ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான். அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா. - (லூக்கா 14:22-23). . ஒரு மனிதர் பெரிய விருந்தொன்றை ஆயத்தப்படுத்தி அநேகரை அழைக்கிறார். விருந்து வேளை வந்தபோது, விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் சாக்கு போக்குசொல்ல தொடங்குகிறார்கள் ஒருவன் வயலுக்கு போக வேண்டுமென்று சொல்கிறான். மற்றொருவன் மாட்டை சேரிக்க வேண்டுமென்று மறுக்கிறான். இன்னொருவன் இப்போதுதான் திருமணம் செய்திருக்கிறேன், நான் வரவில்லை என்கிறான். ஆனால் அந்த எஜமானின் விருப்பம் எப்படியாவது என் வீடு ஜனத்தினால நிறைய வேண்டும் என்பதுதான். ஆகவே சினங்கொண்டு, 'தெருக்கள், வீதிகளில் போய் ஏழைகளையும், ஊனரையும், சப்பாணிகளையும், குருடர்களையும் கொண்டு என் வீட்டை நிரப்பு' என்று ஊழியக்காரனுக்கு கட்டளையிடுகிறார். . இன்றைக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மனநிலையும் இப்படித்தான் இருக்கிறது. பரலோகத்தை தம்முடைய ஜனங்களால் நிரப்ப வேண்டுமென்று. ஆனால் 2000 வருடத்திற்கு மேலாகியும் இன்னும் இடம் காலியாகவே உள்ளது. ஆவரிடத்தில் வருவதற்கும், விருந்தில் பங்கேற்பதற்கும், இன்னும் பலர் விநோதமான சாக்குபோக்குகளையே சொல்லி கொண்டு, கர்த்தரிடம் வருவதற்கு நிராகரித்து கொண்டு இருக்கிறார்கள். ஆதலால் கிறிஸ்துவை ஏற்று கொண்ட நம் ஒவ்வொருவரிடத்திலும் தயவு செய்து காலியிடத்தை நிரப்புங்கள் என்று வருந்தி கேட்கிறார். நூறில் ஒரு ஆடு காணாமற் போனால் கூட அவரால் திருப்தியாக இருக்க முடியாது. அந்த ஒரு ஆட்டை கண்டுபிடிக்கும் வரை பரிதபித்து கொண்டே இருப்பார். . அந்த அருமை ஆண்டவரின் விருப்பத்தை நிறைவேற்ற நாம் என்ன செய்ய போகிறோம்? இவ்வளவு ஜெபிக்கிறேன், இவ்வளவு ஊழியம் செய்கிறேன், இவ்வளவு கொடுக்கிறேன் என்று திருப்தியாகி விட்டோமா? கிறிஸ்தவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றவே செய்ல் பட்டுக்கொண்டு இருக்கிறோமா? கிறிஸ்தவர்களுக்கு பிரசங்கங்கள் செய்வதே என் தரிசனம் என்று ஓடுகிறோமா? இல்லையேல் ஒரு வசனம் மொபைல் போனில் அனுப்பிவிட்டு திருப்தி ஆகி விடுகிறோமா? கிறிஸ்தவர்களுக்கு வல்லமை முகாம்களையும், பயிற்சி முகாம்களையும் நடத்துகிறோம். நம்முடைய டி.வி. நிகழ்ச்சிகளிலேயும் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் 90 சதவிகிதம் கொடுக்கிறோம். நாம் செய்கிற அனைத்தும் நல்லதே. நாம் இதுவரை செய்த ஊழியத்தில் நமக்கும், கிறிஸ்தவர்களுக்குமே முக்கியத்துவம் கொடுத்தோம், ஆனால் நாம் செய்த ஊழியத்தினால் இடம் நிரம்பவில்லையே? நமது சபையை நிரப்ப என்ன செய்யலாம் என்று இன்னும் செய்ததையே செய்து செய்து நம்மில் நாமே திருப்திப பட்டு கொண்டு இருக்கிறோமா? இதோ நம்முடைய திட்டத்தை, தரிசனத்தை, முயற்சியை மாற்றி வேறு திட்டத்தை ஆண்டவரே கொடுக்கிறார், லூக்கா 14:23 வசனத்தின்படி மெயின் ரோடுகள், தெருக்கள், வீதிகள், ஆஸ்பத்திரிகள, சிறைசாலைகள் என்று போய் சுவிசேஷத்தை கூறி ஆண்டவரின் விருந்து சாலையை ஜனங்களால் நிரப்புவோமா? . பிரியமானவர்களே, நமதாண்டவர் வெறுமையான யாவற்றையும் நிரப்புகிறவர். சகலத்தையும் பூரணமாய் செய்து முடிப்பவர். குருடனை பார்க்க செய்த போது, ஒரு கண்ணை மட்டுமல்ல, பூரண சுகத்தை கொடுத்தார். மேல் வீட்டறையிலிருந்தவர்களை பரிசுத்த ஆவியால் நிரப்பும்போது, அங்கிருந்த நூற்றிருபது பேரையும் ஒருவர் கூட மீதியில்லாமல் நிரப்பினார். அப்படி பூரணத்தை விரும்பும் ஆண்டவர் பரலோகமும் பூரணமாய் நிரம்ப வேண்டுமெனறு விரும்புகிறார். இன்னும் இடம் இருக்கிறது என்கிறார். காலியான இடத்தை நிரப்ப நாம் ஒற்றுமையாய் செயல்படுவோமா? பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள் என்று பாட்டில் மட்டுமல்ல, அப்படி அவர்கள் நிரப்புவதற்காக நாம் செயல்படுவோம். கர்த்தர் அதற்கு உதவி செய்வார். ஆமென் அல்லேலூயா! . இராஜ்ஜியத்தின் புத்திரர் என்போர் அழைப்பை அசட்டை பண்ணிவிட்டால் வேலியருகே உள்ள மனிதர் கலியாண சாலை நிரப்புவார்! ... வேதம் கற்று போதிப்போரும் சத்தியத்தைக் கடைபிடியாவிட்டால் ஆயக்காரர் பாவிகளும் பரலோகில் இடம் பெறுவாரே! |