இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய். - (உபாகமம் 33:29). . இஸ்ரவேல் ஒரு தேசமாக உருவெடுத்திருப்பது மிகவும் அதிசயமான ஒரு காரியமாகும். இஸ்ரவேலை அழித்து விடுவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அநேகர் இந்த சிறிய தேசத்தை சுற்றி இருந்தாலும் இந்த இஸ்ரவேல் தேசம் உருவாகி, இன்றும் ஜொலித்துக் கொண்டிருப்பது தேவனுடைய வாக்குத்தத்தங்கள் மாறாதவைகளாக இருக்கின்றன என்பதற்கான அடையாளங்களாக திகழ்கின்றன. இந்த இஸ்ரவேல் தேசம் எப்படி உருவானது என்பதைக் குறித்தும், அது உருவானப்பின் அதன் மேல் யுத்தம் செய்ய வந்த நாடுகள் எப்படி தோற்றுப் போனார்கள் என்பதைக் குறித்தும் நாம் காணப் போகிறோம். நம் கண்களுக்கு அது அதிசயமாக தோன்றினாலும், தேவனுக்கு அது கூடாத காரியமல்லவே! . கி.பி. 70 நூற்றாண்டில் தீத்து ராயன் என்னும் ரோம அரசனால் எருசலேம் பிடிபட்டு, எருசலேமிலிருந்த ஆலயம் இயேசுகிறிஸ்துவின் தீர்க்கதரிசனத்தின்படி, ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடி நிர்மூலமாக்கப்பட்டு, அங்கிருந்த யூதர்கள் உலகத்தின் எல்லா மூலைகளிலும் சிதறடிக்கப்பட்டார்கள். அவர்கள் போன நாடுகளில் அவர்களுக்கு நிம்மதியில்லை. எல்லா ஜனங்களாலும் வெறுக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும், சித்திரவதை செய்யப்பட்டும், கொலை செய்யப்பட்டும் பாடுகளை அனுபவித்த அவர்கள், தங்கள் ஆண்டவர் தங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின தேசத்தில் தங்களை கொண்டு போய் குடியேற்றுவார் என்று நம்பிக்கையுடனே அந்நிய நாடுகளில் வாழ்ந்து வந்தார்கள். . அவர்களது நம்பிக்கையும் ஜெபமும் வீணாகாதபடி, தேவன் கிரியை செய்ய ஆரம்பித்தார். இஸ்ரவேல் நாடு பிறக்க, இரண்டு உலக மகா யுத்தங்கள் நடைபெற வேண்டியதாயிருந்தது. முதல் உலக மகா யுத்தத்தினால் யூத ஜனங்கள் பலஸ்தீனா நாட்டில் போய் குடியேற ஒரு பிரகடனம் அறிவிக்கப்பட்டது. அது எப்படி என்றுப் பார்க்க போகிறோம். . டாக்டர் செய்ம் வீஸ்மேன் (Dr. Chaim Weizman) என்ற யூத இராசாயன விஞ்ஞானி ஸ்விட்சர்லாண்டு நாட்டில் ஒரு கல்லூரியில் பணியாற்றி வந்தார். ஆனால் திடீரென்று 1904ம் ஆண்டு அப்பணியை விட்டுவிட்டு இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நகரில் பேராயராக பணியாற்ற துவங்கினார். அதே சமயம் சொந்தமாக, சோள வகைகளிலிருந்து அசிட்டோன் என்னும் மருந்து செய்வதைக் குறித்தும் ஆராய்ச்சி செய்து வந்தார். . அசிட்டோன் என்னும் மருந்து கப்பல்களிலுள்ள பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாக இருந்து வந்தது. இது ஐரோப்பாவில் வளர்ந்த வந்த ஒரு வகை மரத்திலிருந்து உண்டாக்கப்பட்டது. 1914ம் வருடம் ஜெர்மனிக்கும் இங்கிலாந்துக்கும் யுத்தம் தொடங்கி, அது உலக மகா யுத்தமாக மாறிவிட்டது. அதனால் ஐரோப்பாவிலிருந்து அந்த மரங்களை கொண்டு வர வழியில்லை. அதினால் அசிட்டோன் செய்வதும் நிறுத்தப்பட்டது. பீரங்கிகளுக்கு வேண்டிய குண்டு மருந்து இல்லாதபடியால் இங்கிலாந்து திகைத்து, எங்கே யுத்தத்தில் தோற்று விடுவோமா என்று பயந்தது. . இதற்கிடையில் செய்ம் வீஸ்மானுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் பழக்கம் ஏற்பட்டது. பாதுகாப்பு மந்திரி வீஸ்மானிடம் 'அசிட்டோன் மருந்து பெரிய அளவில் செய்து தர முடியுமா' என்று கேட்டார். வீஸ்மான் அதற்கு போதிய அளவு சோளமும் தொழிற்சாலையும் கொடுத்தால் வேண்டிய அளவு தயாரித்து தருவதாக கூறினார். அப்படியே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் எல்லா நாடுகளிலிருந்தும் வேண்டிய சோளம் கொண்டு வரப்பட்டன. தொழிற்சாலைகளும் இயங்கின. வேண்டிய அளவு அசிட்டோன் மருந்தை வீஸ்மான் தயாரித்துக் கொடுத்தார். பிரிட்டன் யுத்தத்தில் ஜெயித்தது. அப்பொழுது இங்கிலாந்தின முதல் மந்திரி லாயிட் ஜார்ஜ். வெளிநாட்டு காரியதரிசி ஜேம்ஸ் பால்போர். . யுத்தத்தில் ஜெயம் பெறுவதற்கு முக்கிய காரணமாயிருந்த செய்ம் வீஸ்மானுக்கு நல்ல வெகுமதி கொடுக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணி, அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டனர். அவர் யூதர்கள் பலஸ்தீனாவில் வந்து குடியேற அனுமதிக்கப்பட வேண்டுமென்றார். அப்படியே மந்திரி சபையின் ஒப்புதலின் பேரில் வெளிநாட்டு காரியதரிசியாகிய ஜேம்ஸ் பால்போர் ஒரு பிரகடனம் 9.12.1917ல் வெளியிட்டார். அதன் சாரம்சம் யூதர்கள் எந்த நாட்டிலிருந்தாலும் அங்கிருந்து பலஸ்தீனாவில் வந்து தங்கி தங்களுக்கு அங்கே சொந்த வீடு கட்டி குடியிருப்பதற்கு பிரிட்டனுக்கு ஆட்சேபணை இல்லை என்பதே. அச்சமயத்தில் பலஸ்தீனாவின் நிர்வாக பொறுப்பு பிரிட்டனிடம் இருந்து வந்தது. அதனால் அதற்கு பால்போர் பிரகடனம் என்ற பெயரும் உண்டானது. . இந்த பிரகடனத்திற்குப் பின் யூதர்கள் பலஸ்தீனாவில் வந்து சேர ஆரம்பித்தார்கள். கர்த்தருடைய சித்தத்தின்படியும், திட்டத்தின்படியும் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை சமீபமாயிருப்பதால் அதற்கு முன் யூதர் யாவரும் திரும்ப பலஸ்தீனா தேசத்தில் வந்து சேர வேண்டும் என்றும் இருப்பதால் யூதர்கள் சேர துவங்கினாலும், அவர்களில் பலர் அதிக அசதியாயிருந்தபடியால், அவர்களுக்கு உணர்வு உண்டாக்க ஆண்டவர் இரண்டாவது உலக மகா யுத்தத்தை அனுமதித்தார். இந்த குறிப்புகள் சகோதரன் எஸ்.டி.அம்புரோஸ் அவர்கள் எழுதிய இஸ்ரவேல் என்னும் புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. ......(தொடரும்) . இஸ்ரவேல் என் ஜனமே என்றும் இடறிட வேண்டாம் யெகோவா உன் தெய்வமானால் ஏதும் பயம் வேண்டாம் . ஓங்கும் புயமும் பலத்த கரமும் உன் பக்கமேயுண்டு தாங்கும் கிருபை தயவு இரக்கம் தாராளமாயுண்டு |