மரியாள்.. இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். - (லூக்கா 10:39). . பன்னிரண்டு வயதான ஜேன் தன் தகப்பனை அதிகமாய் நேசித்தாள். தகப்பனும் அவளை மிகவும் அதிகமாய் நேசித்தார். காரணம் ஐந்து வயதாயிருக்கும்போதே அவளுடைய தாயார் மரித்துப் போனார்கள். அப்பாவும் மகளும் மாலைதோறும் மரங்கள் அடர்ந்த காடுகளின் ஊடே பேசி மகிழ்ந்தபடி செல்வார்கள். ஒவ்வொரு நாளும் இந்த நேரம் இருவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் நேரமாயிருந்தது. . ஜேன் வளர்ந்து பெரியவளானபோது, அவள் படிப்பினிமித்தம் காலேஜில் சேர்ந்து, அங்கேயே தங்கி படிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவள் அங்கு காலேஜில் சேர்ந்த பிறகு தகப்பன் தனிமையை உணர ஆரம்பித்தார். அவள் எப்போது தன்னைப் பார்க்க வருவாள் என்று ஏங்க ஆரம்பித்தார். ஒரு முறை அவள் அவரை பார்க்க வருகிறேன் என்று சொல்லி விட்டு வரவில்லை. அவர் அவளுக்காக காத்திருந்து, காத்திருந்து தவித்துப் போனார். அவள் அன்று வரவேயில்லை. . அவர் எதிர்பாராத ஒரு நாள் அவள் அவர் முன் வந்து நின்று, 'அப்பா, இன்று உங்களுடைய பிறந்தநாள் அல்லவா, உங்களுக்காக நானே இந்த ஸவெட்டரை பின்னினேன்' என்று மகிழ்ச்சியோடு அவரிடம் கொடுத்தாள். 'ஓ, இதற்காகத்தான் நீ அன்று வரவில்லையா? என் மகளே, நீ என்னோடு இருப்பதைவிட எதுவும் என்னை மகிழ்விப்பதில்லை. இந்த ஸ்வெட்டரை அழகாக செய்திருக்கிறாய், ஆனாலும், இனி ஒருபோதும் எக்காரணத்தைகொண்டும் நீ என்னிடம் வருவதை விட்டு விடாதே, நீ எனக்காக எதையும் செய்வதைவிட என்னோடு இருப்பதையே நான் அதிகமாய் விரும்புகிறேன்' என்று கண்கலங்க கூறின தன் தகப்பனை கட்டி அணைத்துக் கொண்டாள் ஜேன். . இந்த தகப்பனைப் போலவே நமது பரம தகப்பனும் நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார். அதற்காகவே மார்த்தாள், மரியாள் சம்பவத்தை வேதத்தி;ல் எழுதி வைத்துள்ளார். மார்த்தாள் தங்கள் வீட்டிற்கு வந்துள்ள இயேசுகிறிஸ்துவுக்கும் சீஷர்களுக்கும் விதவிதமான சுவையான உணவுகளை செய்து கொடுத்து, அவரை மகிழ செய்ய விரும்பினாள். ஆனாள் மரியாளோ, இயேசுவின் பாதத்தண்டையில் அமர்ந்து வசனத்தைக் கேட்கவும், அவளோடு ஐக்கியம் கொள்ளவும் விரும்பினாள். ஆண்டவர் தமக்காக மிகவும் பிஸியோடு பலப்பல வேலைகளை செய்து தன் உணவினாலும், தன் கையின் பக்குவத்தாலும் கர்த்தரை மகிழ்விக்க விரும்பின மார்த்தாளின் செயலை அல்ல, மரியாளின் செயலினிமித்தமே மகிழ்ச்சி அடைந்தார். . பிரியமானவர்களே, நாமும் கூட ஆண்டவருக்காக எதை எதையோ செய்ய வேண்டுமென்றெண்ணி, ஆண்டவரோடு உறவாடி ஐக்கியம் கொள்ளும் ஜெப நேரத்தை விட்டுவிடுகிறோம். காரணம் அந்தரத்தில் செய்யும் ஜெபத்தை அவ்வளவு முக்கியமாக கருதுவதில்லை. ஆனால் தேவனோ நாம் அவருக்காக செய்யும் வேலையையோ, ஊழியத்தையோ விட அவரோடு நேரம் செலவழித்து, அவருக்கு நாம் வாழ்வில் முதலிடம் கொடுப்தையே அதிகம் விரும்புகின்றார். அவரோடு நாம் கொள்ளும் தனிப்பட்ட உறவை தினமும் அவரோடு உறவாடி அவரை மகிழ்விப்போமா? . 'மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்'. ஆம், அநேக காரியங்கள் அல்ல, ஒரே ஒரு காரியமே தேவையானது. அது அவருடைய பாதத்தில் அமர்ந்து நாம் அவரோடு ஐக்கியம் கொள்வது மாத்திரமே! வேறு எதுவும் தேவையுள்ளது அல்ல! . நாம் செய்யும் எந்த காரியமும் நம்மை விட்டு எடுபட்டுப் போய் விடும். தினமும் செய்யும் அலுவலக வேலைகள், மற்ற காரியங்கள் எதுவும் நம்மை விட்டுப் போகலாம். ஆனால் இயேசுவின் பாதத்தில் நாம் அமர்ந்து இருக்கும் ஒவ்வொரு நொடியும் வீணாய் போகாது. நம்மை பெலவானாய் மாற்றும். உலகத்தை கலக்குகிறவர்களாக நம்மை மாற்றும். ஆமென் அல்லேலூயா! . உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் வீணாகப் போகாதையா - என்னை பெலவானாய் மாற்றுதையா . வானத்திலே தூதரெல்லாம் பரிசுத்தரே என்று பணிகின்றார்களே பூமியிலே மண்ணான நான் எந்நாளும் வாழ்க என்று பணிகின்றேனையா |