மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. - (சங்கீதம் 42:1). . ஒரு இளம் வாலிபன் தன் போதகரிடம் வந்து, 'நான் இன்னும் அதிகமாய் தேவனிடம் நெருங்கி ஜீவிக்க வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டான். அதற்கு போதகர் வேதத்திலிருந்து அநேக விளக்கங்களை சொல்லி, எடுத்துக் காட்டினாலும், அந்த வாலிபனால் புரிந்து கொள்ள முடியவில்லை. . அப்போது அந்த போதகர் அவனை தண்ணீர் நிறைந்த ஒரு ஏரியினிடத்திற்கு அவனை கொண்டு போய், அவனது தலையை அந்த தண்ணீரில் அமுக்கினார். கொஞ்ச நேரம் அவன் போராடினான். மூச்சு விட முடியாமல் அவன் தடுமாறினான். அப்போது அவனது தலையை தண்ணீரிலிருந்து எடுத்தார் போதகர். அவன் அப்போதுதான் உயிர் வந்தது போல பெரிய மூச்சு தொடர்ந்து எடுத்துவிட்டு, 'ஏன் ஐயா இப்படி செய்தீர்கள்' என்று கேட்டான். அப்போது அந்த போதகர், 'இப்போது தண்ணீருக்குள் உன் தலை இருந்தபோது உனக்கு என்ன தேவை என்று நீ விரும்பினாய்?' ஏன்று கேட்டார். 'ஐயா எனக்கு மூச்சு விட காற்று காற்று காற்று வேண்டும் என ஏங்கினேன்' என்று கூறினான். அப்போது அந்த போதகர் 'மகனே நீ எப்போது நீ விரும்பிய இந்த காற்றைப்போல தேவனை தேடுவாயோ அப்போது அவரை கண்டடைவாய்' என்று கூறினார். . ஆம், பிரியமானவர்களே, ஒரு மனிதன் தண்ணீரில் மூழ்கும்போது, அவனுக்கு காற்று எவ்வளவு தேவையாயிருக்கிறதோ அதுப்போலவும், ஒரு மான் தண்ணீர் நிறைந்த இடத்தை அலைந்து தேடி, அதை கண்டுப்பிடித்து, அந்த நீரைக் குடித்து, தன் பெலனைப்பெற்றுக் கொள்கிறதோ அதைப்போல நாமும் ஆவலோடு தேவனை தேட வேண்டும். . அரசாங்கம் குடி குடியை கெடுக்கும் என்று கண் கண்ட இடங்களிலெல்லாம் எழுதி எச்சரித்திருந்தாலும், மனிதர்கள் டாஸ்மாக் கடைகளில் ஈயைப்போல மொய்த்துக் கொண்டு, குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர் சில போதை மருந்துகளுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியாதா தாங்கள் செய்வது தவறு என்று. தெரியும். ஆனாலும் அவர்கள் அதற்கு அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள். ஏன்? அவர்களுக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு அதில் இருப்பதால்தானே! அதில் ஆனந்தம் காண்பதில்தானே! இழுக்க இழுக்க இன்பம் என்று சிகரெட் விளம்பரங்கள் மக்களை அதை செய்யும்படி தூண்டுகின்றன. . இவைகளையெல்லாம் செய்யும் மக்களுக்கு கர்த்தரின் அன்பை குறித்து கூறினால், அவர்களில் அநேகர் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களுக்கு யாரோ எதையோ யாருக்கோ சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் என்று அதை மனதில் வாங்கிக் கொள்வதுமில்லை. . கிறிஸ்தவ மக்களில் அநேகர் வாரந்தவறாமல் ஆலயத்திற்கு செல்கிறார்கள். வசனத்தை கேட்கிறார்கள். ஆராதனையில் ஆர்வமாய் கலந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் பாவத்தை விட்டு வெளியே வரமுடியாத நிலை. சீரியல் பார்ப்பதும், சினிமா பார்ப்பதும் அவர்களை விட்டு வைப்பதில்லை. ஆலயத்தில் அவர்கள் வசனம் கேட்டாலும், ஆலயத்தில் மகா பரிசுத்தவான்களாய் இருப்பவர்கள், வீட்டிற்கு வரும்போது, மீண்டும் பாவ காரியங்களில் ஈடுபட்டு, தங்களை கிறிஸ்துவுக்கு அந்நியப்படுத்தி விடுகிறார்கள். . ஏன் இந்த நிலைமை! ஏனெனில் அவர்களுக்கு கர்த்தரை நேசிக்க அறிந்திருந்தும், அவரை தனிப்பட்ட முறையில் அறியவில்லை என்பதே. மானானது நீரோடையை வாஞ்சிக்கிறதுப் போல, நீரில் மூழ்குகிறவன் காற்றை வாஞ்சிப்பதுப் போல அவர்களை தேவனையும், அவருடைய தனிப்பட்ட உறவையும் வாஞ்சிப்பதில்லை. அவர்கள் அவரை உண்மையாய் ருசிக்கவில்லை. வசனம் சொல்லுகிறது, 'கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்' என்று. . எங்கே கர்த்தரிடம் சென்றால் தங்கள் பழைய வாழ்க்கையை விட்டு விட வேண்டி வருமோ என்றே அநேகம் பேர் கர்த்தரிடம் வருவதில்லை. இது எத்தனை பரிதாபமான நிலை! ஒரு மனிதனை கர்த்தருடைய சமுகம் தவிர வேறு எதுவும் பரிபூரண சந்தோஷத்தையும், சமாதானத்தையும் தரவே முடியாது. எனவே தான் நாம் அனுபவிக்கிற உலக இன்பங்கள் அத்தனையும் சிற்றின்பம் என்று அழைக்கப்படுகிறது. தேவனிடத்திலிருந்து மட்டுமே பேரின்பம் கிடைக்கும். . சிற்றின்பங்களை அனுபவித்தப்பின் நம் இருதயத்தில் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றும். செய்யத்தகாததை செய்து விட்டோமே என்று. எத்தனை பெரிய பணக்காரனாயிருந்தாலும், அந்த பணம் அவனுக்கு சமாதானத்தை நிச்சயமாக தருவதில்லை. பணம் அவனுக்கு சந்தோஷத்தை தருவதில்லை. நான் அநேகரை பார்த்திருக்கிறேன். எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளும்படி அவர்களில் கைகளில் ஏராளமான பணம் உண்டு. ஆனால் அவர்கள் வாழ்விலோ அவர்கள் தேடும் நிம்மதியும் சமாதானமும் இல்லவே இல்லை. சாலமோன் இராஜாவைப் போல உலகின் எல்லா ஐசுவரியத்தையும், சம்பத்துக்களையும் பெற்றவர்கள் யாரும் இருந்ததில்லை. ஆனால் அவரே சொல்கிறார், இந்த உலகத்தில் உள்ள எல்லாமே மாயை என்று. . ஏனெனில் சமாதானத்தை கொடுப்பவர் நம் கர்த்தர் மட்டுமே. அவர் தானே கூறினார், 'என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்ளூ உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை' (யோவான் 14:27) என்று. நம் முழு இருதயத்தோடும் மானானது நீரோடையை தேடுவதுப் போல கர்த்தரை தேடுவோமா? கர்த்தர் மேல் தாகம் கொள்வோமா? அவரை நம் இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்போது, அவருடைய சமாதானத்தையே நமக்கு அவர் கொடுத்து, நாம் சந்தோஷமாக வாழும்படி செய்வார். ஆமென் அல்லேலூயா! . மான்கள் நீரோடை வாஞ்சிப்பதுப் போலென் ஆத்துமா வாஞ்சிக்குதே நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர் உம்மை ஆராதிக்கிறேன் . நீர் என் பெலனும் என் கேடகமாம் என் ஆவி என்றும் உமக்கடிப்பணியும் நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர் உம்மை ஆராதிக்கிறேன் |