இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய். - (உபாகமம் 33:29). . நேற்றைய தினத்தில் முதலாம் உலக மகா யுத்தம் நடைபெற்றதில் இஸ்ரவேல் இங்கிலாந்திற்கு உதவியதால், இஸ்ரவேலருக்கு தனி நாடு வழங்கப்பட்டது என்றுப் பார்த்தோம். அதன்பின் நடந்த இரண்டாம் உலக மகா யுத்தத்தில் இஸ்ரவேலருக்கு நடந்ததைக் குறித்துப் பார்க்கப்போகிறோம். . இந்த யுத்தம் இங்கிலாந்துக்கும், ஜெர்மனிக்கும்தான் துவங்கியது. ஆனால் கடைசியில் உலகிலுள்ள 57 பெரிய நாடுகள், இதில் சேர்ந்து நஷ்டப்பட துவங்கின. இந்த யுத்தத்தில் நடந்த துக்ககரமான காரியம் என்னவென்றால், ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லர் அவன் ஆதிக்கத்திற்குள் இருந்த நாடுகளிலிருந்த யூதரையெல்லாம் பிடித்து, திறந்த வெளி ஜெயிலில் போட்டு பூட்டி, ஆடையின்றி, உணவு, தண்ணீர் கூட இல்லாமல் கடுங்குளிரில் வைத்து சித்திரவதை செய்து, அவர்களை நீண்ட குழிகளை வெட்டச் செய்து, அதன் பக்கத்தில் வரிசை வரிசையாக யூத ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும் நிறுத்தி, ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தி, அப்படியே குழிகள் நிறையும் வரை சுட்டுக் குவித்து மண்ணை போட்டு மூடினான். அநேகரை குப்பைகளை எரிக்கும் கிடங்குகளில் போட்டு எரித்து, இவ்விதமாய் ஆறு மில்லியன் அல்லது 60 இலட்சம் யூதரை கொன்று குவித்தான். உலகமே யூதருக்கு நேர்ந்த இந்த நிலைமையைக் கண்டு பிரமித்து, அவர்கள் மேல் பரிதாபப்பட்டது. இன்றும் எருசலேமில் உள்ள புலம்பலின் சுவர் அருகே ஆறு கறுப்பு நிறத்தில் பெரிய விளக்குகள் வைக்கப்பட்டு, தாவீதின் நட்சத்திரம் அதன் மேல் வைக்கப்பட்டு, மரித்த அறுபது இலட்சம் யூதர்களை நினைவுகூரும் பொருட்டு, இரவும் பகலும் எரிந்துக் கொண்டே இருக்கிறது. . . இதன்பிறகுதான் பிறநாடுகளிலிருந்த யூதர்களுக்கு தங்களுக்கென்று ஒரு நாடு வேண்டும், அல்லது தாங்கள் திரும்ப குடியேற அனுபமதிக்கப்பட்டிருக்கும் பலஸ்தீனா நாட்டை தங்களுடைய நாடாக்கி, அதில் போய் குடியேறிவிட வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. . . 1946ம் ஆண்டு, இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்தவுடன் பலஸ்தீனா நாட்டுக்கு. அதற்கு வடக்கேயுள்ள நாடுகளான ரஷ்யா, போலண்டு. ஜெர்மனி முதலிய நாடுகளிலிருந்து பெரும்பான்மையான மக்கள் இஸ்ரவேலுக்கு வந்து சேர்ந்து தேவ தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற ஆரம்பித்தார்கள். 'அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்'. - (எரேமியா 3:18) .. இதற்குள் ஐக்கிய நாடுகளின் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, 1947 நவம்பர் மாதம் பலஸ்தீனா நாட்டில் யூதர்களுக்கு ஒரு பகுதியை சுதந்தர நாடாக பிரகடனப்படுத்தியது. அவர்கள் யூதருக்கு பிரித்து கொடுத்ததில் முக்கால் பாகத்திற்க்கு மேல் வனாந்தர பகுதியாய் இருந்தாலும் சுற்றிலுமிருந்த அரபிய நாடுகள் அதை எதிர்த்தன. என்றாலும் ஐக்கிய நாடுகளின் சங்கத்தில் மூன்றில் இரண்டு பாகம் யூதருக்கு சாதகமாக ஓட்டளித்ததால் யூதருக்கு ஒரு தனி நாடு என்ற தீர்மானம் நிறைவேறியது. . . இதனால் பிரிட்டன் பலஸ்தீனாவிலிருந்து தன் நிர்வாக பொறுப்பை விலக்கிக் கொண்டு அந்த நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்தது. 1948ம் வருடம் மே மாதம் 14ம் தேதி இரவு 12 மணியுடன் தன் தொடர்பை நிறுத்தி, தன் படைகளையும் வாபஸ் பெற்றுக் கொண்டது. யூதர்கள் 1948ம் வருடம் மே மாதம் 14ம் தேதி மாலை நேரத்தில் அதுவரை பலஸ்தீனா தேசமாக இருந்தததை இஸ்ரவேல் தேசமாக மாற்றினர். அல்லேலூயா! . . இந்த புதிய நாட்டிற்கு செய்ம் வீஸ்மான் ஜனாதிபதியாகவும், டேவிட் பின்கூரியன் பிரதம் மந்திரியாகவும் நியமிக்கப்பட்டு, இஸ்ரவேல் தேசம் உருவானது. புதிய நாடு பிரகடனம் செய்யும் வைபவத்தில் புதிய பிரதம மந்திரி டேவிட்பென்கூரியன் எசேக்கியேலின் தீர்க்கதரிசன புத்தகம் 37ம் அதிகாரம் 1 முதல் 23 வசனங்களை வாசித்து, 'இன்று இந்த வேதவாக்கியம் நிறைவேறிற்று' என்றார். ஆமென் அல்லேலூயா! . . 'அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்' (எரேமியா 3:18) என்ற தீர்க்கதரிசனத்தின்படி இஸ்ரவேலர் தங்களுடைய தேசத்திற்கு திரும்பி வரத்தொடங்கினர். . முதலாம் யுத்தம்: இஸ்ரவேல் தேசம் சுதந்தர தேசமாக பிரகடனப்படுத்தியவுடன் அதை சுற்றியுள்ள ஆறு நாடுகள் அதாவது, எகிப்து, யோர்தான், ஈராக், சீரியா, லெபனான்,மற்றும் சவுதி அரேபியா தங்கள் வீரர்களை இஸ்ரவேல் நாட்டுக்குள் பல இடங்களில் ஊடுருவ செய்து, இஸ்ரவேலுக்கிருந்த சொற்ப ராணுவத்தையும், தளவாடங்களையும் சிறு சிறு பகுதிகளாக பிரித்து விட்டனர். என்றாலும் இஸ்ரவேல் தன் உயிருக்காக போராடி எல்லா முனைகளிலும் எதிரிகளை பின்வாங்க செய்தனர். 1949ம் வருட ஆரம்பத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி டாக்டர் ரால்ப் பஞ்ச் இஸ்ரவேலுக்கும், லெபனான், யொர்தான், சீரியா முதலிய நான்கு நாடுகளுக்கும் ஒரு இடைக்கால யுத்த நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்தினார். ஆனால் அந்த உடன்பாடு நிரந்தர சமாதானத்தை தரலில்லை. 1947லிருந்து 1949 வரை 6,000 இஸ்ரவேலர் உயிரிழந்தனர். இந்த யுத்தத்தில் ஐக்கிய நாடுகள் சபையினால் அரபியருக்கு ஒதுக்கப்பட்ட பூமியில் 112 கிராமங்களையும், 500 சதுர மைல் பரப்புள்ள நிலத்தையும் இந்த யுத்தத்தினால் இஸ்ரவேல் பிடித்துக் கொண்டது. . . இரண்டாம் யுத்தம்: 1949க்கும், 1956க்கும் இடைப்பட்ட காலத்தில் எகிப்து தன் இராணுவ பலத்தை ரஷ்யாவின் உதவியுடன் மேம்படுத்திக் கொண்டு 1956 ஜூலை 26ம் தேதி இங்கிலாந்து நிர்வகித்து வந்த சூயஸ்கால்வாயை தேசிய மயமாக்கி, ரத்த சேதமின்றி கைப்பற்றிய காரணத்தினால், எகிப்து. சீரியா, லிபியா ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து ஒரு அரபிய கூட்டு அமைத்து, சூயஸ் கால்வாய் வழி இஸ்ரேலிய கப்பல்கள் வர தடைவிதித்தும், இஸ்ரவேலின் தென் முனையிலிருந்து ஏலாத் துறைமுகத்திற்கும் கப்பல்கள் வராமல் தடுத்தும், போர் செய்தது. . இஸ்ரவேல் தன் ராணுவத்தை பயன்படுத்தி, சீனாயிலிருந்த எகிப்தின் படைகளை அப்புறப்படுத்தி, சூயஸ் கால்வாயை தன் ஆதிக்கத்தில் கொண்டு வந்தது. ஆனால் அமெரிககாவின் வற்புறுத்தலின் பேரில் தன் படைகளை அங்கிருந்து திரும்ப அழைத்துக் கொண்டது. அதன் பின் 10 வருடங்கள் போர் ஓய்ந்திருந்தது. . . மூன்றாவது யுத்தம்: எகிப்து இஸ்ரவேலின் எல்லைப்பகுதியில் சீனாயில் 90,000 வீரரையும் 900 டாங்குகளையும் கொண்டு வந்து குவித்துக் கொண்டு, ஐக்கிய நாட்டுப் படையை மிரட்டி, தங்களுக்கு வழிவிடாவிட்டால் அப்படைகளையும் அதம் பண்ணுவோம் என்று மிரட்டியது. அதே சமயம் யோர்தானும், சீரியாவும் இஸ்ரவேலை தாக்க தயாராயின. இஸ்ரவேலர் யுத்தத்திற்கு செல்லுமுன் வேதத்தை வாசித்து ஜெபித்தார்கள். . . அவர்கள் வாசித்த வேத பாகம், உபாகமம் 20:3-4: 'இஸ்ரவேலரே, கேளுங்கள்; இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம். உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்லவேண்டும்'. . ஏறெடுத்த ஜெபம்: சங்கீதம் 35:1-2: கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்துநில்லும்'. இவ்வாறு ஜெபித்ததை கர்த்தர் கேட்டார். உபாகமம் 20ல் கொடுத்த வாக்குத்தத்தையும் நிறைவேற்றினார். எப்படியென்றால் இஸ்ரவேல் ஆறே நாட்களில் எகிப்தின் பலத்த சேனையை முறியடித்தது. சீனாய் தீபகற்பத்தையும் முழுவதும் பிடித்து தன் ஆதிக்கத்தில் கொண்டு வந்தது. பார்த்த இடங்களிலெல்லாம் எகிப்தின் தளவாடங்கள் நொறுக்கபட்டும், தீக்கிரையாகியும் கிடந்தன. இஸ்ரவேல், யோர்தான் பகுதிகளில் யோர்தானின் மேற்கு கரையையும் பிடித்துகொண்டது. மட்டுமல்ல, சீரியாவின் எல்லையில் கோலன் என்ற மலை தேசத்தையும் பிடித்துக் கொண்டது. அல்லேலூயா! . இந்த யுத்தத்தில் கர்த்தர் இஸ்ரவேலுக்காய் யுத்தம் செய்தார் என்று இஸ்ரவேலர் தரப்பிலும், எதிரிகளின் தரப்பிலும் சாட்சி கூறப்பட்டது. அதைக் குறித்து நாளை காண்போம். . இஸ்ரவேல் என் ஜனமே என்றும் இடறிட வேண்டாம் யெகோவா உன் தெய்வமானால் ஏதும் பயம் வேண்டாம் . ஓங்கும் புயமும் பலத்த கரமும் உன் பக்கமேயுண்டு தாங்கும் கிருபை தயவு இரக்கம் தாராளமாயுண்டு |