Friends Tamil Chat

புதன், 16 அக்டோபர், 2013

16th October 2013 - பள்ளத்தாக்கின் அனுபவம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 அக்டோபர் மாதம் 16-ம் தேதி – புதன் கிழமை
பள்ளத்தாக்கின் அனுபவம்
....

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். - (சங்கீதம் 23:4).

.
ஒரு போதகர் தன் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரையும், வீட்டில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் பறிகொடுத்தவராய், மிகுந்த வியாகுலத்தோடு ஒரு நாள் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு ஒரு ஆலயத்தை கட்டும்படி வேலையாட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் செய்யும் வேலையை சற்று நேரம் நின்று அந்த போதகர் பார்த்து கொண்டிருந்தார். அதில் ஒருவர், உளியையும், சுத்தியலையும் வைத்து, முக்கோண வடிவில் கல்லை செதுக்கி கொண்டிருந்தார். அதை பார்த்த போதகர், அவரிடம் சென்று, 'நீர் என்ன செய்து கொண்டிருக்கிறீர்' என்று கேட்டார். அந்த ஆலயத்தின் முகப்பு பகுதியை அவர் போதகரிடம் காட்டி, 'இந்த வடிவம், இந்த இடத்தில் பொருத்தும்படிக்கு இதை நான் செதுக்கி கொண்டிருக்கிறேன்' என்று கூறினார்.

.

அவர் அப்படி சொல்லி கொண்டிருக்கும்போதுதானே, ஆவியானவர் அவருடன் பேச ஆரம்பித்தார். போதகர் சென்று கொண்டிருக்கும் பள்ளத்தாக்கின் அனுபவம் அவரை தேவனிடம் நெருங்கி சேரும்படியாகவும், தேவனோடு அவருடைய சித்தத்தில் தன்னை சரியாக இடத்தில் பொருத்தும்படிக்கு தேவன் அனுமதித்திருக்கிறார் என்று அந்த நாளில் அறிந்து கொண்டார்.

.

ஒரு வேளை அந்த போதகரை போல நம்மில் அநேகர் மரண பள்ளத்தாக்கின் அனுபவத்திற்குள் கடந்து சென்று கொண்டிருக்கலாம். வாழ்விலே ஏற்படுகிற பாடுகள், துன்பங்கள், துக்கங்கள், ஏமாற்றங்கள் இவை யாவையும் ஒருவேளை அனுபவித்து, என்று எனக்கு விடுதலை கிடைக்கும் என ஏங்கி கொண்டிருக்கலாம். இந்த நாளில் நாம் ஒன்றை அறிந்து கொள்வோம். தேவன் அனுமதிக்கிற பள்ளத்தாக்கின் வாழ்வில் தேவன் சொல்லி கொடுக்கும் பாடத்தை கற்று கொண்டு, அவற்றை நமக்கு நன்மையாக பிரயோஜனப்படுத்தி கொள்வோம்.

.

நான் பல வருடங்களுக்கு முன், வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, நாங்கள் இருந்த நாட்டை வேறு நாட்டவர் வந்து ஆக்ரமித்து கொண்டனர். கையில் மூன்று மாத குழந்தை, நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை! கையிலும், பேங்கிலும் பணம் இல்லாத நிலைமை, குழந்தைக்கு பால் வாங்கி கொடுக்கக்கூட தேவையான பணம் இல்லாத குறை! உறவினர் யாரும் கண்டு கொள்ளவில்லை. தங்க வீடு இல்லை, மிகவும் பயங்கரமான பள்ளத்தாக்கின் வாழ்வை கடந்து சென்றோம். என்று விடுதலை கிடைக்கும் என்று கதறின நாட்கள் உண்டு. பணம் இருக்கும் வரைதான் உறவினரும், நண்பர்களும்! இல்லாவிட்டால் ஏன் என்று கேட்க யாருமிருக்க மாட்டார்கள். இபப்டி எல்லாரும் கைவிட்டிருந்தாலும் என் தேவன் எங்கள் குடும்பத்தை கைவிடவில்லை. திரும்பவுமாக, அந்த தேசத்தை திருப்பி கொண்டு வந்தார். எங்களை திரும்பவும் அந்த தேசத்தில் கொண்டு சேர்த்து, முன்னிருந்ததை பார்க்கிலும், பல மடங்கு ஆசீர்வதித்து, எங்களை வாலாக்காமல் தலையாக்கினார்! அல்லேலூயா!

.

நீங்களும் இதுபோன்ற கொடிய பள்ளத்தாக்கில் கடந்து சென்று கொண்டிருக்கிறீர்களோ, கலங்காதிருங்கள். நீங்கள் தேவனுடைய பிள்ளையாயிருந்தால், நிச்சயமாக அவர் அந்த அனுபவத்தை அனுமதித்ததற்கு காரணங்கள் உண்டு. அந்த அனுபவத்தை நாம் நமக்கு நன்மையாக மாற்றி கொள்ள வேண்டும்.

.

தாவீது இராஜாவின் சொந்த மகனே, அவரை நாட்டை விட்டு, வெளியேற்றின கொடுமை! அவருக்கு யாரும் உதவி இல்லை! மனம் கசந்தவராக இரவோடு இரவாக நாட்டை விட்டு வெளியேறினார். அவருக்கு கீழாக வேலை செய்த சீமேயி அவரை தூஷித்தான் (2 சாமுவேல் 16:7). ஒரு நம்பிக்கையில்லாத நிலை, நாளை என்ன நடக்கும் என்று அறியாத, புரியாதபடி இருந்த அவர் தேவனை மாத்திரம் சார்ந்து கொண்டார்.

.

நமக்கு ஏற்பட்டிருக்கும் இந்த கொடிய பள்ளத்தாக்கின் அனுபவம், ஒருவேளை நம்முடைய பாவத்தின் பலனாக இருக்கலாம், ஆனால் எல்லா அனுபவங்களும் பாவத்தினாலே தேவன் அனுமதிப்பது என்று நாம் எடுத்து கொள்ளக்கூடாது. அது தவறாகும். நாம் தேவனை அதிகமாய் பற்றி கொள்ளும்படியாக, அவரையே சார்ந்து ஜீவிக்கும்படியாக, தேவன் ஒரு வேளை அனுமதித்திருக்கலாம். ஆனால் எதுவாயிருந்தாலும், நாம் அந்த அனுபவத்திற்குள் செல்லும்போது, தேவன் நமக்கு செய்த நன்மைகளையும், நம்மை இரட்சித்ததையும் நாம் நினைவு கூர்ந்து, அவரை பற்றி கொள்ள வேண்டும்.

.

வேதத்தில் நாம் காணும் அநேக கர்த்தரின் பிள்ளைகள் அந்த கண்ணீரின் அனுபவத்தில் தங்கள் இருதயமும், மனமும் சோர்ந்து போனாலும், அவற்றின் பின் தேவனுடைய மகிமையையும், ஆசீர்வாதத்தையும் அனுபவித்ததை காண்கிறோம். சாத்தராக்,மேஷாக், ஆபெத்நேகோ மூவரும் எரியும் சூளையின் மத்தியில் எறியப்பட்டாலும், கர்த்தர் நான்காவது ஆளாக அவர்களோடு உலாவினதை, அவருடைய பிரசன்னத்தை அனுபவித்தார்கள். தானியேல் சிங்க கெபியில் தூக்கி எறியப்பட்டபோது, அந்த பயங்கரமான பள்ளத்தாக்கிலும், தேவன் அவரை பாதுகாப்பவராக இருந்ததை அறிந்து கொண்டார். யோபு, தாவீது, யோசேப்பு, பவுல் இப்படி எத்தனையோ பேர் அந்த கண்ணீரின் பள்ளத்தாக்கின் அனுபவத்தில் அடிபட்டாலும், அவர்கள், பள்ளத்தாக்கில் தான் மரங்கள் இன்னும் உயரமாக வளரும் என்பதையும், அந்த கண்ணீரின் வேளைகளில் தான், தேவனுடைய கிருபை அதிகமாக தங்களில் கிரியை செய்வதையும், அவரோடு கூட இன்னும் நெருங்கி ஜீவிக்கும் அனுபவத்தை அவர்கள் பெற்று கொண்டதையும், அந்த அனுபவங்கள் கர்த்தர் தங்களோடு கூட இருக்கிறார் என்பதையும் கற்று கொள்ள வழிவகுத்தது.

.

கர்த்தர் தாமே, நாம் அவருடைய பிள்ளைகளாய் இருந்தால், இந்த பள்ளத்தாக்கின் அனுபவத்தை அனுமதிக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த அனுபவம் ஒரு சாபம் என்று நாம் நினைத்தால், அவருடைய கரத்திலிருந்து ஆசீர்வாதத்தை இழந்து போய்விடுவோம். பள்ளத்தாக்கின் அனுபவத்தையே நாம் பெரிது படுத்தி கொண்டிருப்போமானால், பள்ளத்தாக்கிற்கு பின் ஒரு மேடு உண்டு, தேவனுடைய ஆசீர்வாதம் உண்டு என்பதை அறியாமற் போய் விடுவோம். உலகத்தார் துக்கிப்பதை போன்று நாம் துக்கித்து கொண்டு நடந்தால், தேவனுடைய இனிய பிரசன்னத்தை இழந்து போய்விடுவோம்.

.

நாம் பள்ளத்தாக்கின் அனுபவத்தில் கடந்து செல்லும்போது, தேவனுடைய கரத்தை பற்றி கொள்வோம். 'நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது' - (ஏசாயா 43,2) என்று வாக்குதத்தம் செய்தவர் நிச்சயமாய் நம்மை தப்புவிப்பார். 'நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்' என்று நாம் அந்த அனுபவத்திலும், அதற்கு பின்னும் தைரியமாய் கூற முடியும். ஆமென் அல்லேலூயா!

.
எரியும் சூளையோ ஏழுமடங்கு எரிந்தாலும்

என் தேவன் தப்புவிக்க வல்லவர்

சிங்க கெபியே என்னை பட்சிக்க வந்தாலும்

என் தேவன் தப்புவிக்க வல்லவர்

...

நான் ஆராதிக்கும் தேவன் இயேசு

என்னை தப்புவிக்க வல்லவர்

அவர் ஜீவனுள்ளவர் வல்லமையுள்ளவர்

நேற்றும் இன்றும் மாறாதவர்

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் பள்ளத்தாக்கை போன்ற கொடிய அனுபவங்களிலும், தேவரீர் எங்களுடைய நன்மைக்காகவே அவற்றை அனுமதிக்கிறீர் என்பதை உணர்ந்து, அந்த வேளைகளிலும், உம்முடைய இனிய பிரசன்னத்தை அனுபவிக்க கிருபை செய்யும். இன்னும் அதிகமாக உம்மை கிட்டி சேரவும், தேவன் சொலலி கொடுக்கும் பாடங்களை கற்று, அநேகருக்கு பிரயோஜனமாயிருக்கவும் தேவன் தாமே கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் ஜெபத்தை கேட்கிற நல்ல தகப்பனே, சகோதரன் குகேந்திரன் தனக்கென்று ஒரு வீடு வாங்க ஜெபிக்க கேட்டிருக்கிறாரே, அவருடைய மன வாஞ்சையின்படி, அவருக்கு ஒரு வீடு வாங்கத்தக்கதாக பணத்தேவைகளை தேவரீர் தயவாய் சந்திப்பீராக.

..

சகோதரி அனிதா அவர்களின் பணத்தேவைகளை சந்திப்பீராக. அவர்களின் சகோதரி லதா அவர்களின் குடும்பத்தில் காணப்படும் பிரச்சனைகளை மாற்றி, நீரே ஜீவனுள்ள தேவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள கிருபை செய்யும்.

..

சகோதரன் ஜெயக்குமார் அவர்களின் சகோதரி பேபி அவர்களுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில், இடதுபுற கிட்னியில் பிரச்சனை என்று சொல்லியிருப்பதால், தேவன் தாமே அவர்களுக்கு இரங்கி, பரிபூரண சுகத்தை தருவீராக. திங்கட்கிழமை அவர்கள் செக்அப் போகும்போது, எல்லா டெஸ்டுகளும் நார்மலாக இருக்கும்படி தேவன் தாமே ஒரு அற்புதத்தை செய்வீராக.

..

சகோதரி ரேகா பவுலினா அவர்களின் குடும்பத்தை ஆசீர்வதிப்பீராக. எல்லா குறைகளையும் மாற்றி, நிறைவான தேவன் நிறைவான ஆசீர்வாதத்தினால் அந்த குடும்பம் நிறைந்திருக்க கிருபை செய்யும். இரண்டாம் வருடம் இஞ்சினியரிங் படிக்கும் தம்பி விக்னேசுவரன் இன்னும் உம்மண்டை கிட்டி சேரவும், உமக்குள் வளரவும் வாஞ்சிக்கிறதை அறிகிற தேவனே, அவரை ஆசீர்வதியும். தேவ ஞானத்திற்குள் கடந்து வரவும், வாலிப நாட்களில் சிருஷ்டிகராகிய உம்மை நினைக்கவும், உமக்கு சாட்சியாக வாழவும் கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்பதற்காக உமக்கு நன்றி. எங்கள் விண்ணப்பங்களை இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டி கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.