'சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி' - (ஏசாயா 58:1). . ஸ்காட்லாந்து தேசத்தில் பிறந்த தேவ மனிதர் அலெக்ஸாண'டர் டாவ் நீண்ட காலமாக இந்தியாவிலேயே அர்ப்பணிப்போடும், துடிப்போடும் ஊழியம் செய்தவர். ஆனால் முதுமையை எய்தியபோது தனது தாய் நாடான ஸ்காட்லாந்திற்கு சென்றார். இருப்பினும் இயேசுவை அறியாமல் மூட நம்பிக்கையிலே வாழ்ந்து அழிந்து கொண்டிருக்கும் இந்திய ஜனங்களின் ஆத்துமாவை குறித்த பாரம் அவரை அதிகம் அழுத்தவே, எப்படியாவது இந்த ஸ்காட்லாந்து தேசத்திலிருந்து கொஞ்சம் மிஷனெரிகளை இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் அங்குள்ள ஒரு பெரிய சபையில் செய்தியளித்தார். செய்தியின் முடிவில் அங்குள்ள வாலிபர்களுக்கு ஓர் அழைப்பு விடுத்தார். . 'தங்களுடைய வாழ்க்கையை இந்தியாவிலே மிஷனெரியாக அர்ப்பணிக்க யார் முன்வரப் போகிறீர்கள்?' என்று கேட்டார். அவர் தனது பெலன் போகுமட்டும் உரத்த குரலில் அழைப்பு கொடுத்தும் அக்கூட்டத்திலுள்ள ஒரு வாலிபனும் முன் வரவில்லை. . அப்போது அந்த தேவ ஊழியர் மிகுந்த மனவேதனையுடன், 'இந்தியாவிற்கு மிஷனெரியாக செல்ல ஸ்காட்லாந்தில் ஒரு இளைஞனும் இல்லையோ? பரவாயில்லை, முதிர்ந்த வயதிலும் பெவீனமாயுமுள்ள நான் இருக்கிறேன். நான் திரும்பவும் இந்தியாவிற்கு சென்று, நின்றுகொண்டு பிரசங்கிக்க எனக்கு சக்தியில்லாவிட்டாலும், கங்கை நதிக்கரையில் நான் படுத்துக் கொண்டே அங்கு வரும் ஜனங்களுக்கு இயேசுவை பற்றிச் சொல்லி அங்கேயே என் ஜீவனை விடுவேன்' என்றார். . பிரியமானவர்களே, எங்கோ பிறந்து வளர்ந்த இந்த தேவ மனிதருக்கு முதிர்ந்த வயதிலும் இந்திய ஜனங்களை குறித்து இவ்வளவு பாரமும் துடிப்பும் இருக்குமானால் இந்திய மண்ணிலே பிறந்து வளர்ந்த நமக்கு எவ்வளவு துடிப்பு இருக்க வேண்டும்? இயேசுவை ஒருமுறை கூட அறியாமல் நம் தேசத்தில் எத்தனை ஜனங்கள் மாண்டு கொண்டு இருக்கிறார்கள்? அனுதினமும் குடிப்பழக்கத்திற்கும், போதை மருந்துக்கும், விபச்சாரத்திற்கும் அடிமையாகி, அதனால் மாண்டு கொண்டிருக்கும் மக்களுக்கு கிறிஸ்துவின் அன்பை சொல்ல, அவர்களுக்காக திறப்பில் நின்று ஜெபிக்க நாம் முன்வருவோமா? . அந்த தேவ மனிதனின் வைராக்கியம் நம்மையும் எழுப்பிவிடட்டுமே, நம் ஜனத்திற்காக நாம் எழும்பி நிற்போம். ஜெபிப்போம், 'சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி' (ஏசாயா 58:1) என்ற வார்த்தைகளின்படி நம் ஜனத்தின் மீறுதல்களையும், பாவங்களையும் தெரிவித்து அவர்களை இரட்சிப்பிற்கு நேராக வழிநடத்துவோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். ஆமென் அல்லேலூயா! . அழிந்து போகின்ற ஆத்துமாக்களை தினமும் தினமும் நினைப்பேன் அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே ஓடி ஓடி உழைப்பேன் தெய்வமே தாருமே ஆத்ம பாரமே . திறப்பின் வாசலில் தினமும் நிற்கின்றேன் சுவரை அடைக்க நான் தினமும் ஜெபிக்கின்றேன் |