நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது - (உன்னதப்பாட்டு 8:6). . புஷ்யோக் என்னும் ரஷ்ய வாலிபன் எப்போதும் புன்சிரிப்புடன் இருப்பான். அவனை காண்பவர்களை கவர்ந்திழுக்கும் உள்ளத்தை உடையவனாய் இருந்தான். மட்டுமல்ல, இனிமையாக பாடி வாத்திய கருவிகளை இசைப்பதில் அவனுக்கு இணை அவன்தான். . அவனது பெற்றோர் அவனை இசைக்கல்லூரியில் சேர்த்தனர். சங்கீதத்தை முறைப்படி கற்றது மட்டுமல்ல, எல்லா இசைக் கருவிகளையும் திறமையாக மீட்டுவதிலும் பிரசித்திப் பெற்றவனாக இருந்தான். தன்னோடு சுட படிக்கும் மாணவன் மூலமாக கிறிஸ்து தம் ஜீவனை கல்வாரியில் எபபடி கொடுத்தார் என்பதை அறிந்தான். அவன் உள்ளம் கிறிஸ்துவுக்காக பொங்கியது. கிறிஸ்து தம் ஒரே ஜீவனை எனக்காக அர்ப்பணித்தாரென்றால் ஏன் என் திறமை தாலந்துகள் எல்லாவற்றையும் அவருக்காக அர்பணிக்கக்கூடாது என தீர்மானித்தான். . . அவன் பட்டம் பெறும் நாள் வந்தது. அவனது அருமையான பெற்றோர்கள் மகிழ்ச்சியோடு, ஒழுங்கு செய்யப்பட்ட பெரிய மண்டபத்தில் காத்துக் கொண்டிருந்தனர். அவனுடைய ஆசிரியர்கள் பெருமையோடு தம்தம் ஆசனங்களில் வந்து அமர்ந்தனர். . . ரஷ்யாவில் நாடோடிப்பாடலான 'பொன் வாத்தின் மதுரக்கீதம்' என்ற பாடலையே தன் பட்டம் பெறும் பாடலாக தெரிந்தெடுத்தான். தன் முழு உள்ளத்தையும் அந்த பாடலில் இணைத்து, உருக்கமாக பாடிக் கொண்டே வந்தான். அந்தப் பாடலோடு கூட அப்படியே கல்வாரியின் கீதத்தையும் இணைத்து இயேசுவின் அன்பு, அவரது தியாகத்தையும், உருக்கமான குரலில் பாடி முடித்தான். கல்லைப் போலுள்ள உள்ளங்கள் மெழுகைப்போல உருகின. அவனது ஆசிரியர்கள் திகைத்தார்கள். அரசாங்க அதிகாரிகள் உறுமினார்கள். அவன் மெதுவாய் மேடையில் எழுந்து நின்று, உறுதியான குரலில், 'பாரமான சிலுவையை தம் தோள்களிலே தூக்கிக் கொண்டு எருசலேம் வீதி வழியாக இரத்த வியர்வையோடு நடந்து, எனக்காக ஜீவனைக் கொடுதுது, தன் ஜீவனைப் பார்க்கிலும் என்னை அதிகமாக நேசித்தவரை நான் எப்படி நேசியாமல் இருக்க முடியும்?' என்று கூறினான். . . அப்பொழுதே அவன் கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டன. அவன் பெற்றோர் கலங்கி தவித்தனர். அவன் அவர்கள் பக்கமாக திரும்பினான், 'அம்மா,கல்வாரி கீதத்தோடு என் வாழ்க்கையின் கீதத்தையும் இணைத்துக் கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன்' என்றான். மரண தண்டனைக்காக அவன் நடந்து சென்றான். அவன் நடையில் ஒரு கெம்பீரம் இருந்தது. . . பிரியமானவர்களே, நம் தேவன் மேல் நமக்கு இதுப் போன்ற நேச வைராக்கியம் உண்டா? கிறிஸ்தவ வாலிபர்கள் பலர், தங்களது தாலந்துகளை கர்த்தருக்கென்று பயன்படுத்தாமல், தங்கள் விருப்பப்படி சினிமா பாடல்களுக்கும், மற்ற பாடல்களுக்கும் உபயோகப்படுத்தி கொண்டிருக்கும் காலத்தில், நாம் நம் பிள்ளைகளுக்கு, தேவனுக்கேற்ற வைராக்கியத்தை குறித்து போதிக்கிறோமா? நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு கீபோர்ட் கற்றுக் கொடுக்கும்போது, வயலின் வாசிக்கும் ஒருவர் வீட்டிற்கே வந்து கற்றுக் கொடுக்கிறேன் என்றும், தனக்கு வயலின், கிட்டார், கீ போர்ட் வாசிக்க தெரியும் என்று கூறினார். நாங்களும் சந்தோஷமாக எல்லாவற்றையும் எங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள் என்று கூறினோம். . . அப்படியே அவர் ஒத்துக்கொண்டு, முதல் பாடலை தன் வயலினால் வாசிக்க ஆரம்பித்தார். அது ஒரு சினிமாப்பாடலாக இருந்தது. உடனே நாங்கள் அவரிடம், 'நாங்கள் கிறிஸ்தவர்கள், சினிமாப்பாடல் எங்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டாம்' என்று கூறினோம். அவர் 'நீங்கள் என்ன, எல்லாப்பிள்ளைகளும் இப்படித்தான் கற்று வருகிறார்கள்' என்று கூறினார். நாங்கள் 'மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும், நாங்கள் அப்படி செய்ய மாட்டோம்' என்று அவரை நிறுத்தி விட்டு, கிறிஸ்தவ ஆசிரியரை தேடிப்பிடித்து, அவரிடம் கற்றுக் கொள்ள வைத்தோம். . . நாம் கர்த்தருக்கென்று நேச வைராக்கியம் பாராட்டும்போது, அவரும் நமக்காக வைராக்கியம் காட்டுவார். நாம் உலகம் செல்லும் வழியில் சென்றால், நமக்குத்தான் நஷ்டம். நம்முடைய பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே கர்த்தருக்கென்று வாசிக்கும்படியாக சொல்லிக் கொடுப்போம். தங்களது எந்த தாலந்துகளானாலும், அதை கர்த்தருக்கென்றே உபயோகிக்கிற பிள்ளைகளாக நம் பிள்ளைகள் வளரட்டும். உலகத்திற்கு செய்யும்படி அநேகர் இருக்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவுக்காக நாம் செய்வது எதுவோ அது அநேகருக்கு பிரயோஜனமாகவும், கர்த்தருக்குள் அவர்களை நடத்துகிறவைகளாகவும் இருக்கும். . . சிலர் சபைக்காக நேச வைராக்கியம் காண்பிக்கிறோம் என்பார்கள். ஆனால் அவர்கள் வைராக்கியம் அவர்கள் பதவிகளின் மேலும், மனிதர்கள் மேலும் இருக்கிறதேயன்றி, கர்த்தருக்காக இருப்பதில்லை. கேட்டால் சபைக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று சொல்வார்கள். இது தேவனுக்காக பாராட்டுகிற வைராக்கியம் அல்ல, மனிதருக்காக பாராட்டுகிற வைராக்கியமே! சபைக்காக வைராக்கியம் பாராட்டுதல் என்பது, சபையில் மூப்பரோட இணைந்து சபையின் ஊழியங்களில் பங்கு கொள்வது, கர்த்தர் கொடுத்த போதகருக்கு கீழ்ப்பட்டு, அவருடன் ஊழியத்தில் இணைத்துக் கொள்வது, சபைக்கும், சபை விசுவாசிகளுக்கும் பிரயோஜனமாயிருப்பது போன்ற காரியங்களாகும். ஆனால் அதை விட்டுவிட்டு, பதவிக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு, போதகர்களையும், அவர்களுடைய பிரசங்கங்களையும் கேலி செய்து, அவர்களை புண்படுத்தும் கூட்டமே இப்போது பெருகி வருகிறது. நம் வைராக்கியம் மனிதர்கள் மேல் அல்ல, கர்த்தரின் மேலும், அவருடைய ஊழியங்களின் மேலும் பெருகட்டும். . . 'நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது' என்ற வசனத்தின்படி அப்படிப்பட்டதான நேசத்தை நமக்காக ஜீவனைக் கொடுத்து, அன்பு, நேசம் என்றால் என்னவென்று சொல்லிக்கொடுத்த கிறிஸ்துவின் மேல் காட்டுவோம். அவர் நம்மில் மகிழ்ந்து நம் மேல் இன்னும் நேச வைராக்கியமாய் இருப்பார். ஆமென் அல்லேலூயா! நேசரே கல்வாரி அன்பே நினைவெல்லாம் நீர்தானே நிம்மதி தாருமே . உம்மை நினைக்கையில் உள்ளமெல்லாம் பொங்குதே உம்மோடு இருக்கையில் கள்ளமெல்லாம் நீங்குதே |