சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். - (யாக்கோபு 5:9). . ஒரு நல்ல கிறிஸ்தவ மனிதர் அவர் தன்னிடம் வரும் யாவருக்கும் நன்மைகளை செய்து வந்தார். ஆனால் அவருக்கு விரோதமாக ஒரு சிலர் எழும்பி, அவருடைய நன்மைக்கு பதிலாக அவருக்கு தீமை செய்தார்கள். அவர் மனம் வருந்தியது. ஏன் இப்படி எனக்கு செய்கிறார்கள் என்று மிகவும் மனம் நொந்து போனார். கர்த்தரிடம் முறையிட்டார். அவருக்கு 'நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது' (நீதிமொழிகள் 17:12) என்ற வசனம் ஞாபகத்திற்கு வந்தது. அவர் தனக்கு தீமை செய்தவர்களை பதில் தீமை செய்யாவிட்டாலும், அவர்களுக்கு ஏதாவது தீமை நடக்கும் என்று எதிர்ப்பார்த்திருக்க ஆரம்பித்தார். கர்த்தருடைய பார்வையில் அது நிச்சயமாகவே தவறாகவே காணப்படும். . பொதுவாக தீங்கு செய்தவர்கள் வீழ்ந்து போக வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லாருக்குள்ளும் இருக்கிறது. நமக்கு அநீதி இழைத்தவர்கள் தேவனால் தண்டிக்கப்படுவதைக் காண வேண்டும் என்ற ஆசையும் எல்லாருக்குள்ளும் இருக்கிறது. அக்கிரமக்காரர்கள் அழிந்து போவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, அவர்கள் இன்னும் அதிகமாக உயர்த்தப்படும்போது சிலருக்கு மனம் கஷ்டமடையவே செய்கிறது. . . பிரியமானவர்களே, கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிற நாம், மற்றவர்களைப் போல அல்லாமல், இந்த காரியங்களில் வித்தியாசமாகவே செயல்பட வேண்டும். நாம் செய்கிற நன்மைக்கு கர்த்தர் நிச்சயமாக பதில் தருவார் என்று எதிர்ப்பார்க்கிற வேளையில் மற்றவர்கள் செய்த தவறுக்கு, நம் கண்களுக்கு எதிரில் அவர்கள் நன்கு அனுபவிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கவே கூடாது. நம்மை தேவையின்றி விரோதித்தவர்கள், நியாயமின்றி எதிர்த்தவர்கள, மனசாட்சியின்றி தீங்கு செய்தவர்கள், நம்முடைய கண்களுக்கு முன் எந்த தீங்கையும் காணாதவர்களாக உலாவுவது நம்முடைய உள் மனதில் நம்மை சிறுமைப்படுத்துவதுப் போல தோன்றலாம். நம்மை தேவையில்லாமல், சத்தம் போடும் மேலதிகாரி, கர்த்தர் மேல் நம்பிக்கையே இல்லாமல் அவருக்கு விரோதமாக பேசினாலும், எல்லாமே அவருக்கு நன்றாக நடக்கும்போது, கர்த்தருக்கு பயப்படுகிற எனக்கு ஏன் இப்படி நேரிடுகிறது என்று உள்மனம் வருந்தலாம். . . ஆனால் இவைகளை சகிக்கவும், ஏற்றுக் கொள்ளவும் நம் மனநிலைமையை பக்குவப்படுத்தவேண்டும். அதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை. யோசேப்பு தனக்கு தீமை செய்த தன் சகோதரர்களையும் நேசித்தார். போத்திபாரின் வீட்டில் யோசேப்பு நன்மையையே செய்தபோதும், செய்யாத தவறுக்காக தான் தேவையில்லாமல் சிறையில் அடைக்கப்பட்டதை நினைத்தபோது, அவர் போதிபாரை சபித்திருக்கலாம். ஆனால் அவர் அவர்களை நினைக்கவே இல்லை. அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று அவர் போய் தேடிக் கொண்டும் இருக்கவில்லை. அவர்களுக்கு என்ன நேரிட்டது என்று அதைக் குறித்து வேதத்திலும் கூறப்படவில்லை. . . ஆனால் அநீதியை சகித்து, தன்னை தாழ்த்திய யோசேப்பை தேவன் மற்றவர்கள் நினைத்திராத அளவு உயர்ந்த இடத்தில் கொண்டுப் போய் வைத்தார். யோசேப்பின் குற்றமற்ற வாழ்க்கையை கண்ட தேவன் அதற்கு பலனளிக்க தவறவில்லை. அநீதி செய்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை விட அநீதியை சகித்தவருக்கு கர்த்தர் என்ன பலன் கொடுத்தார் என்று வேதத்தில் கற்றறிந்து, அநீதியை சகிக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும். . தேவன் அநீதி செய்கிறவர்களுக்கு இன்னும் சில நாட்கள் கொடுத்துப் பார்க்கிறார். அவர்கள் மனம் திரும்புவார்களா என்று. இது தேவனுடைய கிருபையையே குறிக்கிறது. நாம் அநேக இடங்களில் காண முடியும், கர்த்தருக்குள் இருப்பவர்கள் சீக்கிரமாய் மரித்து போவதையும், பாவம் செய்பவர்கள் அதிக நாட்கள் வாழ்வதையும். அது கர்த்தருடைய பெரிதான கிருபையே அல்லாமல் வேறல்ல. அவர்கள் மனம் திரும்ப மாட்டார்களா என்று தேவன் அவர்களுக்கு ஜீவிய நாட்களை கூட்டித்தருகிறார். தேவன் தமது கிருபையையும், இரக்கத்தையும் அவர்களுக்கு காண்பித்தால், நாம் அதற்கு எதிராக செயல்பட முடியுமா? . ஆகவே தேவனுடைய எண்ணங்களுக்கு எதிராக நாம் நினைத்துக் கொண்டிராதபடி, தவறு செய்த மற்றவர்களுக்கு என்ன நேரிடுகிறது என்று எதிர்ப்பார்ப்போடு காத்திருப்பதைவிட, நன்மை செய்த எனக்கு தேவன் நிச்சயமாக நல்ல பலனை கொடுப்பார் என்று கர்த்தரையே சார்ந்து ஜீவிக்க தேவன் நம் ஒவ்வொருவருக்கும் கிருபை தருவாராக! ஆமென் அல்லேலூயா! . கசப்புகளை மாற்றி விட்டீர் நன்றி மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி நன்றி நன்றி நன்றி எல்லாம் நன்மைக்கே நன்றி . நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்றி நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே
|