மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும். - (மாற்கு 7:15). . அனேகருக்கு 13ம் எண் என்றாலே அலர்ஜி. அது ஒரு துரதிஷ்டமான இலக்கம் என்று. யாரும் 13ம் நம்பர் உள்ள வீட்டு எண்ணில் குடிவர மறுப்பார்கள். அந்த நம்பர் உள்ள ஹோட்டல் அறை எண்ணில் தங்க மறுப்பார்கள். அந்த நாளில் எந்த காரியத்தையும் ஆரம்பிக்க தயங்குவார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் ஆஸ்பத்திரிகளில் 13ம் எண் உள்ள வார்டே கிடையாது. . இது எப்படி துரதிஷ்ட எண் என்று கூறப்படுகிறது என்றால், இயேசுகிறிஸ்துவும், பன்னிரண்டு சீடர்களும் இராப்போஜன பந்தியில் பந்தியிருந்தப்பின் அவர் சிலுவையில் அறையப்பட்டதால் இந்த எண் துரதிஷ்டம் வாய்ந்தது என்று கூறப்படுவதுண்டு. மட்டுமல்ல, வேதத்தில் வெளிப்படுத்தின விசேஷத்தில் 13ம் அதிகாரம் முழுக்க அந்திக்கிறிஸ்து, வலுசர்ப்பம், கள்ளத்தீர்க்கதரிசியை விளக்குவதால் இது துரதிஷ்ட எண் என்று கூறுவாரும் உண்டு. . ஆனால் தேவன் உருவாக்கிய எந்த நாளும் துரதிஷ்டம் வாய்ந்த நாளே கிடையாது. 'இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்' (சங்கீதம் 118:24) என்று கர்த்தர் உண்டுப்பண்ணின ஒவ்வொரு நாளையும் மகிழ்ந்து களிகூருவோம். ஏனெனில் எல்லா நாளும் எல்லா நிமிடமும் கர்த்தர் நம்மோடு இருப்பதால்! அல்லேலூயா! . ஆனால் வேதத்தில் மாற்கு 7:21-23 வரை உள்ள வசனங்களில் 13 காரியங்கள் நம்மை தீட்டுப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. அவை: 'மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும்'. . இந்நாட்களில் நாம் இந்தியாவில் இதுப்போன்ற அசுத்தங்கள் தலைவிரித்தாடுவதை கண்கூடாக பார்க்கிறோம், மனிதனுடைய பொல்லாத சிந்தனைகளினால், ஐந்து வயது சிறுமி என்றும் பாராமல் கொடூரமாக வன்புணர்ச்சி செய்த காரியத்தையும் மட்டுமல்ல, சொந்த மகளென்றும் பாராமல், அசுத்தமான கிரியைகளை நடப்பிக்கும் குடிவெறியர்களும் கிறிஸ்து தங்களுக்குள் இல்லாதபடியால், துணிகரமாக அசுத்தங்களை செய்கின்றதையும் பார்த்து இதுப் போன்ற காரியங்கள் எங்கே போய் முடியும் என்று நினைத்துப் பார்க்க முடியாத நிலைமைக்கு சென்று கொண்டிருக்கிறோம். . மேலே சொல்லப்பட்ட இயேசுகிறிஸ்து கூறின 13 பாவங்களே ஒரு மனிதனை தீட்டுப்படுத்துகிறவவைகளாக இருக்கின்றன. ஒரு மனிதனின் இருதயத்திலிருந்து புறப்பட்டு வருகிற இந்த 13 காரியங்களை குறித்தே நாம் கவனமாக இருக்க வேண்டும் இதில் எந்த காரியமும் நம் வாழ்வில் காணப்படாதபடி பரிசுத்தமாய் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை நம்மில் யாருக்காவது இந்த இருதயத்திலிருந்து புறப்பட்டு வருகிற அசுத்தமான பாவங்களாகிய இந்த 13 காரியங்களில் ஏதாவது ஒரு பாவம் காணப்படுமென்றாலும், நம்மை சுத்திகரிக்க வல்ல கிறிஸ்துவின் இரத்தத்தினதால் நம்மை கழுவி சுத்திகரித்து கொண்டு, கிறிஸ்து அருளும் ஆவியின் கனியாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் இவற்றைப் பெற்றுக் கொண்டு நம் பரிசுத்தத்தை காத்துக் கொள்வோமாக! . 'இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி? நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே' (கலாத்தியர் 4:9-10) என்று அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியரிடம் வருத்தப்படுவதுப் போல நாம் நாட்களையும், மாதங்களையும், வருஷங்களையும் அவை நல்லவையா கெட்டவையா என்று பாராதபடி, அவைகளுக்கு அடிமைப்பட்டுப் போகாதபடி, கர்த்தர் வெறுக்கிற அசுத்த பாவங்கள் 13லிருந்தும் நாம் விடுபட்டு, ஒவ்வொரு நாளும் பரிசுத்தத்தில் வளர தேவன் தாமே நமக்கு உதவி செய்வாராக! ஆமென் அல்லேலூயா! . ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது - இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் அல்லேலூயா பாடுவோம் . தோல்வி இல்லை நமக்கு வெற்றி பவனி செல்வோம் தோல்வி இல்லை எனக்கு வெற்றி பவனி செல்வேன்
|