அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். - (ரோமர் 8:28). டோனாவூர் இல்லத்தின் தாயாக இருந்து, அநேக அனாதை சிறுபிள்ளைகளை ஆதரித்து வந்த ஏமி கார்மைக்ககேல் அம்மையாரை நாம் மறக்க வாய்ப்பில்லை. அவர்கள் சிறுபிள்ளையாய் இருந்தபோது அவரது கவலை என்ன தெரியுமா? பொதுவாக அவர் பிறந்த நாட்டிலுள்ளவர்களின் கண்களெல்லாம் நீல நிறத்தில் காணப்படும். ஏமியின் கண்கள் மட்டும் கறுப்பு நிறத்தில் காணப்பட்டது. அதுதான் அவர் கவலைக்கு காரணம். . ஒரு நாள் காலை தியான வேளையிலே அவரது தாயார், 'இயேசுவிடம் நாம் எதைக் கேட்டாலும் அதை பெற்றுக்கொள்வோம்' என்று கற்றுக் கொடுத்தார். பிஞ்சு உள்ளத்தில் அந்த வார்த்தைகள் அப்படியே பதிந்தன. ஆகவே இரவு படுக்கைக்குச் செல்லுமுன் தன் கட்டிலின் அருகில் முழங்கால் படியிட்டு, 'இயேசப்பா, நான் காலையில் எழும்பும்போது எனது கண்களையும், என் அம்மா அக்காவைப்போல நீல நிறத்தில் மாற்றி விடுங்க பிளீஸ்' என்று மிகவும் உறுதியோடு ஜெபித்து படுக்கைக்கு சென்றார்கள். காலை எழுந்தவுடன் வேகமாக கண்ணாடி முன் சென்று தன் கண்களை அகல விரித்துப் பார்த்தபோது, கருவிழி எந்த மாற்றமுமின்றி கறுப்பு நிறத்திலேயே காணப்பட்டது. அப்படியென்றால் இயேசப்பா என் ஜெபத்தை கேட்கவில்லையா? என உள்ளம் ஏக்கத்துடன் கேட்க, கண்கள் கலங்கின. . . வருடங்கள் கடந்தன. ஆண்டவர் ஏமியை ஊழியத்திற்கு அழைத்தார். அவரும் தன்னை ஒப்புக் கொடுத்து தான் செல்ல வே;ணடிய இடத்தை காட்டும்படி தேவ வழிநடத்துதலுக்காக காத்திருந்தபோது, கர்த்தர் இந்தியாவை காட்டினார். தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, இந்தியாவிற்கு வந்து, நம் தமிழ் நாட்டிலுள்ள டோனாவூரிலே ஊழியத்தை ஆரம்பித்தார். அப்போது தான் அவருக்கு புரி;ந்தது, இந்தியர்களின் கண்களைப்போல தன்னுடைய கறுவிழியும் கறுப்பு நிறத்தில் காணப்படுகிறது என்று. நான் இந்தியர்களோடு இருக்க வேண்டுமென்பதே தேவனின் சித்தம் என்பதை புரிந்து கொண்டார் ஏமி. சிறுவயதில் அது கஷ்டமாயிருந்தாலும் சகலத்தையும் தேவன் நன்மையாகவே நடத்தியிருக்கிறார் என்பதை அறிந்து தேவனை துதித்தார். . . இன்று நாமும் கூட என் வாழ்வில் இருக்கும் இந்த பாடு என்னை விட்டு நீங்கட்டும் என்று கதறுகிறோம். ஏன் எனக்கு மட்டும் தேவன் இதை அனுமதிக்க வேண்டும் என்று சொல்லி அநேக கேள்விகளோடு வாழ்கிறோம். ஆனால் நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? தேவனுடைய பாதத்தில் அமர்ந்து 'ஆண்டவரே உம்முடைய சித்தம் செய்ய என்னை தத்தம் செய்கிறேன் என்று அர்ப்பணிப்பது மட்டுமே. ஒரு பிறவிக்குருடனை பார்த்து, அவனது இந்த நிலைக்கு காரணம் யார் செய்த குற்றம் என்று சீஷர்கள் கேட்கிறார்கள். இன்று நம்முடைய பாடுகளை பார்த்து நம்மை சுற்றி இருப்பவர்கள் இவன் செய்த பாவம் தான் இதற்கு காரணம் என்று கூட சொல்லாம். . . ஆனால் தேவனோ, 'இது இவன் செய்த குற்றமோ, அவன் பெற்றோர் செய்த குற்றமோ அல்ல, என்னுடைய கிரியை வெளிப்படும்படிக்கே இதை இவன் வாழ்வில் அனுமதித்திருக்கிறேன்' என்பார். . . பிரியமானவர்களே, நாம் பிறக்கும் முன்பாகவே நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை தேவன் குறித்து விட்டார். அதற்காகவே நம் வாழ்வில் ஒவ்வொரு காரியத்தையும் அனுமதிக்கிறார். அதை நாம் புரிந்து கொண்டால் நமக்கு நேரிடும் காரியங்கள் எல்லாவற்றிலும் நாம் சோர்ந்து போகாமல் தைரியமாக எதிர்கொள்ள முடியும். அதை உணராதிருக்கும்போது, சிறு காரியத்திலும் நாம் மனம் சோர்ந்து, ஏன் வாழ்வில் இந்த காரியம் ஏற்பட்டது என்று நம்மையே நொந்துக் கொண்டு வாழ்கிறவர்களாக காணப்படுவோம். அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் என்ற வார்த்தையை விசுவாசிப்போம். எல்லாமே நமக்கு நன்மைக்கு ஏதுவாக தேவன் மாற்றுவார். ஆமென் அல்லேலூயா! . நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே நன்றி சொல்லி துதிப்பேன் இன்றைக்கே நன்றி நன்றி எல்லாம் நன்மைக்கே நன்றி |