Friends Tamil Chat

புதன், 2 அக்டோபர், 2013

2nd October 2013 - தேவை - வேதவசனத்தின் அறிவு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 அக்டோபர் மாதம் 02-ம் தேதி - புதன் கிழமை
தேவை - வேதவசனத்தின் அறிவு
....

ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். - (மாற்கு 13:5).

.
ஒரு பள்ளியில் வழக்கமாக வாரத்திற்கு ஒருமுறை வேதபாட வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதை அந்தந்த வகுப்பாசிரியர்கள் நடத்தி வந்தனர். அதில் ஏழாம் வகுப்பு ஆசிரியர் ஒரு கிறிஸ்தவராயிருந்த போதிலும், வேதாகமத்தை தன் இருதயத்தில் நம்பாதவரும், பரிகசிப்பவருமாய் இருந்தார். ஒரு நாள் அவர் தன் வகுப்பு பிள்ளைகளிடம், 'இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலை கடந்து சென்றது பெரிய அற்புதம் ஒன்றுமில்லை. ஏனென்றால் அந்த சமயத்தில் சமுத்திரத்தில் ஆறு அங்குல அளவு மட்டுமே தண்ணீர் இருந்தது. ஆகவே தான் ஜனங்கள் அதை வெகு சுலபமாக கடந்து விட்டனர்' என்றார்.

.

உடனே அவ்வகுப்பிலிருந்து ஒரு சிறுமி, 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று சத்தமாக கூறினாள். ஆசிரியர் எரிச்சலுடன், 'இதில் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சொல்வதற்கு என்ன இருக்கிறது?'என்று கேட்டார். அச்சிறுமியோ சற்றும் தயங்காமல், 'அந்த ஆறு அங்குல அளவு தண்ணீரில் எகிப்திய சேனை அனைத்தையும், பார்வோனின் இரதங்களையும் நம்முடைய பெரிய தேவன் அழித்து விட்டாரே! இது அற்புதம் அல்லவா? அதற்காகவே நான் கர்த்தரை துதித்தேன்' என்று பதிலளித்தாள். அந்த ஆசிரியர் பேச்சற்று போனார்.

.

இந்நாட்களில் வேத வல்லுநர்கள் என்ற பெயரில் பலர் வேதத்தின் அற்புதங்களை ஏற்று கொள்ள மனதில்லாதவர்களாய் விதவிதமான விளக்கங்களை சொல்லுகிறவர்களாய் உள்ளனர். விண்வெளிக்கு மனிதன் செல்லும் இந்த விஞ்ஞான யுகத்தில் அற்புதங்களை நாம் நம்ப தேவையில்லை என்று கூறுவர். ஒரு சில கிறிஸ்தவ புத்தகங்களில் கூட வேதத்திற்கு புறம்பான பல விளக்கங்கள் காணப்படுவதுண்டு. 'இப்புத்தகத்தை எழுதியவர் பெரிய போதகரல்லவா, அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்' என்று நாம் அக்கருத்தை ஏற்று கொள்ள வேண்டுமென்ற அவசியம் கிடையாது. ஆனால் இவையெல்லாம் வேதத்திற்கு புறம்பானது என்பதை எப்படி அறிநது கொள்ள முடியும்? வேதத்தின் அறிவு நமக்கு இருக்கும்போது மட்டுமே! இல்லாவிட்டால் எல்லாவற்றையும் கேட்டு மனதில் பெரும் குழப்பம் அடைந்து விடுவோம்.

.

2011 ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஹெரால்ட் கேம்பிங்க் என்பவர் உலகம் அழியப்போகிறது என்று அறிவித்தார். இதை உலகமெங்கும் செஃப் ஹாகின்ஸ் என்பவர் பல இலட்ச ரூபாய்களை செவழித்து, பரப்பினார். ஆனால், 2011 மே மாதம் 21ம் தேதி ஒன்றும் நடக்கவில்லை. அவர் கூறியது உண்மை என்று அவரை நம்பி பலர் ஏமாந்தனர். சரியாக வேதம் அறியாதவர்கள் இத்தகைய வார்த்தைகளுக்கு மிக எளிதாக விழுந்து விடுகிறார்கள்.

.

கர்த்தராகிய இயேசுவும் தன்னுடைய இரண்டாம் வருகைக்கு முன் நடககும் அடையாளங்களில் பிரதானமாக கூறியது, கள்ளபோதனைகள் மற்றும் கள்ள போதகர்களுக்கு எச்சரிக்கையாயிருக்கும்படி கூறியுள்ளார். ஏனெனில் இயேசுவின் நாட்களில் இருந்த வேதபாரகர்களும், பரிசேயர்களும் வேத உபதேசம் என்ற பெயரில் ஜனங்களை கட்டி போட்டிருந்தார்கள். இன்றைக்கும் பிரசங்கம், உபதேசம் என்ற பெயரில் தவறானவைகளை போதித்து ஜனங்களை பிசாசு கட்டி வைத்துள்ளான். குறிப்பாக ஏதெனும் ஒரு வசனத்தை மையமாக வைத்து இதுவே சத்தியம் என போதித்து, அதன் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சபைகளும், ஊழியங்களும் ஏராளம். நாம் அப்படிப்பட்ட மாயையில் சிக்கி விடாதபடிக்கு வேதத்தை வாசித்து வேத அறிவிலே வளர வேண்டியது மிகமிக அவசியம்.

.

பிரியமானவர்களே, கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கபட்டு, சந்தையில் புரளுகின்ற இந்நாட்களில் நல்ல ரூபாய் நோட்டை மட்டும் நாம் தெளிவாய் அறிந்திருந்தோமானால் எவ்விதமான கள்ள நோட்டினாலும் நாம் ஏமாற்றப்பட மாட்டோம். அதுபோல வேதத்தை கவனமாய் வாசித்து, வேத அறிவில் நாம் வளர்ந்திருப்போமானால் எவ்வித கள்ள உபதேசத்தினாலும் நாம் வஞசிக்கப்படாதிருப்பது உறுதி. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்கீதம் 1:1) என்ற வசனத்தின்படி, நாம் ஒவ்வொருவரும் பாக்கியவான்களாக மாற தேவன் தாமே கிருபை செய்வாராக ஆமென் அல்லேலூயா!

.

வேதத்தில் இன்பம் காண்கின்றேன்

விரும்பி தியானம் செய்கின்றேன்

வாய்க்காலில் நடப்பட்ட மரம் நான்

வாழ்க்கையெல்லாம் தவறாமல் கனி கொடுப்பேன்

ஆண்டு..

இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் நான்

இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன்

எதற்கும் பயம் இல்லையே

இனியும் கவலை எனக்கில்லையே

..ஆண்டு

அல்லேலூயா – 4

ஜெபம்

எங்கள் அன்பின் ஆண்டவரே, வேதத்தில் நாங்கள் வாஞ்சை அதிகமாக வைத்து, அதை தினமும் வாசித்து, நற்குணசாலிகளாக விளங்க தேவன் கிருபை செய்வீராக. கள்ள போதகங்கள் வரும்போது, அவற்றை உணர்ந்து நாங்கள் அதற்கு விலகத்தக்கதாக, வசனத்தில் வேரூன்றி இருக்க தேவன் கிருபை செய்யும். இரவும் பகலும் அதை தியானித்து, பாக்கியவான்களாக விளங்க கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.