நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். - (மத்தேயு 24:44). . இரண்டு பேர் மாரத்தான் என்னும் ஓட்டப்பந்தயத்தில் பங்கெடுப்பதற்காக பெயரை கொடுத்திருந்தனர். ஒருவர் தினந்தோறும் மைல் கணக்கில் ஓடி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். உடற்பயிற்சியும் மேற்கொண்டார். . மற்றவர் சாதரணமாக தூங்குவதைவிட இன்னும் இரண்டு மணி நேரம் சேர்த்து தூங்க ஆரம்பித்தார். ஒரு உடற்பயிற்சியோ, ஓட்டம் ஓடியோ பழகவோ இல்லை. . மாரத்தான் ஓடும் நாள் வந்தது. 26.2 மைல் தூரம் ஓட வேண்டும். யார் ஜெயித்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? நிச்சயமாக பயிற்சி எடுத்தவர்தான். அடுத்தவர் ஒரு மைல் தூரம் ஓடுவதற்குள் களைப்பாகி நிறுத்தியிருப்பார். . இரண்டு கிறிஸ்தவர்கள் வரப்போகிற கொடுமையான நாட்களுக்கு தப்பித்துக் கொள்ளும்படி போதிக்கப்பட்டிருந்தனர். அதை உண்மையாக எடுத்துக் கொண்டு, ஒருவர் ஜெபித்து கர்த்தரோடு தான் கொண்டிருந்த உறவில், ஐக்கியத்தில் நிலைத்திருந்து, தினமும் வேதம் வாசித்து, தன்னால் இயன்ற வேத வார்த்தைகளை மனனம் செய்து கர்த்தருக்குள் தன்னுடைய ஆவியில் ஒருமனப்பட்டிருந்தார். . மற்றவர் ஆலயத்திற்கு செல்லும்போதுதான் வேதத்தை பிரிப்பார். ஆலயத்தில் ஜெபிக்கும்போதுதான் ஜெபிப்பார். ஞாயிற்றுக் கிழமை வந்தால்தான் அவருக்கு கர்த்தரைப்பற்றியும், ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்கிற ஞாபகமும் வரும். . ஒரு நாள் அவர்கள் வாழும் பகுதியில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படும் நாட்கள் வந்தது. கர்த்தரோடு இணைந்திருந்தவர் கர்த்தர் தன்னை எந்த நேரத்திலும் கைவிடமாட்டார் என்று விசுவாசத்தோடு காத்திருந்து, வெற்றியும் பெற்றார். மற்றவரோ கர்த்தரையும், சபையையும், தன் நண்பர்களையும், குடும்பத்தினரையும் இந்த நிலைக்கு அவர்களே காரணம் என்று சாட ஆரம்பித்தார். . பிரியமானவர்களே, நாமும் ஒரு மிகப்பெரிய சம்பவம் நிகழ்வுற காத்திருக்கிறோம். அதுதான் கர்த்தருடைய இரகசிய வருகை. நாம் எந்த அளவு கர்த்தரோடு ஐக்கியம் கொண்டுள்ளோம் என்பதைப் பொறுத்தே நாம் எடுத்துக் கொள்ளப்படுதலும் இருக்கும். நாம் கர்த்தரோடு கொண்டுள்ள ஐக்கியத்தில் நிலைத்திருப்போமானால் அவர் வந்தவுடன் நம்மை அடையாளம் கண்டு கொள்வார். நாமும் அவரோடு செல்லுவோம். . 'அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்' (மத்தேயு 24:40-41) என்று இயேசுகிறிஸ்து கூறினார். இரண்டு பேர் சேர்ந்து ஒரு காரியத்தை செய்துக் கொண்டிருக்கும் திடீரென்று ஒருவர் மறைந்துப் போனால்,எபப்டி இருக்கும்? கர்த்தரின் வருகையிலும் அப்படியே இருக்கும். . நம்முடைய நிலைமை எப்படி இருக்கிறது? கர்த்தரோடு உள்ள ஐக்கியத்தில் நிலைத்திருக்கிறோமா? கர்த்தரும் வேண்டும், உலகமும் வேண்டும் என்று இரண்டு மனமுள்ளவர்களாக இருக்கிறோமா? ஏனோக்கு கர்த்தரோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தார். திடீரென்று எடுத்துக் கொள்ளப்பட்டார். அவர் இருந்த நாட்களில் அநேகர் இந்த உலகத்தில் இருந்தார்கள். ஆனால் கர்த்தர் யாரையும் எடுத்துக் கொள்ளவில்லை. கர்த்தரோடு ஐக்கியம் கொண்டு, அவரோடு இணைந்து வாழ்ந்த ஏனோக்கையே தம்மிடம் எடுத்துக் கொண்டார். . கிறிஸ்துவின் வருகையில் கைவிடப்பட்டவரோ அந்த நேரத்தில் கர்த்தரையோ, சபையையோ, குடும்பத்தையோ, நண்பர்களையோ குற்றம் சொல்லி எந்தப் பயனும் இல்லை. கர்த்தருடைய எச்சரிக்கைக்கு செவிக் கொடுத்தவர்கள் தங்களை ஆயத்தம் செய்துக் கொள்வார்கள். நிர்விசாரமாக கர்த்தர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பவர்களோ கைவிடப்படுவார்கள். கர்த்தரோடு வாழ்வோம். அவரோடுள்ள ஐக்கியத்தில் எப்பொழுதும் நிலைத்திருப்போம். அப்போது அவர் எப்போது வந்தாலும் நாம் அவரை எதிர்க்கொள்ள முடியும். மாரநாதா! அல்லேலூயா! . அவர் வருகையை எதிர்ப்பார்க்கும் மாந்தர்க்கு அவர் வருகை மாபெரும் மகிழ்ச்சி அவர் வருகையை எதிர்பாரா மாந்தர்க்கு அவர் வருகை மாபெரும் அதிர்ச்சி . என் இயேசு இராஜன் வருவார் எண்ணிலடங்கா தூதரோடு என்னை மீட்ட இயேசுஇராஜன் என்னை ஆளவே வருவார் |