Friends Tamil Chat

புதன், 26 ஜூன், 2013

26th June 2013 - யாரும் போக விரும்பாத இடம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஜுன் மாதம் 26-ம் தேதி - புதன் கிழமை
யாரும் போக விரும்பாத இடம்
....

உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப் போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். - (மாற்கு 9:43-44).

.
சில இடங்களுக்கு நாம் அடிக்கடி போக விரும்புவோம். எனக்கு ஆஸ்ரேலியா, மொரிஷியஸ் நாடுகளுக்கு போக வேண்டும் என்று விருப்பம் உண்டு. அதுப்போல உங்களுக்கும் சில இடங்களுக்கு போக விருப்பம் உண்டாயிருக்கும். ஆனால் சில இடங்களுக்கு நாம் போக விருப்பப்பட மாட்டோம். அதை குறித்து நமக்கு தெரியும்.

.

ஆனால் நாம் அனைவரும் போக விரும்பாத இடம் ஒன்று உண்டு. அதுதான் நரகம். சிலருக்கு என் வாழ்க்கையே நரகமாக இருக்கிறது என்று சொல்வார்கள். அவர்கள் உண்மையான நரகத்தை பற்றி அறியாததினாலே அப்படி சொல்கிறார்கள். நாம் நினைப்பதற்கும் அதிகமான இருளும், பயங்கரங்களும் சூழ்ந்திருக்கும் இடம் இந்த நரகமாகும். யாருக்கும் அங்கு போக விருப்பம் இல்லாவிட்டாலும் அநேகர் அதை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை சந்தித்திராத நேரம் வரை அவர்கள் அதற்கு நேராகத்தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.

.

இயேசுகிறிஸ்து நரகத்தை குறித்து நமக்கு தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறபடியால் நரகம் என்பது மிகவும் உண்மையான இடமாகும். சில கிறிஸ்தவ பிரிவுகள் நரகம் என்பது பொய் என்று போதிக்கிறார்கள். ஆனால் நரகம் என்பது மிகவும் உண்மையான இடம் என்று வேதத்தின் வெளிச்சத்தில் காணப்போகிறோம். இயேசுகிறிஸ்து நரகத்தை குறித்து 11 தடவைகள் கூறியிருக்கிறார். அதிலிருந்து அது உண்மை என்பது விளங்குகிறதல்லவா?

.

நரகத்தில் யார் வாழ்கிறார்கள்? இயேசுகிறிஸ்து மிகவும் தெளிவாக கூறுகிறார், '...பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்' - (மத்தேயு 25:41) என்று. உபத்திரவ காலத்தின் முடிவில் சாத்தானும், அந்திகிறிஸ்துவும், கள்ளதீர்க்கதரிசியும் நரக அக்கினியில் தள்ளப்படுவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர்கள் மட்டுமல்ல, சில தூதர்களும் அங்கே இருக்கிறார்கள். 'தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்' (யூதா 6). அவர்கள் மட்டுமல்ல, இயேசுகிறிஸ்து ஒருகூட்ட மக்களையும் அங்கே அனுப்புகிறார். 'அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள (மத்தேயு 25:41). அவர்கள் கர்த்தர் விரும்பின காரியங்களை செய்யாதபடி இருந்தபடியால் அவர்கள் நித்திய ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டார்கள். 'அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று' (யோவான் 3:18). கிறிஸ்துவை விசுவாசியாதவர்கள் யாவரும் அங்கே அனுப்பப்படுவார்கள்.

.

சரி, நரகம் என்பது எப்படி இருக்கும்?

.

  • நரகம் என்பது மிகவும் தாகமாய் இருக்கும் இடம். - (லூக்கா 16:24-26)
  • நரகம் என்பது அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படும் இடம். - (வெளிபடுத்தின விசேஷம் 14:10-11)
  • நரகம் என்பது அழுகையும் பற்கடிப்பும் உள்ள இடம். - (லூக்கா 13:28)
  • நரகம் என்பது தேவனுடைய சந்திதானத்திலிருந்து பிரிக்கிற இடம். - (2 தெசலோனிக்கேயர் 1:10)
  • நரகம் என்பது நினைவுப்படுத்தப்படும் இடம். நாம் செய்த தவறுகளும், பாவங்களும் நினைவுப்படுத்தப்பட்டு, நம்மை துன்புறுத்தும் இடம். - (லூக்கா 16:25)
  • நரகம் என்பது தேவனுடைய கோபம் கொட்டப்படும் இடம்.
  • நரகம் என்பது நித்திய நித்தியமான முடிவேயில்லாதது. - (மாற்கு 9:43-44)

.

இப்படிப்பட்ட இடத்திற்கு செல்ல யார் தான் விரும்புவார்கள்? நாம் இந்த இடத்திற்கு செல்லாதபடி நம்மை காத்து கொள்ள முடியும்! அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அல்லேலூயா! 'உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று' - (யோவான் 3:16-18) ஆம், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாக நரகத்திற்குள்ளாக தீர்க்கப்படான். ஆனால் அவரை விசுவாசியாதவர்களோ, ஏற்கனவே ஆக்கினை தீர்ப்புக்கு உட்பட்டாயிற்று என்று வசனம் நமக்கு போதிக்கிறது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதினால் மட்டுமே நாம் நரக ஆக்கினையிலிருந்து தப்ப முடியும். கர்த்தரை இதுவரை விசுவாசியாதவர்கள் விசுவாசித்து நரக ஆக்கினைக்கு தப்பும்படியாக இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. விசுவாசித்தவர்கள் இன்னும் பரிசுத்தத்தை பெற்று பரலோக வாழ்க்கைக்கு ஆயத்தமாகும்படி கர்த்தர் நமக்கு போதிக்கிறார். 'அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்'. - (வெளிப்படுத்தின விசேஷம் 22:11-12) என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம்மை பார்த்து கூறுகிறார். அநியாயத்திலும் அசுத்தத்திலும் வாழ்ந்து கர்த்தரின் வருகையில் வெட்கப்பட்டு நிற்போமா? அல்லது பரிசுத்தத்திலே முன்னேறி தேவனை சந்திக்க ஆயத்தப்படுவோமா? நம்மையே ஆராய்ந்து பார்ப்போமாக! கர்த்தர் சீக்கிரம் வருகிறார்! ஆமென் அல்லேலூயா!

.

எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்

எல்லா அநீதிக்கும் கூலிபெறுவாய்

கல்வாரி சிலுவை அண்டிடுவாய்

கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்

...

தேவன் வருகின்றார் வேகம் இறங்கி

தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி

பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்

பூலோக மக்களும் கண்டிடுவார்

...

இயேசு கிறிஸ்து வருகின்றார்

இந்தக் கடைசி காலத்திலே

கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்

கண்டு புலம்பிடுமே


ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக பிதாவே, பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நரகத்திற்கு மனிதர்களாகிய நாங்கள் போவது உம்முடைய சித்தம் அல்ல என்று உம்முடைய சொந்த குமாரனையே உலக இரட்சிப்பிற்காக தந்த அன்பின் தேவனல்லவா? இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, நரகத்திற்கு நீங்கலாகி, பரலோகத்திற்கு பாத்திரவான்களாக மாறும்படியாக இதுவரை விசுவாசியாத ஒவ்வொருவருக்கும் கிருபை செய்யும். விசுவாசியாதவர்கள் எப்படியாவது இரட்சிப்பிற்குள் வரும்படியாக, நரக ஆக்கினைக்கு தப்பித்து கொள்ளும்படியாக அவர்களுக்கு உணர்த்துவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

....
..
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.