ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை. - (பிரசங்கி 8:8). . ஒரு அரசன் மரண தருவாயிலிருந்த தனக்கு பிரியமான அமைச்சரை பார்க்க சென்றிருந்தார். அப்போது அவரிடம், "நீர் அமைச்சராயிருந்தபோது எனக்கு அநேக நன்மையான ஆலோசனைகள் கூறினீர். ஆகையால் நீர் இப்போது எதை கேட்கிறீரோ அதை தருகிறேன்" என்று கூறினார். அப்போது அந்த அமைச்சர், "அரசே, நான் சாவதற்குமுன் ஒரு நாள் எனக்கு கூட்டி தர வேண்டும்' என்று கேட்டார். அதற்கு அரசர், 'என்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட எந்த காரியத்திலும் நீர் எதை கேட்டிருந்தாலும் நான் அதை உமக்கு கொடுத்திருப்பேன், என்னால் இயலாத காரியத்தை கேட்கிறீர், மன்னிக்கவும், என்னால் அதை தர முடியாது' என்று கூறினார். . ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை என்று வேதம் நமக்கு திட்டவட்டமாக தெரிவிக்கிறது. நாம் யாவரும் ஒரு நாளில் மரிக்கவே போகிறோம். ஆனால் அதை குறித்த பயம் தான் மற்ற எல்லா பயங்களிலும் அதிக கடினமானது. கொடுமையானது. நாம் அதை விரும்புகிறோமோ இல்லையோ, ஒரு நாள் நாம் மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும். நாட்டை ஆளுகிற பெரிய அரசனானாலும், ஒன்றுமே யில்லாத ஆண்டியானாலும் ஒரு நாள் மரணத்தை சந்தித்தே ஆகவேண்டும். அதை பணத்தை கொடுத்து நிறுத்த முடியாது. . அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே (எபிரேயர் 9:27) என்று வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் மரிக்கவே வேண்டும். ஆனால் மரணம் என்பது ஒரு முடிவு அல்ல. அநேக மதங்கள் வித்தியாசமாய் போதிக்கின்றன. ஆனால் கிறிஸ்தவம் என்ன போதிக்கிறது? நாம் உலகில் வாழ்வது, நிரந்தரமல்ல, ஆனால் மறுமையில் வாழ்வதே நிரந்தரம் என்று போதிக்கிறது. அதாவது நாம் இந்த பூலோகத்தை விட்டு, தேவனோடு என்றும் வாழும்படியாக நித்திய ஜீவனை பெற்றவர்களாக என்றென்றும் வாழுவோம் என்று வேதம் கூறுகிறது. . அநேக பரிசுத்தவான்கள், இந்த பூமியில் அரதேசியும் பரதேசிகளுமாயிருந்து வாழ்ந்து, பரம தேசத்தை தங்களுக்கென்று சுதந்தரித்து கொண்டார்கள். 'இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள். இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள். தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே. அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே' - (எபிரேயர் 11:13-16). சரி, இவர்களெல்லாரும் எந்தவித பயமுமின்று தைரியமாய் மரணத்தை எதிர்கொண்டு மரித்தது எப்படி? தேவன் அவர்களுக்கென்று ஒரு நகரத்தை பரலோகத்தில் ஆயத்தபடுத்தியிருந்தபடியால், அவர்கள் அதை ஆவலோடு வாஞ்சித்து, மரித்தார்கள். . ஓவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் அந்த நம்பிக்கை இருக்க வேண்டும். நிச்சயமாக நம் உறவினர், இரத்தகலப்பானோர் மரிக்கும்போது, அது மிகவும் வேதனையுள்ளதுதான். ஆனால் நமக்கு நிச்சயமான ஒரு நம்பிக்கை உண்டு. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களை நாம் திரும்ப காண்போம் என்ற திட நம்பிக்கை உண்டு. . மட்டுமல்ல, உயிரோடு இருக்கிற நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால் மரணத்திற்கு பின் நிச்சயமாக நாம் அவருடன் இருப்போம். கிறிஸ்துவுக்குள் நாம் இல்லாதிருந்தால் அந்த நம்பிக்கை நமக்கு இல்லை. மரணத்திலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாக, பயமில்லாதவர்களாக இருக்க வேண்டுமென்றால் கிறிஸ்துவை ஏற்று கொள்ளவே வேண்டும். மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் நம்பிக்கை இல்லை, இல்லவே இல்லை. . கிறிஸ்து நமக்குள் இருந்தால் இன்று நாம் மரித்தாலும் நான் கிறிஸ்துவோடு இருப்போம், நாம் மரிக்காவிட்டால் கிறிஸ்து நமக்குள் இருக்கிறார் என்கிற ஆணித்தரமான ஒரு நம்பிக்கை நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும்போது மரணத்தை குறித்த பயம் நமக்கு ஒருபோதும் இராது. அநேக பரிசுத்தவான்களை போல நாமும் மகிழ்ச்சியோடு அதை எதிர்கொள்வோம். அப்போது நாமும் மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே என்று சவாலிட்டு கூற முடியும். ஆமென் அல்லேலூயா! . அழிவுக்கு உரிய இவ்வுடல் - ஒருநாள் அழியாமை அணிந்து கொள்ளும் - 2 சாவுக்கு உரிய இவ்வுடல் ஒருநாள் சாகாமை அணிந்து கொள்ளும் - 2 பயமில்லையே மரண பயமில்லையே ஜெயம் எடுத்தர் இயேசு ஜெயம் எடுத்தார் மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? . |