இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு என்றார் - (லூக்கா 8:50). . யவீரு என்னப்படும் ஒரு ஜெப ஆலயத்தலைவன் இயேசுகிறிஸ்துவிடம் வந்து, தன்னுடைய ஒரே குமாரத்தி அதுவும் சிறுப்பெண் மரணத்தருவாயில் இருந்தபடியால், தன்னுடைய வீட்டிற்கு வந்து அவளுக்காக ஜெபித்து சுகத்தை தரும்படியாக அவரிடம் மன்றாடி கேட்டார். . இயேசுவும் சரி என்று அவருடன் அவருடைய வீட்டிற்கு போகையில், பன்னிரண்டு வருடமாய் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ வந்து, தன்னுடைய பணத்தையெல்லாம் வைத்தியர்களிடம் செலவழித்தும், தன் நிலைமை மாறாமல் பெலவீனப்பட்டு இருக்கையில், கிறிஸ்துவின் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தான் தொட்டால் தான் சுகமடைவோம் என்று தன்னுடனே சொல்லிக் கொண்டு, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டாள். . அவள் தொட்ட மாத்திரத்தில் இயேசுகிறிஸ்துவிடமிருந்து வல்லமை புறப்பட்டு, அவளை உடனே சுகப்படுத்தியது. அப்பொழுது இயேசுகிறிஸ்து என்னை தொட்டது யார் என்று கேட்டார். அநேகர் அவரை நெருக்கி கொண்டு வந்து கொண்டிருந்தபடியால், இவர் ஏன் இப்படி கேட்கிறார் என்று சீஷர்கள் அவரிடம், 'ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்'. . 'அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார். அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள். அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்' (லூக்கா 8:46-48) . இந்த காரியங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, தன் மகளை மரணத்தருவாயில் வைத்துக் கொண்டு, இயேசுவந்து தொட்டால் சுகமாகும் என்று காத்திருந்த யவீருவுக்கு, ஐயோ தாமதமாகி கொண்டிருக்கிறதே, என் மகளுக்கு என்ன ஆகுமோ என்று பதற்றத்துடன் நின்று கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் 'ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப் போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான்' (49ம் வசனம்). . ஒரு வேளை யவீரு நினைத்திருக்கலாம், இந்த அம்மா வந்து இயேசுவை தொட்டதினால் தான் இத்தனை நேரம் கடந்து போயிற்று. இல்லாவிட்டால், கொஞ்ச முந்தியாவது கிறிஸ்து வந்து என் மகளை தொட்டிருப்பார் என்று. ஆனால் அவர் எதுவும் சொல்வதற்கு முன்பு 'இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்' (வசனம் 50). அவிசுவாசமான எந்த வார்த்தையும் யவீரு பேச இயேசுகிறிஸ்து அனுமதிக்கவில்லை. . அப்படியே யவீருவின் வீட்டிற்கு சென்று 'எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்' (54-55 வசனங்கள்). . பிரியமானவர்களே, ஜெப ஆலயத்தலைவன் யவீருவின் மனநிலையை ஒருமுறை நாம் எண்ணிப்பார்த்தால், தன் ஒரே மகள், மிகவும் சுகவீனமாயிருக்கிறாள், வாழ்க்கையின் கடைசி விளிம்பிற்கே வந்து விட்டாள், அவளை இயேசுகிறிஸ்து எப்படியாவது சுகப்படுத்த வேண்டும் என்று வாஞ்சையுடன் இயேசுகிறிஸ்துவை அண்டி வந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த சகோதரியின் குறுக்கீடு இவற்றால் தடை வந்தது. அதற்குள் வேலைக்காரர்கள் வந்து, மகள் மரித்து விட்டாள் என்று கூறினபோது, அந்த தகப்பனின் இருதயம் எப்படியாயிருந்திருக்கும்? ஒரே மகள் மரித்துப்போனாளே, எல்லாவற்றிற்கும் முடிவு வந்து விட்டது என்று நினைக்க ஆரம்பிக்கிறபோது, இயேசுகிறிஸ்துவின் கனிவுள்ள வார்த்தைகள் புறப்பட்டு வருகிறது, 'பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு' என்று. . ஒரு வேளை நம்முடைய வாழ்க்கையிலும் எல்லாம் முடிந்து விட்டது. நான் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். இதற்கு மேல் ஒன்றுமே நடக்க போவது இல்லை என்று நினைத்து கொண்டிருக்கிறீர்களா? யார் என்ன செய்தாலும் இனி நல்லது நடக்க போவதில்லை என்று மனம் சோர்ந்து போயிருக்கிறீர்களா? உங்களுக்குத்தான் இயேசுகிறிஸ்து சொல்கிறார், 'பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு' என்று. . வேதத்தில் எத்தனையோ பேரின் வாழ்க்கையில் இதுதான், இனிமேல் எதுவும் நல்லது நடக்க போவதில்லை என்று தீர்மானித்திருந்தவர்களின் வாழ்க்கையில் அதற்குமேல்தான் நல்லது நடந்திருக்கிறது. மோசே இராஜ அரண்மனையை விட்டு, ஆடுகளை மேய்த்து நாற்பது வருடங்கள் ஆயிற்று. தன் வாழ்க்கை இவ்வளவு தான், இனிமேல் நான் ஆடு மேய்ப்பவனாகத்தான் என் வாழ்க்கையை முடிப்பேன் என்று நினைத்திருந்த வேளையில்தான் அவருக்கு தேவனுடைய வார்த்தை உண்டாகி, அவர் அத்தனை இஸ்ரவேலரையும், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி வெளியே கொண்டு வந்தார். பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து, தேவனே பெரியவர் என்று நிரூபித்தார். . யோசேப்பு சிறைச்சாலையிலிருந்தபோது, ஒரு வேளை நினைத்திருக்கக்கூடும், கர்த்தரும் என்னை மறந்தார், நான் இனி இந்த சிறையிலேயே இருக்க வேண்டியது தான் என்று. ஆனால் நாள் வந்தது, பார்வோனுக்கு சொப்பனத்தை கொடுத்து, தேவன் அவருடைய சிறையிருப்பை மாற்றி, தேசத்து அதிபதியாக்கினார். . இப்படி எத்தனையோ உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். நீங்களும் வாழ்வின் முடிவிற்கே வந்து விட்டேன் என்று நினைக்கிறீர்களோ, கர்த்தருடைய வார்த்தை உங்களுக்குத்தான் வருகிறது, பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு என்று. ஆம், விசுவாசமுள்ளவர்களாயிருப்போம் கர்த்தர் கடைசி நிமிஷத்திலும் அற்புதம் செய்து, பெரிய காரியங்களை நம்மை கொண்டு செய்ய முடியும். மனம் சோர்ந்து போகாதிருப்போம். தேவன் புதிய காரியங்களை செய்து, புதிய ஆசீர்வாதங்களால் நம்மை நிரப்பும்படியாக, ஒருவேளை சில காரியங்களை அனுமதித்திருக்கலாம். ஆனால் அதுவே முடிவு என்று நினைத்து சோர்ந்து போகாதிருப்போம். கர்த்தர் நம்பி விசுவாசிப்போம், பயத்தை புறம்பே தள்ளுவோம். முடிவிலும் ஒரு தொடக்கத்தை கர்த்தர் உண்டாக்குவார். அவரை விசுவாசிப்பவர்களுக்கு நிச்சயமாகவே எல்லாவற்றையும் ஆசீர்வாதமாக மாற்றுவார். ஆமென் அல்லேலூயா! . ஈசாக்கின் தேவனும் நான் - அந்த யாக்கோபின் தேவனும் நான் அடிமையாய்ப் போன யோசேப்பை தேசத்து அதிபதியாக்கினதும் நான் . என் சமுகம் உன் முன் செல்லும் ஒன்றுக்கும் கலங்காதே ஒரு போதும் கைவிட மாட்டேன் அழைத்தது நான்தானே |