தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச்சிட்சிக்கிறார். - (நீதிமொழிகள் 3:12). . ஒரு சிறு கிராமத்தில் ஒரு பெண், தான் போகும் வழியில் ஒரு ஆட்டுமந்தையை கடந்து போனாள். அங்கு அவள் பார்த்தபோது, தனியாக ஒரு ஆடு அங்கிருந்த வைக்கோல் போரின் மேல் படுத்திருப்பதைக் கண்டாள். அதனுடைய காலில் கட்டு போடப்பட்டிருந்தது. அப்போது அங்கிருந்த மேய்ப்பனிடம், 'ஏனையா இந்த ஆட்டிற்கு காயம் ஏற்பட்டது? எப்படி அதன் கால் உடைந்து போனது' என்று கேட்டாள். அப்போது அந்த மேய்ப்பன், 'அம்மா, நான்தான் அதன் காலை உடைத்தேன்' என்று சொன்னபோது அந்த பெண், மிகவும் ஆச்சரியப்பட்டாள். அப்போது அந்த பெண்ணிடம், அந்த மேய்ப்பன், 'என்னிடம் உள்ள ஆடுகளிலேயே இந்த ஆடு மிகவும் வழிதப்பி போய் கொண்டு இருந்தது. இந்த ஆடு என் சத்தத்தை கேட்பதே கிடையாது, என் பின்னே வருவதும் கிடையாது. ஆபத்தான குன்றுகளின் விளிம்பில் நின்று கொண்டு, நான் கூப்பிட்டாலும் வருவது கிடையாது. எல்லாவற்றிற்கும் மேலாக, மற்ற ஆடுகளையும் வழி தப்பிபோக செய்கிறது. ஆகவே அதன் காலை நான் உடைக்க நேர்ந்தது, நான் அதன் காலை உடைத்த முதல் நாள் அதற்கு உணவு கொடுக்க நான் முயன்றபோது, அது என்னை கடிக்க வந்தது. என் மேல் அதற்கு மிகவும் கோபம் இருந்தது. ஆகவே நான் அதை இரண்டு நாள் அப்படியே பட்டினியாய் போட்டு விட்டேன். மூன்றாவது நாள், நான் அதற்கு உணவு கொண்டு வந்தபோது, அது உணவை ஏற்றுக் கொண்டது மாத்திரமல்ல, என் கையை நக்கி, தனது அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தியது. இந்த ஆடு சரியாகி நடக்க ஆரம்பிக்கும்போது, இது மற்ற ஆடுகளுக்கு முன்மாதிரியாக இருப்பது மட்டுமல்ல, மற்ற எந்த ஆடுகளையும் விட என் சத்தத்திற்கு உடனே செவிகொடுத்து, கீழ்ப்படியும்' என்று கூறினார். . அநேக முறை நாமும் கூட அந்த ஆட்டைப் போலத்தான் இருக்கிறோம் அல்லவா? நம் வாழ்வில் சிட்சைகள் வரும்போது அல்லது பாடுகள் வரும்போது ஏன் இது வந்தது என்று முறுமுறுக்கிறவர்களாய் நாம் இருக்கிறோம். ஆனால் வசனம் நமக்கு தெளிவாக கூறுகிறது, 'அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா? அவர்கள் தங்களுக்கு நலமென்றுதோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்' (எபிரேயர் 12:9-11). இந்த வசனம் எத்தனை சரியாக, நாம் எதற்காக சிட்சிக்கப்படுகிறோம் என்பதை குறித்து தெளிவாக எழுதியிருப்பதை பாருங்கள். இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். அல்லேலூயா! . நாம் அவருடைய பிள்ளைகளாய் இருக்கும்போது, நாம் அவர் வழியில் நடவாமல், வழிதவறி போகும்போது, நாம் அவருடைய சத்தத்திற்கு செவி கொடுக்க வேண்டும் என்பதற்காக சில சிட்சைகளை அனுமதிக்கிறார். ஆனால், 'எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்'. ஆமென். . சில வேளைகளில் நாம் கலங்கி ஏன் எனக்கு மட்டும் இந்த பிரச்சனை? என்று கதறி, கண்ணீர் விடுகிறவர்களாயிருக்கிறோம். அப்போது நம்மை நாமே சோதித்து பார்த்து, ஒரு வேளை நாம் கர்த்தருடைய வழிகளில் இருந்து மாறி போயிருந்தால் நாம் அவரிடத்தில் திரும்பும்படியாகவே கர்த்தர் அனுமதித்தார் என்று நினைத்து கர்த்தரிடத்தில் திரும்புவோம். தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச்சிட்சிக்கிறார். அவர் நம்மை நேசிப்பதினால் தான் அந்த சிட்சையை அனுமதிக்கிறார். அந்த ஆட்டைப் போல முதலில் அந்த சிட்சை நமக்கு கோபத்தை உண்டாக்கினாலும், நாம் எதினால் சிட்சிக்க படுகிறோம் என்பதை உணரும்போது, அந்த சிட்சைக்கு நம்மை பாத்திரமாக தேவன் தெரிந்து கொண்டாரே என்று நம்மை மகிழ்வடைய செய்யும். . நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? (எபிரேயர் 12:7). தகப்பன் எந்த மகனையாவது மகளையாவது அடித்தால், உடனே அந்த பிள்ளை 'நீர் என்னை அடித்தபடியால் இனி நீர் எனக்கு தகப்பனல்ல' என்று சொல்லுமா? இல்லை. எத்தனைதான் அடித்தாலும் அந்த தகப்பன் அந்த பிள்ளையை நேசிப்பதால்தான் அடிக்கிறார் என்பதை அந்த பிள்ளை பின்னர் புரிந்து கொள்ளும். 'என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே' (நீதிமொழிகள் 3:11). கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாமல், சோர்ந்து போகாமல், நாம் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதால்தான், நம்மை சிட்சிக்கிறார் என்பதை உணர்ந்து, நம்முடைய பாடுகளின், உபத்திரவங்களின் மத்தியிலும் தேவன் நம் தகப்பனாக நம்முடைய பரிசுத்தத்திற்காகவே சிட்சிக்கிறார் என்பதை புரிந்து, கர்த்தருடைய வழிகளில் நடப்போம். கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக! . நல் மேய்ப்பரே நம்பிக்கையே நானும் உந்தன் ஆட்டுக்குட்டி உம்மைத் தானே பின் தொடர்ந்தேன் உம் தோளில் தான் நான் இருப்பேன் துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து தூயவர் உம்மை நான் பாடுவேன் |