'அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானர். - (யோவான் 3:30-31). . The last supper என்று சொல்லப்படும் படத்தை வரைந்தவர் மிகவும் அழகாக அதை வரைந்து முடித்து, தன் நண்பர்களிடம் அந்த படத்தை குறித்து அவர்களது கருத்தை கேட்டார். அவர்கள் அந்த அழகிய படத்தை பார்த்து விட்டு, மேலிருந்து தொங்கி அந்த அறையை அலங்கரித்திருந்த, அழகிய வண்ண விளக்கை புகழ்ந்து 'என்ன ஒரு அருமையான விளக்கு' என்று பாராட்டினார்கள். . மற்ற ஓவியர்களாயிருந்தால் புகழ்ந்தவுடன் மயங்கி போயிருந்திருப்பார்கள். ஆனால் இவரோ, உடனே அந்த விளக்கை அந்த படத்திலிருந்து நீக்கி விட்டார். அவருடைய எண்ணமெல்லாம், எல்லாருடைய கவனமும் எஜமானாகிய கிறிஸ்துவின் மேல்தான் இருக்க வேண்டும், அதை தவிர வேறு எதுவும் மேலானதாக படக்கூடாது என்பதுதான். அதனால் இந்நாள் வரை அந்தப் படத்தில் விளக்கு இல்லாமல் வரையப்பட்டிருப்பதை காணலாம். . யோவான் ஸ்நானகன் தன்னை ஒருபோதும் வெளிப்படுத்தவே இல்லை. அவருடைய பிரசங்கத்தில் கர்த்தரைக் குறித்தே மேன்மைப்படுத்தி, வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாக, வரப்போகிற மேசியாவாகிய கிறிஸ்துவிற்கு வழியை ஆயத்தப்படுத்துகிறவராகவே வாழ்ந்து, மரித்தார். . கிறிஸ்துவும் அவரைக் குறித்து, 'அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்ளூ நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்' (யோவான் 5:35) என்று சாட்சிக் கொடுத்தார். . நாமும் எதைச் செய்தாலும் கிறிஸ்துவே அதில் பிரதானமாக இருக்க வேண்டும். உலக காரியங்களில் எந்த முடிவெடுப்பதானாலும் முதலில் அவரிடம் ஜெபித்து விட்டு, நீரே வழிநடத்த வேண்டும் என்று அவருடைய கரத்தில் ஒப்படைத்துவிட்டு, அவருடைய சித்தத்தின்படி முடிவெடுக்க வேண்டும். அவரை முதன்மையாக வைத்து செய்யப்படுகிற காரியங்கள் எதுவும் தோல்வியை பெறுவதில்லை. . மட்டுமல்ல, நம்முடைய ஊழியங்களில், நம்முடைய வேலைகளில், நம்முடைய குடும்பங்களில், நம்முடைய சபைகளில் நாம் கர்த்தருக்கே முதலிடம் கொடுக்க வேண்டும். நம்மை ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது. ஆண்டவரே நான் சிறுகவும் நீர் பெருகவும் வேண்டும் என்பதே நம் ஜெபமாக, நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். . நம்மை வெளிப்படுத்த ஆரம்பித்தோமானால், அது நாம் சரிந்து கீழே விழுவதற்கே ஏதுவாக அமையும். நம் பெயரோ, நம் புகழோ அல்ல, கிறிஸ்துவே நம் வாழ்வில் உயர வேண்டும். 'சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை' (யோவான் 7:18) என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஒருவன் எப்போது தன் சுயத்திலிருந்து, தன்னைக் குறித்து, பெருமையாக பேசுகிறானோ, அவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான். ஆனால் கர்த்தருடைய நாமம் மகிமைப்பட வேண்டும் என்று அவருடைய மகிமையைத் தேடுகிறவன் உண்மையுள்ளவனாக, கர்த்தர் பெருக வேண்டும் என்று ஊழியம் செய்கிறான். . எத்தனையோ மிஷனெரிகள், ஊழியர்கள் நன்கு படித்தவர்கள், நல்ல வேலையில் இருந்தவர்கள், தங்கள் படிப்பையும், வேலைகளையும், உயர்ந்த செல்வாக்குகளையும் தள்ளிவிட்டு, கர்த்தருக்காக தங்களை அர்ப்பணித்து, இன்றளவும் தங்கள் பெயர் புகழ் வெளிவராமல் அவருக்காகவே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எரிந்து பிரகாசிக்கிற விளக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது வெளிச்சத்தில் நாமும் இன்றளவும் களிகூர்ந்துக் கொண்டிருக்கிறோம். அவர்களது தியாகமான வாழ்விற்காக கர்த்தருக்கு நன்றி சொல்வோம். இவர்கள் 'இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்' (மாற்கு 10:30) என்றபடி ஆசீர்வாத்தை பெறுவார்கள். . நம்மை நாம் அல்ல, கர்த்தரே உயர்த்த வேண்டும். எல்லாவற்றிலும் அவரையே உயர்த்துவோம். அவரே உயர்ந்தவர். எல்லாவற்றிலும் மேலானவர். எல்லோரிலும் பெரியவர். அவரை நாம் உயர்த்த உயர்த்த அவர் நம்மை உயர்த்த ஆரம்பிக்கிறார். நம்மை மறைத்து அவரையே உயர்த்துவோம்! கிறிஸ்துவின் உண்மையான சீடர்களாக வாழ்வோம். ஆமென் அல்லேலூயா! . பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திறகே கிறிஸ்து வளரட்டுமே நமது மறையட்டுமே . உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம் சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்ந்திடலாம் . |