அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். - (மத்தேயு 25:45). . ஒரு அரசனிடம் இரண்டு பேர் நியாயந்தீர்க்கும்படியாக வந்து நின்றார்கள். அரசன் அவர்களை நோக்கி என்ன விஷயம் என்று கேட்க, ஒருவர், 'நான் என் கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்ற போது என் பின்னாலேயே வந்த ஆடு, நான் கவனியாத நேரத்தில் கிணற்றில் விழுந்து விட்டது. அதை நான் திரும்ப மீட்க எவ்வளவோ முயற்சித்தேன். என்னால் தனியாக முடியவில்லை. அந்த பக்கம் ஆள் அரவமற்ற இடமாக இருந்தபடியால், யாராவது அந்த பக்கம் வர மாட்டார்களா என்று பார்த்துக் கொண்டே என் ஆட்டை வெளியே இழுக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். . அந்த சமயம் இந்த மனிதர் அந்த பக்கமாக வந்துக் கொண்டிருந்தார். நான் அவரைக் கூப்பிட்டும் அவர் காதில் விழாதவாறு போய்க் கொண்டே இருந்தார். நான் எத்தனை முறை கூப்பிட்டும் அவர் எனக்கு உதவவே இல்லை. என்னை தனியாக விட்டு விட்டுப் போய் விட்டார்' என்று குற்றம் சாட்டினார். . அதற்கு கூட இருந்த மனிதர், ' நான் என்ன செய்வது, நானும் அவசரமாக ஒரு வேலையினிமித்தம் என் வீட்டிற்கு விரைந்து சென்று கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் இவர் கூப்பிட்டார். என்னால் உதவ முடியவில்லை' என்று கூறினார். . அதைக் கேட்ட அரசர், இரண்டாவது ஆளைப்பார்த்து, 'நீர் செய்தது தவறு. என்ன தான் அவசரமாயிருந்தாலும், ஒரு உயிர் போராடிக் கொண்டிருக்கும்போது, நீ உதவி செய்யாமல் போனது தவறு. ஆகவே நீ இந்த மனிதருக்கு 500 வெள்ளிக்காசுகளை தண்டமாக செலுத்த வேண்டும்' என்று தீர்ப்பளித்தார். . பிரியமானவர்களே, நாம் சில காரியங்களை செய்தால்தான் அது பாவம் என்று எண்ணுகிறோம். ஆனால் நாம் சில காரியங்களை செய்யாமல் போனாலும் கூட அது பாவமாகவே காணப்படும். 'ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்' (யாக்கோபு 4:17) என்று வேதம் நமக்கு கூறுகிறது. . உதாரணமாக ஐசுவரியவான் லாசரு குறித்து இயேசு கிறிஸ்து கூறின சம்பவத்தில், ஐசுவரியவான் பெரிய தவறு எதுவும் செய்ததாக வேதத்தில் கூறப்படவில்லை. 'ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்' (லூக்கா 16:19) என்று வேதம் அவனைக் குறித்து கூறுகிறது. . அவன் செய்த தவறு என்ன? தன் வீட்டின் வாசலருகே கிடந்து, அவனிடமிருந்து விழும் பருக்கைகளை தின்றுக் கொண்டிருந்த லாசருவிற்கு இரங்காமல் போனதுதான். மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டிய தருணத்தில் இரக்கம் காட்டாமற் போவதும், நன்மை செய்ய முடியும்போது, அதை செய்யாமல் மறுத்து விடுவதும் பாவமாக மாறி விடுகிறது. ஒரு வேளை தேவன் நமக்கு மற்றவர்களுக்கு உதவும்படியான ஒரு நிலையில் வைத்திருக்கலாம். ஆனால் நாம் மற்றவர்களுக்கு உதவாமற் போகும் பட்சத்தில், அது தேவனுடைய பார்வையில் பாவமாகும். . இயேசுகிறிஸ்து, இனி நடக்க இருக்கும் காரியங்களை குறித்து சீஷர்களுக்கு சொன்னபோது, ஒரு காரியத்தை கூறினார், 'அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார். . அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள். அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்' (மத்தேயு 25:41:45). . இந்த இடத்தில் கிறிஸ்து கடிந்து கொள்கிறவர்கள் பெரிய பாவத்தை செய்து கடிந்து கொள்ளப்பட்டவர்கள் அல்ல, ஆனால், தாகமாயிருந்தவர்களுக்கு தண்ணீரை கொடுக்கவில்லை. ஆடை இல்லாமல் இருந்தவர்களுக்கு உடைகளை கொடுக்கவில்லை. வியாதியாய் இருந்தவர்களை போய் விசாரிக்கவில்லை. சிறையில் வாடிக் கொண்டிருந்தவர்களை போய் விசாரிக்கவில்லை. நாம் இந்த காரியங்களை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. ஆனால் கர்த்தருடைய பார்வையில் அது தவறு என்று இந்த வசனங்கள் நமக்கு விளக்குகிறதல்லவா? . பிரியமானவர்களே, நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்நாட்களில் தேவன் நமக்கு கொடுத்திருக்கும் செல்வாக்குகளை பயன்படுத்தி, நாம் மற்றவர்களுக்கு உதவவும், நன்மை செய்யவும் அழைக்கப்பட்டிருக்கிறோம். பாவம் செய்வதினால் மாத்திரம் நாம் நியாயந்தீர்க்கப்பட மாட்டோம். நாம் செய்யாத காரியத்திற்காகவும் நாம் நியாயந்தீர்க்கப்படுவோம். . 'நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்' (எஸ்தர் 4:14) என்ற வார்த்தைகளின்படி மொர்தெகாய் எஸ்தர் இராஜாத்தியிடம் தன் ஜனத்திற்கு வரப்போகும் அழிவைக் குறித்து அவள் கவனயீனமாக இருந்தால், இவ்வாறு நடக்கும் என்று எச்சரிக்கிறதைக் குறித்து காண்கிறோம். . தேவன் நமக்கு கொடுத்திருக்கிற மேன்மைகளையும், செல்வாக்குகளையும், செல்வங்களையும், மற்ற காரியங்களையும் சரியான முறையில் மற்றவர்களுக்கு உதவவும், நன்மை செய்யவும் பயன்படுத்துவோம். 'அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்' என்று சொல்வார். ஆமென் அல்லேலூயா! . மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம் இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம் அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய் இராஜ பாதையை செம்மையாக்குவோம் நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே அதி வேகமாய் செயல்படுவோம் |