கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர் - (ஏசாயா 25:4) . ஒரு மான் தன் குட்டியை ஈனும் நேரம் வந்தது. அதற்காக ஒரு நல்ல இடத்தை தேடி, அதிக புல் இருக்கும் இடத்திற்கு வந்தது. தொடர்ந்து அதற்கு கர்ப்பவலியும் வர ஆரம்பித்தது. அதே நேரத்தில் வானத்தில் கருமேகங்கள் கூடி, இடிஇடித்து, மின்னல் ஏற்பட்டு, அதனால் அந்த மான் இருந்த காட்டில் மின்னல் பாய்ந்து, காட்டுத்தீ பரவ ஆரம்பித்தது. . அதே நேரத்தில் ஒரு சிங்கம் அந்த மானை நோக்கி அடியெடுத்து வர ஆரம்பித்தது. மறுபக்கம் பார்த்தால் ஒரு வேடன் தன் வில்லை மானின் மேல் எய்வதற்கு தயாராக இருக்கிறான். அந்த நேரத்தில் அந்த மானினால் என்ன செய்திருக்க முடியும்? ஒரு பக்கம் நெருப்பு, ஒரு பக்கம் சிங்கம், ஒரு பக்கம் வேடன் எந்த பக்கம் திரும்பினாலும் மானின் முடிவு தயாராக இருந்தது. அந்த நேரத்தில் ஏற்பட்ட காரியம்தான் மிகவும் ஆச்சரியமானது! . திடீரென்று மின்னல் வந்து அந்த வேடனின் கண்களை குருடாக்கியது, அப்போது அவன் எய்ய இருந்த அம்பு சிங்கத்தின் மேல் போல் பாய்ந்து, அந்த சிங்கம் அடிபட்டு கீழே விழுந்தது. அதே நேரம் கனமழை பெய்து காட்டுத்தீயை அணைத்துப் போட்டது. மானும் தன் குட்டியை நல்லமுறையில் ஈன்றெடுத்தது. . அந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்த மானுக்கு குட்டியை ஈன்றெடுப்பதைத்தவிர வேறு வழி எதுவும் கிடையாது. 'அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்' (சங்கீதம் 147:9) என்று வேதம் கூறுகிறது. அந்த நல்ல தேவன் இந்த மானின் தேவையையும் சந்திக்க வல்லவராகவே இருந்தார். . நம் வாழ்விலும் நாம் எதிர்ப்பாராத வேளையில் துன்பங்களும், துக்கங்களும் நம்மை சூழ்ந்து நிற்கும் வேளையில் நாம் என்ன செய்வது என்று திகைக்கின்ற வேளையில், கர்த்தரை நோக்கி கூப்பிடும் போது, 'தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்' (சங்கீதம் 145:18) என்ற வசனத்தின்படி, அவர் சமீபமாய் இருந்து, நம்மை விடுவிக்கிறார். . கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர் என்ற வசனத்தின்படி, கொடூரமானவர்கள் நம்மை சூழ்ந்திருந்தாலும், அவர்களின் சீற்றம், பெரு வெள்ளத்தைப் போல இருந்தாலும், நாம் நம்பியிருக்கிற நல்ல தேவன், நமக்கு பெலனும், நெருக்கப்படுகிற நமக்கு திடனும், அடைக்கலமும், நிழலுமாயிருந்து காப்பார். அல்லேலூயா! . ஒருவேளை எந்த உதவியும் அற்றுப்போனேன் என்று கலங்குகிறீர்களா? எல்லாப்பக்கமும் என்னை விழுங்க நினைப்பவர்களால் சூழ்ந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? அவரை நோக்கி உண்மையாய் கூப்பிடும்போது எல்லா சூழ்நிலைகளையும் மாற்றி, நமக்கு தப்புவிக்க அவர் வல்லவராகவே இருக்கிறார். நம்மால் எதுவும் செய்ய முடியாத நிலையில் அவரே நமக்காக எல்லாவற்றையும் செய்து முடித்து, நமக்கு வெற்றியை தருவார். ஆமென் அல்லேலூயா! . பெரு வெள்ளம் மதிலை மோதி பெருங்காற்றும் அடிக்கையில் எங்கள் புகலிடமே எந்தன் தஞ்சமே பெருங்கன்மலையின் நிழலே . உம்மை போற்றி பாடுவேன் எந்தன் உயர்ந்த கன்மலையே |