில் அநேகர் சுகமடைந்தாலும், அவர் சுகவீனமாய் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. பவுலைப் போல அவரும் அதை மனப்பூர்வமாய் சகித்தவராக ஊழியத்தை செய்தார் என்பது உண்மை. . பாஸ்டர் மோசஸ் ராஜசேகர் அவர்களும் தன்னுடைய பெலவீனத்தின் மத்தியிலும் அருமையான பாடல்களை பாடி கர்த்தரை மகிமைப்படுத்தினார். இப்படி எத்தனையோ பரிசுத்தவான்கள் தங்களுடைய குறைகள் மத்தியிலும் அவைகளை மனப்பூர்வமாய் சகித்து, தேவனுக்கென்று உண்மையாக இருந்தார்கள். ஏன் இப்படி என்று கர்த்தரை குறை சொல்ல முடியுமா? இல்லை சொல்ல முடியாது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், 'ஆண்டவரே உம்முடைய சித்தம் என் வாழ்வில் நிறைவேறட்டும்' என்று ஜெபிப்பதுதான். அதைத்தான் தேவனுடைய குமாரானாயிருந்தும், கிறிஸ்துவும் ஜெபித்தார். 'பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது' என்று ஜெபம்பண்ணினார் (லூக்கா 22:42). . பிரியமானவர்களே, நாம் வியாதியிலும், வேதனையிலும் இருந்து தத்தளிப்பது கர்த்தருடைய சித்தம் அல்ல. நாம் சுகமாயிருப்பதே அவருடைய சித்தம். ஆனால் சில வேளைகளில் நம்மில் சிலர் சுகவீனப்பட்டு, எத்தனையோ முறை ஜெபித்தும், அநேகர் நமக்காக ஜெபித்தும் நம் வியாதி மாறவில்லை என்றால், ஒருவேளை கர்த்தருடைய சித்தம் நம் வாழ்வில் நிறைவேறும்படியாக அந்த வியாதியை கர்த்தர் அனுமதித்திருக்கலாம். அப்போது மனம் சோர்ந்து போய் விடாதபடி, உம்முடைய சித்தம் என் வாழ்வில் நிறைவேறட்டும் என்று அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிக்கும்போது, அவர் நம் வாழ்வில் மகிமைப்படுவார். அதை தாங்கிக் கொள்ளும் சக்தியை தருவார். ஆமென் அல்லேலூயா! . தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன் தேவ சத்தம் என்னுள்ளில் பலமாக தொனிக்குதே . கஷ்டமெல்லாம் தொலையும் ஓர்நாள் கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள் திராணிக்கு மேல் சோதித்திடார் தாங்கிட பெலனளிப்பார் |