ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை . -(கலாத்தியர் 5:22-23). . எட்டாம் சுளை...... சாந்தம்: . 'சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்' (மத்தேயு 5:5) என்று இயேசுகிறிஸ்து கூறினார். அதற்கு உதாரணமாக, மோசே நாற்பது வருடங்கள், இஸ்ரவேலரை வனாந்தரத்தில் நடத்தி வந்தார். அவர்கள் எத்தனையோ முறை அவரை கோபமூட்டினபோதும், முறுமுறுத்தபோதும், கோபப்படாமல், சாந்தமாக வழிநடத்தினார். 'மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்' (எண்ணாகமம் 12:3) என்று வேதம் கூறுகிறது. ஆரம்பத்தில் கோபம் கொண்டு, ஒரு எகிப்தியனை கொன்ற மோசே, வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகள் ஆடுகளை மேய்த்தபோது, அவருடைய கோப குணம் எல்லாம் மாறி, சாந்தத்தை கற்றுக் கொண்டார். அதன்பின் தேவன் அவரை தம் ஜனத்தை நடத்திச் செல்லும் தலைவனாக அவரை தெரிந்துக் கொண்டார். அல்லேலூயா! . ஒரு மனிதனோ, மனுஷியோ சாந்தமாக இருந்தால், அது அவர்கள் முகத்தில் பிரதிபலிக்கும். அவர்கள் பேசும்போது வெளிப்படும், 'என்ன சாந்தமா பதிலளிக்கிறார் பாருங்க' ன்னு மற்றவர்கள் சொல்வார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். அவர்களின் இருதயம் சாந்தமாக இருந்தால், அவர்கள் முகமே சொல்லும், அவர்கள் சாந்தமுள்ளவர்கள் என்று. . ஒரு மனிதன் தன் வீட்டில் மீனை வளர்க்க ஆசைப்பட்டு, போய் தங்க மீன்களை வாங்கி வந்தான். அதன்பின் அவற்றை வைக்க ஒரு தொட்டி வேண்டும் என்று கடைகளுக்கு போய் பார்த்தபோது, முதலிலேயே உபயோகிக்கப்பட்டு, அழுக்காயிருந்த ஒரு தொட்டி சுமாரான விலையில் கிடைத்தது. அதை நன்கு சோப்புப் போட்டுக் கழுவி, நன்கு சுத்தமாக்கி தான் ஆசையாக வாங்கி வைத்திருந்த மீன்களை அந்தத் தொட்டியில் தண்ணீரை ஊற்றி வைத்தான். . நன்கு நீந்திக் கொண்டிருந்த மீன்களில் ஒன்று, அதை வைத்த எட்டு மணி நேரத்தில் மரித்துப் போனது. 'ஐயோ என்ன இவ்வளவு சீக்கிரம் மரித்து விட்டதே' என்று துயரப்படுவதற்குள், இரண்டு நாளைக்குள் மற்ற எல்லா மீன்களும் மரித்துப் போயின. ஏன் மரித்தது என்று தனக்கு தெரிந்த, பெரிய மீன் தொட்டியை தன் வீட்டில் வைத்திருக்கும் தன் நண்பனிடம் கேட்டபோதுதான் தெரிய வந்தது, சோப்பு போட்டு ஒருபோதும் மீன்தொட்டியை கழுவக்கூடாது என்பது. என்ன செய்வது, மீன்கள் அனைத்தும் மரித்துப் போனதே! . சிலவேளைகளில் நாம் மற்றவர்களை சரியாக்குகிறோம் என்ற பெயரில் அவர்களை கோபத்தோடு, குற்றம் சாட்டி, கடினமான வார்த்தைகளை பேசி, எப்படியாவது சரியானால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் அது அவர்களை, அவர்களது மனதை கொன்று விடுகிறது என்று அறியாமல் செய்கிறோம். . 'மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்' (நீதிமொழிகள் 15:1) என்று பார்க்கிறோமல்லவா? நாம் பேசும் வார்த்தைகள் மெதுவானதாக இருந்தால் எதிரில் இருப்பவர்கள் காட்டுக்கத்து கத்தினாலும், அவர்களை மெதுவாக பேச வைக்கும், அவர்களது கோபத்தை அடக்கும். ஆனால் அதை விட்டு விட்டு நாமும் காட்டுக்கத்து கத்தினால், அவர்களும் பதிலுக்கு கத்துவார்கள், கோபம் அதிகமாகி, அடிதடியிலும், மற்ற விளைவுகளையும் கொண்டு வரும். சாந்தமான பதில் சிலவேளைகளில் கோபத்தை கொண்டு வந்தாலும், முடிவில் அது கோபத்தை மாற்றும். . 'நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்ளூ அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்' (மத்தேயு 11:29) என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஏனெனில் அவர் சாந்தக்குணமுள்ளவராக இருந்தார். அவரிடத்திலிருந்து இந்த சாந்தத்தையும், மனத்தாழ்மையையும் நாம் கற்றுக் கொண்டால், இந்த உலகத்தில், வீடுகளில், சபைகளில், சமுதாயங்களில், வேலை இடங்களில், போராட்டங்கள் இருக்காது, மாறாக, அமைதியும், இளைப்பாறுதலும் உண்டாகும். அது இல்லாமல் இருப்பதால்தான் எங்குப் பார்த்தாலும் இத்தனை பிரச்சனைகள்! . பிரியமானவர்களே நம்மிடத்தில் ஆவியின் கனியாகிய சாந்தம் எப்போதும் கிரியை செய்யக்கடவது. நாம் அப்படி அமைதலுள்ள ஆவியுடன் சாந்தமாய் இருப்போமானால் அநேகர் நம்மிடம் வருவார்கள். எப்போதும் கோப முகத்துடன், சர்புர் என்று இருந்தால், நம்மிடம் வருவதற்கு மற்றவர்கள் அஞ்சுவார்கள். . 'அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது' (1பேதுரு 3:4). அப்படிப்பட்ட தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்ற சாந்தகுணம் நம்மை அலங்கரிக்கட்டும்! அதினால் தேவ நாமம் மகிமைப்படட்டும்! ஆமென் அல்லேலூயா! . கனியில்லாத மரத்தைப் போல நான் வாடி நின்றேனே கர்த்தர் தம் கிருபையாலே கனித்தர செய்திட்டாரே . நான் கூப்பிட்ட நாளில்தானே இயேசு சுவாமி செவிக் கொடுத்தாரே நா வறண்ட வேளையிலே ஜீவன் தந்திட்டாரே |