அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். - (சங்கீதம் 91:4). . தென் ஆப்பிரிக்க காட்டுப்பகுதியில் இன்றும் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் பிள்ளைகள் காட்டில் தைரியமாக வாழ பழக்கிக் கொள்வதற்காக சில பயிற்சிகளைக் கொடுப்பார்கள். அதில் ஒன்று அடர்ந்த காட்டுப் பகுதிக்கு அந்த பிள்ளையை அழைத்துச் சென்று பெரிய மரத்திலுள்ள பொந்தில் உட்கார வைத்து விட்டு வந்து விடுவார் தகப்பன். ஒளி மங்கும் வேளையிலே காட்டு மிருகங்களின் சத்தம் கேட்டு பிள்ளை பயப்படும். சற்று நேரத்திற்கெல்லாம் விலங்குகள் அங்கு வந்து உலாவும். அவற்றில் சில அந்த பிள்ளையை நெருங்கும்போது, பிள்ளை வீறிட்டு அலறி அழும். அம்மிருகம் குழந்தையின் மிக அருகில் வரும் சமயம் அதன் உடலில் விஷ அம்பு பாய்ந்து கீழே விழும். யார் அக்குழந்தையை காப்பாற்றியது? யார் மிருகத்தை கொன்றது? அப்பிள்ளையின் அன்பு தகப்பனே. ஆம், அவர் அப்பிள்ளையை தனியே விடவில்லை. தொலைவில் அமர்ந்து வில் ஏந்தியவராக அவனையே கூர்ந்து கவனித்து கொண்டிருந்தார். ஆபத்து நெருங்குகையில் துரிதமாய் செயல்பட்டு அவனை காப்பாற்றினார். . ஆம், பிரியமானவர்களே, நாம் வாழும் இவ்வுலகம் தேவனால் சபிக்கபட்ட பூமிதான். எங்கும் துஷ்டத்தனமும், பொல்லாங்கும் நிரம்பி காணப்படுவதை காண்கிறோம். பெண்களுக்கெதிரான வன் கொடுமைகளும், தீவிரவாதமும், கொள்ளை நோய்களும், விபத்துகளும், விபரீதங்களும் நடப்பதை காணும்போது மனுபுத்திரரின் இருதயம் நடுங்குகிறது. எப்போது என்ன நேரிடுமோ? என எண்ணி கலங்க வேண்டியதாயுள்ளது. . இப்படிப்பட்ட உலக சூழ்நிலையில் தேவன், தம்முடைய பிள்ளைகளுக்காக செய்வதென்ன தெரியுமா? அந்த காட்டிலே தனது பிள்ளையை எந்த பொல்லாங்கும் தொட முடியாதபடி அதன் தகப்பனார் எப்படி பாதுகாத்தோரோ, அப்படியே நம்மை இப்பொல்லாத உலகத்தினின்று பாதுகாப்பதற்கும், நமக்கொரு பரம தகப்பன் உண்டு. அந்த உன்னதமான தேவனின் மறைவில் நாம் இருப்போமென்றால், அவர் நம்மை பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்புவிப்பார். வேடனுடைய கண்ணிக்கும் நாம் தப்பித்துக் கொள்வோம். பொல்லாப்பு நமக்கு நேரிடாது, எந்த வாதையும் நம் வீட்டை தொடாது. . இளம் பிள்ளைகளை தனியாக வேலைக்கு அனுப்புவதற்கும், கல்லூரிகளுக்கும் அனுப்புவதற்கு நாம் பயப்பட தேவையில்லை. ஏனெனில் நாம் செல்லும் வழிகளில் நம்மையும் நம் பிள்ளைகளையும் காக்கும்படி தூதர்களை அவர் அனுப்புவார். சிங்கம் போன்ற பயங்கர பிரச்சனைகளையும் வலுசர்ப்பமான பிசாசின் தந்திரங்களையும் நாம் மிதித்துப்போட முடியும். ஆபத்தில் அவரே நம்மோடிருந்து நம்மை தப்புவிப்பார் அல்லேலூயா! . ஆனால் நாம் அவரை நமது சொந்த தகப்பனாக கொண்டிருக்கிறோமா? அது மிகவும் முக்கியம். தகப்பன் பிள்ளைக்குரிய உறவும் ஐக்கியமும் நமக்கும் நம் தேவனுக்கும் இடையில் உண்டா? அப்படி இருந்தால் நிச்சயமாக நம்முடைய இக்கட்டான வேளையில் அவரே நம்மோடிருந்து நம்மை தப்புவிப்பார். ஆமென் அல்லேலூயா! . உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் - இது பரம சிலாக்கியமே . அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் - அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார்
|