பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். - (யோவான் 7:37-38). . நயாகரா நீர் வீழ்ச்சியில் ஒரு நிமிடத்திற்கு 50,00,000 டன் தண்ணீர் அருவியாக கொட்டப்படுகிறது. ஆனால் 1848ம் ஆண்டு, மார்ச் மாதம் 29ம் தேதி அந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது திடீரென்று நின்றது. அக்கம் பக்கத்தில் குடியிருந்தவர்கள், நீர்வீழ்ச்சியின் சத்தத்தை கேட்காததால், உலகின் கடைசி நேரத்திற்கு வந்துவிட்டோம் என்றே நினைத்தனர். ஆனால், 30 மணிநேரம் கழித்து, திரும்ப தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. . என்ன நிகழ்ந்தது? எரிக் ஏரி (Lake Erie) என்னுமிடத்தில் ஒரு பெரிய பனி கட்டி உடைந்து, அது மிதந்து வந்து, நயாகரா நீர்வீழ்ச்சியின் மேற் மட்டத்தில் அடைத்து கொண்டதால், தண்ணீர் போக முடியாதபடி நின்று போனது. திரும்ப வெயில் ஏறஏற பனிகட்டி உருகி, தண்ணீர் திரும்ப பாய தொடங்கியது. பனிகட்டியினால், அவ்வளவு பெரிய நயாகரா நீர்வீழ்ச்சியின் தண்ணீர் கொட்டப்படாமல் நின்று போனது. . நம்முடைய வாழ்விலும் தேவனுடைய அன்பும், சந்தோஷமும் சமாதானமும் தொடர்ந்து பாய வேண்டுமானால், நம் வாழ்வில் எந்த பனிகட்டி போன்ற தடையும் காணப்படக்கூடாது. தேவன் பட்சபாதமுள்ள தேவனல்ல, அவர் நம்மேல் அன்பை எப்போதும் வெளிப்படுத்துகிற தேவனாகவே இருக்கிறார். ஆனால் நம் வாழ்வில் காணப்படும் பாவ பனிகட்டிகள், அவருடைய செயல்களுக்கு பெரிய தடையை கொண்டு வருகின்றன. அவைகளை இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி அகற்றி விடும்போது, தேவனுடைய சமாதானமும், அன்பும் சந்தோஷமும் நம் வாழ்விலும் திரும்பவும் கரைபுரண்டு ஓடும். . இயேசுகிறிஸ்து சொன்னார், 'என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்' என்றார். இந்த ஜீவத்தண்ணீர் நம் உள்ளத்திலிருந்து நதியாக ஓடும்போது, மற்றவர்களுக்கு அது பிரயோஜனமாக மாறுகிறது. ஜீவத்தண்ணீராகிய பரிசுத்த ஆவியானவர் நம் உள்ளத்திலிருந்து நதியாக புறப்பட்டு செல்லும்போது, 'சம்பவிப்பது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மச்சங்களும் உண்டாயிருக்கும்; இந்த நதி போகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும். நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும்; அவைகளின் கனிகள் புசிப்புக்கும், அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்' - (எசேக்கியேல் 47:9,12). . இத்தனை ஆச்சரியமான காரியங்கள் அந்த நதி செல்லுமிடமெங்கும் நடக்கபோகிறபடியினால், அதை நாம் நம் கடின இருதயத்தினாலோ, பாவ கறைகளினாலோ கட்டுப்படுத்தாமல், அதன் போக்கிற்கு விட்டு விடும்போது, அந்த ஜீவநதி போகுமிடமெங்கும் யாவருக்கும் ஆரோக்கியத்தை கொடுக்க கூடியவர்களாக நாம் மாறுவோம். இந்த வசனங்கள், தீர்க்கதரிசன வார்த்தைகளாக உப்புக்கடலைப்பற்றி எழுதியிருந்தாலும், மிகுந்த உப்பு ஏறினபடியினால் பிரயோஜனமற்ற அந்த உப்புக்கடலே செழிப்பானதாக மாறும் என்றால், நம் வாழ்வில் பனிக்கட்டி போன்ற பாவங்களும், சுயநலங்களும், பெருமைகளும் நிறைந்த வாழ்க்கையை நாம் விட்டுவிடும்போது பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் நிறைந்த வாழ்க்கை அநேகருக்கு செழிப்பை நம்மூலம் நிச்சயமாக கொண்டு வரும் என்பதில் சந்தேகமேயில்லை! நாம் செல்லுமிடமெங்கும், நம் வார்த்தைகளினால், நம்மிடத்தில் உள்ள அபிஷேகத்தினால், நம்முடைய கனி நிறைந்த வாழ்க்கையினால் மற்றவர்களுக்கு ஆவிக்குரிய ஆரோக்கியத்தை கொடுக்கத்தக்கதாக நம்முடைய வாழ்க்கை மாற்றப்பட நம்மை கர்த்தருக்கு அர்ப்பணிப்போம். கர்த்தரின் சமாதானமும், சந்தோஷமும் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் கரைபுரண்டு ஓடட்டும்! ஆமென் அல்லேலூயா! . சந்தோஷமும் சமாதானமும் என் உள்ளத்தில் பொங்குதம்மா பாவமெல்லாம் போக்கிவிட்டார் பயங்களெல்லாம் நீக்கிவிட்டார் சர்வ வல்லவர் என் சொந்தமானார் சாவை வென்றவர் என் ஜீவனானார் . |