நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். - (கலாத்தியர் 6:9). . ஒரு மனிதர் புதிதாக ஒரு இடத்திற்கு செல்லும்போது, யாரும் இல்லாத தனிமையான இடத்தில் ஒரு கால்வாயில் அவர் சென்ற கார் மாட்டி கொண்டது. அதிர்ஷடவசமாக அந்த வழியாக சென்ற ஒரு குதிரை ஓட்டுனர், தன் 'தானி' என்ற குதிரையை கொண்டு வந்து, உதவி செய்ய முன் வந்தார். குதிரையை காரில் கட்டிவிட்டு, 'நல்லி காரை இழு' என்று சத்தமிட்டார். தானி நகரவில்லை. பின், அவர் 'லானி காரை இழு' என்று சத்தமிட்டார். அப்போதும் தானி நகரவில்லை. பின் 'சானோ காரை இழு' என்று சத்தமிட்டார். அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை. கடைசியில் 'தானி காரை இழு' என்று சொன்னப்பின் தானி காரை பிடித்து இழுக்க கார் வெளியே வந்தது. அதை கண்ட கார் ஓட்டுனர், 'நீர் என்னன்னவோ பெயர்களை சொல்லி அழைத்தும் குதிரை நகரவில்லையே' என்று கேட்டார். அப்போது, குதிரையின் சொந்தக்காரர், 'நீங்க ஒன்னு, இந்த குதிரைக்கு கண் தெரியாது. நான் மற்ற குதிரைகளின் பெயர்களை சொல்லி அழைத்தபோது, இந்த குதிரை தான் மட்டும் தனியாக இழுக்கவில்லை. இன்னும் நாலு பேர் கூட இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் காரை இழுத்தது, ஆனால் தான் மட்டும்தான் காரை இழுக்கிறோம் என்று தெரிந்தால் இது காரை இழுத்திருக்காது' என்று கூறினார். . நம்மில் அநேகர் அந்த தானி என்ற குதிரையை போலத்தான் இருக்கிறோம். நாம் மட்டும் தான் அந்த வேலை செய்கிறோம் என்று தெரிந்தால் நாம் அதில் ஈடுபடவே மாட்டோம். உதாரணத்திற்கு, 'ஆலயத்தில் யாரும் கண்டு கொள்ளவே இல்லை, நான் மட்டும் ஏன் என் நேரத்தையும் முயற்சியையும் எடுத்து அந்த காரியத்தை செய்ய வேண்டும்' என்று நம்மில் அநேகர் எந்த காரியத்தையும் ஆலயத்திற்கென்று செய்வதில்லை. . 'நான் அந்த மனிதரிடம் பேசினால், எந்த பிரயோஜனமும் இல்லை. அந்த மனிதர் என்னிடம் பேசுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நான் மட்டும் ஏன் போய் வலிய பேச வேண்டும்' என நினைக்கிறோம். . எலியா தீர்க்கதரிசி யேசபேலுக்கு பயந்து, ஓரேப் பர்வதத்தில் ஒளிந்து கொண்டிருக்கையில், தேவனிடம் 'நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்' என்று முறையிட்டான். (1இராஜாக்கள் 19:10). ஆனால் தேவன் அவனிடம் சொன்னது என்ன, 'நீ மாத்திரம் தனியாக இல்லையப்பா. இன்னும் ஏழாயிரம் பேர் இருக்கிறார்கள்' என்று கூறினார். ஆனால் நாம் செய்ய வேண்டிய காரியங்களை செய்ய மாட்டாதபடி, 'நான் மாத்திரம் தான் தனியாக இருக்கிறேன், வேறு யாரும் என்னோடு இல்லை, எத்தனைதான் நான் செய்வது' என்று தேவனிடம் முறையிட்டு கொண்டிருக்கிறோம். . அந்த தானியைப் போல, எலியா தீர்க்கதரிசியைப் போல மற்றவர்கள் செய்து கொண்டிருக்கிற காரியங்களை அறியாதபடி நாம் ஒரு வேளை குருடாய் இருக்கலாம். ஒரு வேளை நாம் மாத்திரம் தான் கர்ததருக்காக செய்து கொண்டிருக்கிறோம் என்று வைத்து கொண்டாலும் எது நன்மையானதோ அதை தொடர்ந்து செய்ய வேண்டும். சோர்ந்து போகக்கூடாது. நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக. நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆமென் அல்லேலூயா! . ஒரு வேளை நீங்கள் தேவனுக்காக செய்கிறதை யாரும் பார்க்கவில்லை, அல்லது யாரும் பாராட்டவில்லை என்று நினைக்கிறீர்களா? மனிதன் பார்க்காவிட்டாலும் எல்லாம் அறிந்த 'எல்ரோயி' நம்மை காண்கிற தேவன், அவருக்காக நீங்கள் படும் பாடுகளை, எடுக்கும் முயற்சிகளை அறிந்தவராயிருக்கிறார். அவர் ஒரு போதும் கண்சாடையாய் விட்டுவிடுகிறவரல்ல. நீங்கள் கர்த்தருக்காக செய்யும் காரியங்களுக்கு நிச்சயமான பலனை தேவன் ஏற்ற வேளையில தருவார். ஆகையால் நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக! . ஒரு வேளை ஏன் மற்றவர்கள் செய்யட்டும், நான் ஏன் என் நேரத்தை செலவிட வேண்டும்? எனக்கு குடும்பம் உண்டு, எனக்கு ஏகப்பட்ட வேலை உண்டு என்று தட்டிக்கழிப்போமானால், கர்த்தரால் யாரைக்கொண்டாகிலும் தமக்கு வேலை செய்ய வைக்க முடியும் என்பதை அறிந்து கொள்வோம். ஆனால் நமக்கு வரவேண்டிய ஆசீர்வாதம் தடைபடும் என்பதையும் அறிந்து கொள்வோம் . யாரோ செய்யட்டும் எனக்கென்ன - நான் நலமாய் இருந்தால் அது போதும் என்றே சுயமாய் வாழ்வதினாலே பின்னால் நீயும் வருந்திடுவாயே என்று உணர்வாயோ இன்றே வா |