ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள். - (1தெசலோனிக்கேயர் 5:15). ஒரு தேள் தண்ணீரில் மூழ்கி கொண்டிருப்பதை பார்த்த ஒரு கிறிஸ்தவர் அதை வெளியே எடுத்துப்போடும்படி முயற்சி செய்தார். அவர் அதற்காக அதை தொட முயற்சித்தபோது, அது அவரை தன் கொடுக்கால் கொட்டியது. அதை தட்டி விட்டு, மீண்டும் அதை மேலெடுக்க முயற்சித்தபோது, அது மீண்டும் அவரை கொட்டியது. . அதை பார்த்துக் கொண்டிருந்த அந்த கிறிஸ்தவரின் நண்பர், 'உனக்கு என்ன பைத்தியமா? அது உன்னை கொட்டுகிறது, ஆனால் நீ அதற்கு உதவி செய்து கொண்டிருக்கிறாயே' என்று கேட்டார். அதற்கு கிறிஸ்தவர், 'தேளினுடைய தன்மை கொட்டுவது, ஆனால் கிறிஸ்தவனாகிய என்னுடைய தன்மை நேசிப்பது. அது தன் தன்மையை மாற்றாதபோது, நான் மட்டும் ஏன் என் தன்மையை மாற்றி, கொள்ள வேண்டும்?' என்று கேட்டாராம். . சிலருடைய தன்மை எப்போதும் மற்றவர்களை தங்கள் வாயின் கொடுக்கால் கொட்டுவதுதான். என்னதான் நன்மை செய்தாலும் அவர்கள் வாயிலிருந்து எப்போதும், நன்மை செய்பவர்களை கரித்துக் கொட்டிக் கொண்டிருப்பதுதான். ஏனென்றால் அவர்களுடைய தன்மையே அல்லது அவர்களுடைய குணமே அதுதான். தேவையில்லாமல், மற்றவர்களை குறைசொல்வதும், அவர்கள் மனம் நோக பேசுவதும், அவர்களுடைய இயல்பாகவே இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்குள் கிறிஸ்து என்னும் ஒளி இல்லை. . அவர்கள் அப்படி செய்கிறார்கள் என்பதற்காக நாம் அவர்களை வெறுத்து அவர்கள் பேசுவதற்கு பதில் பேசுவோம் என்றால், அவர்களுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. சவுல் முதலில் ராஜாவாகிறபோது, அனைவரும் அவரை இராஜாவாக ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கு இருந்த 'பேலியாளின் மக்கள்: இவனா நம்மை ரட்சிக்கப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கை கொண்டுவராமல் அவனை அசட்டை பண்ணினார்கள்; அவனோ காதுகேளாதவன்போல இருந்தான்' (1சாமுவேல் 10:27) என்று வேதம் கூறுகிறது. இந்த வார்த்தை எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை. சவுல் இராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டாயிற்று. அவர் நினைத்திருந்தால், அவரை ஏற்றுக் கொள்ளாதவர்களை, அவரை அங்கீகரிக்காதவர்களை, அவரை அசட்டை செய்தவர்களை சிறையில் அடைத்திருக்க முடியும், ஏன், கொலையே செய்ய முடியும். ஆனால் அவரோ காதுக்கேளாதவர் போல இருந்தாராம். நமக்கு என்ன நல்ல ஒரு பாடம்! . 'அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்' (ஏசாயா 53:7) என்று இயேசுகிறிஸ்து தம்மை அடித்தவர்களையும், தம்மை நிந்தித்தவர்களையும், சபிக்காதபடி, அவர்களை அழித்து விடாதபடி அமைதியாக துன்பங்களை சகித்தார் அல்லவா! தம் வாயை திறவாதிருந்தார் அல்லவா? அவரை பின்பற்றுகிற நாமும் அவரைப்போல ஜீவிக்கும்போது, கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். . நாம் செய்த நன்மைக்கு பதிலாக தீமை செய்கிறார்களா? மனம் சோர்ந்து போக வேண்டாம். நமக்கு விரோதமாக பேசுகிறார்களா? கவலை படாதீர்கள், காது கேளாதவர்கள் போல இருந்து விட வேண்டும். ஒரு முறை பாஸ்டர் இரத்தினம் பால் அவர்கள் தன்னுடைய செய்தியில் இவ்வாறு கூறினார், 'நமக்கு விரோதமாக காரியங்களை நாம் சகிக்காமல், அவர்களோடு யுத்தம் செய்தால், அல்லது அவர்களோடு வாக்குவாதம் செய்தால், கர்த்தர் சும்மா இருந்து விடுவார். ஆனால் நாம் சும்மா இருந்தால், கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார்' என்று கூறினார். . நாம் சும்மா இருப்பதில்லை, நாமும் வழக்காடுகிறோம், நாம் செய்தது சரி என்று நிரூபிக்க முயலுகிறோம், நம்மை அங்கீகரிக்க பாடுபடுகிறோம். இவற்றை நாம் செய்தால், கர்த்தர் நமக்கு என்ன, அவனே அல்லது அவளே செய்கிறான், செய்யட்டும், என்று சும்மா இருந்து விடுவார். ஆனால் மற்றவர்கள் நமக்கு தீங்கு செய்யும்போதும், தேவையற்ற வார்த்தைகளை சொல்லி, புண்படுத்தும்போதும் நாம் சும்மா இருந்தால், கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார். நம்மை சிறந்தவர்கள் என்று நிரூபிப்பார். . சிலருடைய இயற்கை குணமே அப்படியாக இருப்பதால், நாம் என்ன சொன்னாலும், செய்தாலும் அவர்கள் திருந்த போவதில்லை. கர்த்தர் அவர்களை மாற்றினாலொழிய அவர்கள் மாறப்போவதில்லை. ஆகவே என்ன வந்தாலும் மனம் சோர்ந்து போகாமல், கர்த்தர் பாதத்தில் அவற்றை வைத்துவிட்டு நாம் சும்மா இருந்து விடுவோம். தொடர்ந்து அவர்களுக்கு நன்மையையே செய்வோம். கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். ஆமென் அல்லேலூயா! . என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன் யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போக மாட்டேன் . கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு வெற்றி வெற்றி வெற்றி வெற்றி அல்லேலூயா அல்லேலூயா |