ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - (கலாத்தியர் 5:22-23). . ஒன்பதாவது சுளை......... இச்சையடக்கம்: . கடந்த ஒன்பது நாட்களாக நாம் தொடர்ந்து, ஆவியின் கனியைக் குறித்து தியானித்து வருகிறோம். இந்த கனியை கொடுப்பதற்காகவே தேவன் நம்மை ஏற்படுத்தினார் என்று முதல் கட்டுரையில் பார்த்தோம். ஒரு மனிதனின் வாழ்வில் இந்த ஒன்பது சுளைகளாகிய ஆவியின் கனி இருந்தால், அவனை சுற்றி இருக்கிற இடம் குட்டி பரலோகமாகிவிடும். இந்த ஒன்பது சுளைகளால் நிரம்பிய ஆவியின் கனி நம் வாழ்வில் காணப்பட வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் வாஞ்சிக்க வேண்டும், அதற்காக ஜெபிக்க வேண்டும். தொடர்ந்து கடைசி சுளையாகிய இச்சையடக்கத்தைக் குறித்து காண்போம். . ஒரு இடத்தில் தீப்பற்றி எதற்கும் அடங்காமல் எரிகிறது என்றால் அது அபாயகரமானதாகும். ஒரு கார் பிரேக் பிடிக்க முடியாமல் போனதால் கட்டுக்கடங்காமல் சென்றால் அதுவும் அபாயமாகும். ஒரு காளையோ ஒரு யானையோ கட்டுக்கடங்காமல் ஓடினால், பக்கத்தில் இருப்பவர்களுக்கு அபாயமாகும். ஆனால் ஒரு மனிதன் கட்டுக்கடங்காமல், மனதை அடக்காமல் இருப்பானானால் அவன் மற்ற முந்தின யாவற்றைப் பார்க்கிலும் மிகவும் அபாயகரமானவன். அதனால்தான் 'பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்' (நீதிமொழிகள் 16:32) என்று வேதம் கூறுகிறது. . மனதையும், கண்களையும் அதனதன் இஷ்டத்திற்கு விடுவதால்தான் பாவம் நம் வாழ்வில் நுழைகிறது. கண்களின் இச்சையினால்தான் ஆதித்தாயாகிய ஏவாள் பாவத்தில் விழுந்தாள். . கிரேக்க நாட்டில் பாரம்பரிய கதை ஒன்று உண்டு. அடலாண்டா என்னும் பெண் மிகவும் வேகமாக ஓடக்கூடியவள். அது மாத்திரமல்ல, குறிதவறாமல் அம்பெய்வதிலும், சிறந்த வேட்டைக்காரியுமாயிருந்தாள். அவளை திருமணம் செய்ய அநேகர் முயன்றனர். அவர்களுக்கு அவள் ஒரு நிபந்தனை விதித்தாள். தன்னை ஓட்டப்பந்தயத்தில் யார் தோற்கடிக்கிறார்களோ, அவனை மணப்பதாகவும், இல்லாவிட்டால் அவனை கொன்று விடுவதாகவும் நிபந்தனை விதித்தாள். அநேகர் அவளோடு போட்டிப் போட்டு தோற்று தங்கள் தலைகளை இழந்தனர். . ஹிப்போமெனஸ் என்பவன் இவளை நேரடியாக மோதி, தோற்கடிக்க முடியாது, எப்படியாவது தந்திரமாக தோற்கடிக்க வேண்டும் என்று சொல்லி, மூன்று தங்க ஆப்பிள்களை கொண்டு வந்து, ஓடும்போது, அவ்வப்போது ஒவ்வொன்றாக வீசினான். அடலாண்டா அது என்ன என்று பார்க்க குனிந்து எடுக்கும்போது, அவன் வேகமாக ஓடி ஜெயித்து, அவளுக்கும் மாலையிட்டான் என்பது கதை. . எப்பேற்பட்ட வீராங்கனையாக இருந்தாலும், கண்களின் இச்சை என்று வரும்போது விழுந்து போவது சகஜம். தன்னுடைய பெலத்தினால் அநேகரை விழப்பண்ணினவள், கண்களின் இச்சையினால் அவளே விழுந்துப் போனாள். . 'பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்' (1 கொரிந்தியர் 9:25) என்றுப் பார்க்கிறோம். ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும், அல்லது கால்பந்து விளையாட வேண்டும் என்றால் அதற்கான தொடர் பயிற்சியில் ஈடுபடவேண்டும். இச்சையடக்கம் உள்ளவர்களாக கண்டதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. அப்படி அவர்கள் தங்களை ஒரு கட்டுக்குள் வைத்திருந்தால்தான், போட்டி அன்று நன்கு விளையாடி ஜெயிக்க முடியும். அவர்கள் அழிவுள்ள ஒரு கப்பையோ, பணத்தையோ பெறும்படி அவ்வளவு இச்சையடக்கமுள்ளவர்களாக தங்கள் சரீரங்களை பாதுகாக்கிறார்கள். . ஆனால் நாம் கர்த்தருக்குள் பொறுமையோடு நம் ஓட்டத்தை தொடர்ந்து ஓடி ஜெயிக்கும்போது, அழிவில்லாத நித்திய நித்தியமாய் நமக்கு கிடைக்க போகிற கிரீடத்தை பெறுவோம். அப்படி பெற வேண்டுமென்றால் எத்தனை கவனமாக, இச்சையடக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்! . சிலருக்கு உணவு பொருட்களை பார்த்தவுடன் ஒரு இச்சை, சிலருக்கு இனிப்பு பண்டங்களை பார்த்தவுடன் ஒரு இச்சை, சிலருக்கு மதுபான வகைகள் மேல் இச்சை, சிலருக்கு பெண்களை பார்த்தவுடன் இச்சை, சிலருக்கு நகைகளை பார்த்தவுடன் இச்சை, சிலருக்கு நல்ல புடவைகளை பார்த்தவுடன் இச்சை என்று இச்சையின் இரகங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றில் நாம் எந்த இரகத்தில் இருக்கிறோம் என்று தெரியவில்லை. . நாம் இப்படியே இதுப் போன்ற இச்சைகளில் விழுந்துக் கிடப்பது கர்த்தருடைய சித்தமல்ல, நாம் ஆவியின் கனியாகிய இச்சையடக்கத்தை உடையவர்களாக மாற வேண்டும் என்பதே அவரது விருப்பம். கொஞ்சம் கொஞ்சமாக நாம் நம்மை அடக்கி, இந்த இச்சைகளில் இருந்து வெளிவர வேண்டும். . 'கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்' (கலாத்தியர் 5:24) என்று வேதம் கூறுகிறது. சிலுவையில் அறைந்து விட்ட ஆசை இச்சைகளை நாம் திரும்பவும் நம்முடைய சிந்தனையில், சரீரத்தில் கொண்டு வருவோமானால், நாம் கிறிஸ்துவினுடையவர்கள் அல்லவே! . எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் நம்முடைய வாழ்க்கையை ஆராய்ந்து, நான் ஏதாவது இச்சையில் விழுந்திருக்கிறேனா என்று பார்த்து, கர்த்தருடைய ஆவியானவரின் கிருபையுடன் வெளிவர முயற்சிக்க வேண்டும். ஒருவேளை விழுந்திருந்தால் எழுந்தரிக்க முயற்சிக்க வேண்டும். . நாம் தவறி எங்காவது விழுந்து விட்டால், மற்றவர்கள் பார்க்குமுன் வேகமாக எழும்பி, எதுவுமே நடக்காததுப்போல தூசியை தட்டி எழுந்துச் செல்வதுப்போல பாவத்தில் விழுந்திருந்தாலும், கர்த்தருடைய கிருபையுடன் மீண்டும் எழும்பி, தூசியைப் போன்ற அழுக்கான பாவங்களை உதறிவிட்டு, மீண்டும் கர்த்தருடைய வழிகளில் நடக்க பிரயாசப்பட வேண்டும். விழுந்த இடத்திலேயே விழுந்துக் கிடந்தால் பார்ப்பவர்கள் நகைப்பார்கள், வெட்கப்பட வேண்டிய நிலை ஏற்படும். . ஆவியின் கனியாகிய ஒன்பது சுளைகளும் நம் வாழ்வில் நிறைந்து காணப்படட்டும். அப்போது நம்மை காண்பவர்கள் நம்மில் கிறிஸ்துவை காண்பார்கள். நம்மால் தனியாக இந்த சுளைகளை வெளிப்படுத்த முடியாதுதான். ஆனால் கர்த்தருடைய ஆவியானவரே இந்தக் கனியை நமக்கு தருகிறபடியால், அவருடைய உதவியுடன், 'பலத்தினாலும் அல்ல, பராக்கிரமம் அல்ல, ஆவியினால் எல்லாம் ஆகும்' என்ற வார்த்தையின்படி ஆவியானவர் நமக்கு உதவி செய்ய வல்லவராகயிருக்கிறார். . நம் வாழ்வில் ஆவியின் கனியை வெளிப்படுத்துவோமா? கர்த்தருக்கு பிரயோஜனமான, எந்த நற்கிரியையும் செய்ய ஆயத்தமாக்கப்பட்ட பாத்திரங்களாக நற்கனியை வெளிப்படுத்தி அவருக்காக பிரகாசிப்போமா? '...நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்' (யோவான் 15:16) ஆமென் அல்லேலூயா! . தேவ ஆவியில் நடந்த மனிதரெல்லாம் அக்கினியாய் எழும்பி ஜொலித்ததுப் போல் என்னை மாற்றுமே என்னை மாற்றுமே கலங்கரை விளக்காய் என்னை மாற்றுமே . தூய ஆவியே என்னை நிரப்பிடுமே தேவ ஆவியே என்னை நடத்திடுமே ஆவியில் நடக்கணுமே – தேவ வார்த்தையில் நிலைக்கணுமே |