Friends Tamil Chat

திங்கள், 14 அக்டோபர், 2013

14th October 2013 - இரண்டுவித அழைப்பு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 அக்டோபர் மாதம் 14-ம் தேதி – திங்கட்கிழமை
இரண்டுவித அழைப்பு
....

தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு, புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன். – (நீதிமொழிகள் 9:3-4).

.
வேதத்திலுள்ள நீதிமொழிகளின் புத்தகம் ஒரு அருமையான புத்தகம். நாம் ஒவ்வொரு நாளும் நடக்க வேண்டிய வழிகளை கற்று தரும் புத்தகம். அதில் 31 அதிகாரங்கள் உள்ளன. மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிகாரத்தை வாசிக்கும்படியாக அமைந்துள்ளது. நான் வருடக்கணக்கில் தினமும் வாசித்து வருகிறேன். தேவன் அதிலிருந்து என் தேவையின் நாட்களில், அவருடைய சித்தத்தை வெளிப்படுத்தி, என்னோடு பேசியிருக்கிறார், ஆறுதல் படுத்தியிருக்கிறார். நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி தந்திருக்கிறார். ஒவ்வொருவரும் அப்படியே ஒவ்வொரு நாளும் ஒரு அதிகாரத்தை வாசிக்க கற்று கொள்ள வேண்டும்.

.

நீதிமொழிகள் 9ம் அதிகாரத்தில் இரண்டு பேரின் அழைப்பை குறித்து பார்க்கிறோம். ஒன்று ஞானம், மற்றது வேசி அல்லது சாத்தான்.

.

ஞானம் தன் வீட்டைக்கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து.. என்று வாசிக்கிறோம் (முதலாம் வசனம்). ஏழு தூண்கள் என்றால், பெரிய விஸ்தாரமான இடமாகும். கட்டி முடித்து, பெரிய விருந்தை ஆயத்தப்படுத்தி, தன் வேலைக்காரர்களை அனுப்பி, புத்தியீனர்களை அழைக்கிறது. ஞானம் என்றால் என்ன? படிப்பிலே நூற்றுக்கு நூறு வாங்குவதல்ல ஞானம்! அந்த அதிகாரத்திலேயே அதற்கு பதிலும் உண்டு. 10-ம் வசனத்தில் 'கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தில் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு' என்று பார்க்கிறோம். கர்த்தருக்கு பயப்படுதலும், அவரை அறிகிற அறிவை பெற்று கொள்வதுமே ஞானமாகும். கர்த்தருடைய வேதமே ஞானத்தை தரும். ஞானத்தை இயேசுகிறிஸ்துவோடும் ஒப்பிடலாம். ஆனால் ஞானம் அழைக்கும் அழைப்பிற்கு இணங்கி, அவருடைய விருந்தில் பங்கு பெறுபவர்கள் மிகவும் குறைவே. அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ வெகு சிலர், அதிலும் உண்மையுள்ளவர்கள் மிகவும் சிலரே! ஞானத்தின் வீடு மிகவும் விஸ்தாரமானது. எத்தனை பேர் வேண்டுமானாலும் அந்த அழைப்பை ஏற்று அவரிடம் செல்லலாம். ஆனால் ஏற்று செல்பவர்கள் மிகவும் சிலரே!

.

மற்ற அழைப்பு மதியற்ற ஸ்திரீயும் வாயாடியானவளிடமிருந்து வருகிறது. அவள் பேதைகளையும், சிற்றின்பத்தில் பிரியப்படுபவர்களையும் அழைத்து, 'மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்'. அவள் அழைப்பை கேட்டு மதிமயங்கி போகும் வாலிபர் அநேகர். ஆனால் அவர்களின் முடிவோ 'ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்' ஆம் அவளுடைய அழைப்பு பாவத்தை செய்யும்படிக்கு, ஞானத்தை தள்ளிவிட்டு, அசுத்தத்திற்கும், சிற்றின்பத்தில் திளைப்பதற்கும் அழைக்கிறது.

.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் இரண்டு வழிகளை குறித்தே சொல்லியிருக்கிறார். 'இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்' (மத்தேயு 7:13-14) என்று பார்க்கிறோம். யாருக்கும் குறுகிய அல்லது இடுக்கமான வாசல் வழியாக செல்வது என்பது மிகவும் கடினம். தற்போதைய உலகில், கைநிறைய சம்பளம், தேவையான அளவு விடுமுறை, ஏராளமான மீதியான நேரம் என்று இருக்கும்போது, மனிதனுக்கு உலகத்தை அனுபவிக்க தோன்றுமே ஒழிய, கர்த்தரை நினைக்கவும், அவருடைய காரியத்திறகு நேரத்தை ஒதுக்கவும் தோன்றாது. ஞாயிற்று கிழமை மாத்திரம் கொஞ்ச நேரம் ஆலயத்திற்கு சென்று, கடவுளுக்கென்று காணிக்கை ஏதாவது போட்டுவிட்டு, மற்ற நேரம் அனைத்தையும் ஜாலியாக செலவழிக்கவே உலகம் விரும்புகிறது.

.

புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று ஞானம் அழைத்தாலும், மனிதன் புத்தியீனமான வழியிலே நடக்கவே பிரியப்படுகிறான். அது அவனுக்கு இயற்கையாகவே அவனுக்குள் இருக்கிறது. ஆகவே நன்மையை பார்க்கிலும் தீமையை தெரிந்து கொள்வதே மனிதனுடைய ஆசையாய் இருக்கிறது.

.

மதியீனமுள்ள ஸ்திரீ அழைக்கும்போது, திருட்டு தண்ணீர் தித்திக்கும் என்று பொய்யான ஆசை காட்டி மதியீன வாலிபர்களை அழைக்கிறாள். 'யாருக்கும் தெரியாது, நீ வா, உன் இஷ்டப்படி அனுபவி, வேண்டும் வரை சந்தோஷமாய் இரு' என்று ஆசை காட்டி அழைத்தவுடன், அந்த வாலிபர்களும், சந்தோஷமாய் போய் அனுபவிக்கிறார்கள். ஆனால், அதனுடைய முடிவு மரணம்! நித்திய மரணம்!

.

எனக்கு தெரிந்த ஒரு பணக்கார குடும்பம். தந்தை பெரிய வக்கீல், தாயார் அரசாங்கத்தில் நல்ல பதவியில் இருந்தார்கள். மூன்று பிள்ளைகள், அவர்களை வெளிநாட்டில் அனுப்பி அவர்களுக்கு பிரியமான படிப்பை படிக்க வைத்தார்கள். ஏகப்பட்ட சொத்து, இளைய மகன் கையில் வேண்டிய பணத்தை கொடுத்தார்கள். அவன், படிக்க போனவன், கெட்ட நண்பர்களின் சேர்க்கையால் போதை மருந்து எடுக்க ஆரம்பித்தான். பெற்றோருக்கு தெரியாது. அவனுடைய நண்பர்கள், 'யாருக்கும் தெரியாது, வா நாம் சந்தோஷமாய் இருப்போம், வீட்டிற்கு நேரத்திற்கு போய் விடு, யாருக்கும் சந்தேகம் வராது' என்று சொல்லி, அவனை போதை மருந்துக்கு அடிமைப்படுத்தினார்கள். முதலில் கையில் இருந்த பணத்தை கொடுத்தவன், பின் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டிலிருந்து திருட ஆரம்பித்தான். ஒரு நாள் போதை மருந்து எடுத்து, காரை ஓட்டினவன், எதிரில் வந்த காரின் மேல் மோதி, அந்த இடத்திலேயே வாலிப வயதில் தன் உயிரை இழந்தான். திருட்டு தண்ணீர் தித்திக்கும்தான், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும்தான்! ஆனால் அதன் முடிவோ நித்திய மரணம்.

.

ஞானமாகிய கிறிஸ்து அழைக்கும்போது, அவரிடம் வந்து விடுவோம். அவர் கொடுக்கும் நித்திய ஜீவனை பற்றி கொள்வோம். கர்த்தருக்கு பயப்படுதலை கற்று கொண்டு, 'என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்' (11 ம் வசனம்) என்றவரின் வாக்குப்படி, நம் ஆயுசை சந்தோஷமாய் கர்த்தருக்குள் கழிப்போம். நித்திய ஜீவனை பெற்று கொள்வோம். ஆமென் அல்லேலூயா!

.

வேசித்தனத்திற்கு விலகி ஓடு

இயேசுகிறிஸ்துவை நோக்கி ஓடு

நோக்கி ஓடு நீ நோக்கி ஓடு

இளமை இச்சைகளை விட்டு ஓடு

தூய்மை உள்ளத்தோடு துதிபாடு

நீ துதிபாடு தினம் பாடு

...

ஓடு ஓடு விலகி ஓடு

வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு

ஓடு ஓடு தொடர்ந்து ஓடு

இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு

ஜெபம்

மகா இரக்கமும் கிருபையுமுள்ள நல்ல தகப்பனே, நீர் அழைக்கும் சத்தத்தை கேட்கும் செவிகளை எங்களுக்கு தாரும் தகப்பனே. சாத்தானின் கொடிய தந்திரங்களுக்கு எங்களை விலக்கி காத்தருளும். எங்களுடைய வாலிப பிள்ளைகள் சாத்தானின் அழைப்பை கேட்டு செவி கொடுத்து விடாதபடி நல்ல புத்தியையும் ஞானத்தையும் அவர்களுக்கு கொடுத்தருளும். அவர்களை கிறிஸ்துவின் இரத்தகோட்டைக்குள்ளே வைத்து காத்து கொள்ளும். சாத்தானின் வலையில் சிக்கிவிடாதபடி எங்கள் ஒவ்வொருவரையும் காத்தருளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.