கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். - (யோவான் 15:2). . மெர்ஸி என்னும் பெண், ரோஜா செடிகளை வளர்ப்பதில் மிகவும் ஆர்வமுள்ளவள். விடிந்தும் விடியாததுமாக ரோஜா செடியின் முன்தான் நிற்பாள். அவளது பககுவமான பராமரிப்பினால் செடிகள் பூத்துக் குலுங்கின. ஆனால் ஒரு செடி மட்டும் பசுமையான இலைகளுடன் வளர்ந்து நீண்டு கொண்டே சென்றது. அதில் பக்க கிளைகள் தோன்றி அதுவும் போட்டி போட்டு வளர்ந்ததேயன்றி மொட்டு விடும் சாத்தியமே அதில் காணப்படவில்லை. ஒரு நாள் கோபத்தில், 'உனக்கு உரம் போட்டு தண்ணீர் ஊற்றி என்ன பயன்?' என்று சொல்லி அதன் எல்லா இலைகளையும் ஒட்ட நறுக்கி விட்டாள். ஆனாலும் தினமும் தண்ணீர் உற்றினாள். அதை பார்த்த அவளது தோழி ஒருவள், 'இப்படி நீ செய்தால் அந்த செடி செத்துப்போய் விடும். இதை பிடுங்கி விட்டு, வேறு செடியை வை' என்றாள். ஆனால் அந்த செடி ஒரு மாத்திற்குள் துளிர்விட ஆரம்பித்தது. அழகிய பூக்களும் பூத்தது. அந்த செடி செத்து விடும் என்று சொன்ன தோழிக்கும் அது ஆச்சரியமாயிருந்தது. . வேதாகமத்திலும் யோசேப்பின் வாழ்வை பார்க்கும்போது, வசதியாக வாழ்ந்து வந்த அவன், சகோதரர்களின் பொறாமையினால் அடிமையாக விற்கப்பட்டு, எகிப்திற்கு கொண்டு செல்லப்படுகிறான். பலவர்ண அங்கியை எப்போதும் தரித்திருந்த அவனது உடை உரியப்பட்டவனாக, இரு கைகளும் கட்டப்பட்டவனாக மீதியானியர் அமர்ந்துள்ள ஒட்டகத்தின் பின்னாக நடந்ததை, அவனுடைய சகோதரர் பார்த்தபோது, 'இனி அவ்வளவுதான், யோசேப்பு என்னும் சொப்பனக்காரன் ஒழிந்தான்' என்று எண்ணியிருந்திருப்பார்கள். . . அதன்பின் போத்திபாரின் அரண்மனையில் பொய் குற்றச்சாட்டினால் சிறைக்கு அனுப்பப்பட்டபோது, 'இவன் கடவுள் இவனை கைவிட்டு விட்டார் என்று அரண்மனையில் உள்ள மற்றவர்கள் நினைத்திருப்பார்கள். கிளைகள் நறுக்கப்பட்ட அந்த ரோஜா செடியின் நிலையில்தான் யோசேப்பும் இருந்தார். உண்மை என்னவென்றால் தேவன் அவரை பலருக்கு கனிதரும் செடியாக மாற்ற விரும்பினார். அதுபோலவே மீண்டும் யோசேப்பின் வாழ்வு துளிர் விட்டது. தேவன் நினைத்தது போலவே யோசேப்பை தான் வாழ்ந்த நாட்டிற்கும் தன் உடன் பிறந்த சகோதரர்களுக்கும் கனி தரும் செடியாகவே தேவன் மாற்றி விட்டார். அல்லேலூயா! . . பிரியமானவர்களே, நாமும் கூட கிறிஸ்தவர்கள் என்ற பெயரை வைத்துக் கொண்டு ஆனால் யாருக்கும் பலன் தராத ஒரு சுகபோக வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தால் அதினாலே யாருக்கும் பிரயோஜனமில்லை. ரோஜா செடி என்றால் நாம் எதிர்ப்பார்ப்பது ரோஜா பூக்களைத்தானே! அதுபோல கிறிஸ்தவர்கள் என்றால் தேவனும் மற்றவர்களும் எதிர்ப்பார்ப்பது கிறிஸ்துவை பிரதிபலிப்பதுதான். . . கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாகிய நமக்கு வரும் போராட்டங்களையும், சோதனைகளையும் தேவன் அவற்றை நம்முடைய கிளைகளை நறுக்கும் அனுபவங்களாக மாற்றி, நம்மை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக வைக்கிறார். ஒரு வேளை நமக்கு வரும் போராட்டங்களை பார்ப்பவர்கள் இவர்கள் இவ்வளவுதான், தேவன் இவர்களை கைவிட்டுவிட்டார் என்று கூட சொல்லலாம். அத்தனை பெரிய சோதனைக்குப்பின் தேவனுடைய மிகப்பெரிய ஆசீர்வாதம் நமக்காக காத்திருக்கிறது என்பதை நாம் மறந்து போகக்கூடாது. யோசேப்பு அத்தனை பாடுகளையும் சகித்தப்பின்பு அவர் அந்த தேசத்தின் அதிபதியாக தேவன் அவரை மாற்றினார். 'யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்' (ஆதியாகமம் 49:22). அல்லேலூயா! . . நாமும் கிறிஸ்து என்னும் செடியை பற்றிக் கொண்டவர்களாக அவரது பலத்த கரத்திற்குள் அடங்கியிருக்கும்போது அவர் நமக்கு அநேக காரியங்களை கற்றுக் கொடுத்து, மீண்டும் நம்மை துளிர்விடச் செய்து கனி கொடுக்கிறவர்களாக மாற்றுவார். ஆமென் அல்லேலூயா! . கனி செடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க கிளை நறுக்கி களை பிடுங்கி கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்வீர் . . உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் - இயேசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே . |