கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். - (சங்கீதம் 37:4). . ஒரு கிறிஸ்தவ சகோதரி கணவரை இழந்தவர்கள், அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் தன் வேலைக்கு செல்லுமுன்பு பிள்ளைகளை அழைத்து, அவர்களோடு ஜெபித்து, அவர்களை பள்ளிக்கு அனுப்புவது வழக்கம். அவர்கள் வளர்ந்து வருகிற போது, ஒரு மகன் கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் பாவ வழிகளில் செல்ல ஆரம்பித்தான். . . அதை கண்ட சில குடும்ப நண்பர்கள், அவனுடைய தாயிடம் வந்து, இந்த மாதிரி 'உங்கள் மகன் பாவ காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான்' என்று கூறினார்கள். அதற்கு அந்த தாய், 'நான் அவனிடம் தன் வழியை விட்டு நல் வழிக்கு வா என்று சொன்னாலும், அவன் வருவானா என்பது சந்தேகம். ஆனால் என் பிள்ளைகளை கர்த்தருடைய கரத்தில் ஒப்புக் கொடுத்திருக்கிறபடியால் தேவன் அவர்களை காத்துக் கொள்வார் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு' என்று கூறி, அதற்காக முறுமுறுக்காமல், கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து. ஜெபத்தோடு காத்திருந்தார்கள். அவர்கள் அப்படி முறுமுறுப்பில்லாமல், நம்பிக்கையோடும், கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியோடும் இருப்பதைக் கண்டு அநேகருக்கு ஆச்சரியமாக இருந்தது. . . ஒரு நாள் வந்தது, அந்த மகன் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டு, அது அவனுடைய தவறு இல்லை என்றாலும், போலீஸிடம் மாட்டிக் கொண்டான். அவனது நண்பர்கள் அவனை விட்டு ஓடிப் போனார்கள். அப்போதுதான் அவனுக்கு தன் நண்பர்களின் குணநலன்கள் தெரிய ஆரம்பித்தது. தன் தாய் தனக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிப்பதை உணர ஆரம்பித்தான். அவனது வாழ்க்கை மாற ஆரம்பித்தது. அவன் மேல் தவறு இல்லை என்று நிரூபிக்கப்பட்டு, அவன் சிறையிலிருந்து வெளியே வந்தான். . . அவனது தாயார் கர்த்தருக்கு நன்றி சொன்னார்கள். 'எனக்கு தெரியும், கர்த்தரிடம் நான் ஒப்புக்கொடுத்ததை அவர் கடைசி வரைக்கும் காத்துக் கொள்வார் என்று. ஆகவே உன்னிடம் நான் நம்பிக்கை இழக்கவில்லை, விசுவாசத்தோடு கர்த்தர் உன்னை தொடுவார் என்று காத்திருந்தேன், கர்த்தர் என்னை வெட்கப்படவிடவில்லை' என்று கூறினார்கள். கர்த்தருடைய வசனம் சொல்கிறது, 'கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்' என்று. நாம் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் சவால்கள், துன்பங்கள், சோதனைகள், பாடுகள், வியாகுலங்கள் நிமித்தமாக நம் இருதயம் சோர்ந்து போகக்கூடியதாய் இருக்கிறது. எனக்கு இருக்கிற பிரச்சனைகள் மாதிரி யாருக்கும் இல்லை என்று நம்மில் அநேகர் சொல்வதுண்டு. அதினிமித்தம் தங்கள் வாழ்வில் ஏன் வாழ்கிறோம் என்று நிர்பந்தமாக, சோகமாக, வாழ்வில் எந்த பிடிப்பும் இல்லாமல் வாழ்கிறவர்கள் பலர் உண்டு. . . உலகில் யாருக்குத்தான் பிரச்சனை இல்லை? எந்த ஒரு ஐசுவரியவானுக்கும் நிச்சயம் பிரச்சனை உண்டு. நாம் நினைக்கிறோம் எல்லா வசதியும் இருந்து விட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று. ஆனால் அவர்களுக்குத்தான் அதிக பிரச்சனை என்பதை நம்மில் அநேகர் அறிவதில்லை. பிரச்சனைகள் மத்தியிலும், பாடுகள் மத்தியிலும், நாம் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். பாடுகள் மத்தியில் நாம் கர்த்தரை நோக்கி முறுமுறுக்கக்கூடாது. 'ஏன் ஆண்டவரே எனக்கு இத்தனை பிரச்சனைகள்?' என்று அவரிடம் கசந்துக் கொள்ளக் கூடாது. அவருடைய சித்தமில்லாமல் கர்த்தருக்கு பயந்தவர்களின் வாழ்க்கையில் ஒரு காரியமும் நடைபெறுவதில்லை. அவர் அனுமதித்தால், அவர் அதிலிருந்து வெளிவரும்படியாகவும் வழிகளை தெரியப்படுத்துவார். அப்படி அவருக்குள் மகிழ்ச்சியாயிருந்தால் நம் இருதயத்தின் வேண்டுதல்களை அவர் நிறைவேற்றுவார். . நம் இருதயத்தின் வேண்டுதல்கள் எதுவாயிருந்தாலும் கர்த்தர் நிறைவேற்றுவாரா? இல்லை, அடுத்த வசனம் சொல்கிறது, 'உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்' என்று. நம் வழிகளை கர்த்தருக்கும், அவருடைய சித்தத்திற்கும் ஒப்புக் கொடுத்து, 'ஆண்டவரே எனக்கு இந்த காரியம் நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன், ஆனால் உம் சித்தம் எதுவோ அதுவே நிறைவேறட்டும்' என்று ஜெபிக்கும்போது, அவரே அந்தக் காரியத்தை அவருடைய சித்தத்தின்படியும், திட்டத்தின்படியும் வாய்க்க செய்வார். 'ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம் (ரோமர் 9:16) என்று வேத வசனம் கூறுகிறது. . . 'கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்தே உங்களுடைய பெலன்' (நெகேமியா 37:5). ஆம், பிரச்சனைகள், போராட்டங்கள், பாடுகள் மத்தியிலும், கர்த்தருக்குள் நாம் மகிழ்ச்சியாயிருப்போம். அவரே நம் பாடுகளையும், போராட்டங்களையும் மாற்றி, நம்முடைய இருதயத்தின் வேண்டுதல்களை அவருடைய சித்தத்தின்படி நிறைவேற்றுவார். ஆமென் அல்லேலூயா! . நீ அவர் மேல் நம்பிக்கை வைத்திடுவாய் அவர் உனக்காய் யாவையும் செய்திடுவார் கர்த்தரிடம் மனமகிழ்ச்சிக் கொள் உன் நினைவெல்லாம் நிறைவேறச் செய்வார் உன் வழிகளை நீ ஒப்புவித்தால் எல்லா யுத்தத்திலும் அவர் ஜெயம் தருவார் .. அரபிக் கடல் வற்றினாலும் இயேசு அன்புக் கடல் வற்றாதம்மா பசிபிக் கடல் வற்றினாலும் இயேசு பாசக் கடல் வற்றாதம்மா |