இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. - (2 கொரிந்தியர் 5:17). . தன்னுடைய வீட்டில் தேவையில்லாமல் இடத்தை அடைத்துக் கொண்டிருந்த ஏராளமான பழைய பொருட்களை விற்க ஒருவர் முன்வந்தார். பழைய பொருட்கள் வாங்குபவரை அழைத்து வந்து, ஒவ்வொரு பொருளாக எடைபோட்டு கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த மனிதர் சில பொருட்களை விற்க மனமின்றி, அது ஏதாவதொரு உபயோகத்திற்கு ஆகும் என எண்ணி அவைகளை தனியாக எடுத்து வைத்தார். விற்பதாக சொன்ன பொருட்களில் பாதிக்கு மேற்பட்ட பொருட்களை வீட்டிற்குள் எடுத்து வைத்து விட்டார். இதை பார்த்த வியாபாரி எரிச்சடைந்து 'ஐயா எல்லா பொருட்களையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், என்றைக்காவது உதவும்' என்று சொல்லிவிட்டு எழுந்து போய் விட்டார். . சிலருடைய இரட்சிப்பின் அனுபவமும் இப்படியே உள்ளது, அவர்கள் தங்களிடமு;ளள எல்லா பாவ குணங்களையும், சுபாவங்களையும் அகற்றிட விரும்பி இயேசுகிறிஸ்துவை அழைக்கின்றனர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களின் உள்ளான ஆத்துமாவிலுள்ள ஆகாத குணங்கள், பண்புகள், தன்மைகள், எண்ணங்கள் ஆகியவற்றை அகற்றும்படி செயல்படும்போது முற்றிலுமாக அவைகளை களைய அவர்கள் விரும்புவதில்லை. சில குணங்களும், பழக்கங்களும், சிந்தைகளும் தங்களைவிட்டு விலகாமல் இருப்பதையே விரும்புகின்றனர். . ஜாதியுணர்வு, பணமோகம், அந்தஸ்து மிக்கவர்களாக அறியப்படுதல், தாழ்நதுபோக விரும்பாமை, வைராக்கியமாக இருத்தல், கசப்பை விட மறுத்தல் ஆகிய ஆகாத சுபாவங்களை தங்களிடம் வைத்துக் கொண்டே வேறு பல தீங்காகன குணங்களை விட்டு விட வாஞ்சிப்பர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஒரு ஒட்டு மொத்த மாறுதலுக்கு ஏதுவாகவே நமக்குள் கிரியை செய்ய விரும்புகிறார். சில விஷயங்களில் நாம் ஆவிக்கேற்றவர்களாக மாற விரும்பியும், வேறு சில விஷயங்களில் பழைய ஜென்ம சுபாவ நிலையில் நாம் நீடிக்கவும் விரும்பும்போது, ஆவியானவர் நம்மிடம் தொடந்து தங்கியிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இது ஒரு உண்மையான பரிசுத்த வாழ்விற்கான விருப்பம் அல்ல. . ஆவியானவர் நம்மிடம் கிரியை செய்து நம்மை முற்றிலும் பரிசுத்தமான ஒரு நிலைக்கு கொண்டு வர விரும்புகிறார். ஆகவே நாம் விரும்புகிற, விரும்பாத எல்லா காரியங்களையும் அவை தேவனுக்கு பிரியமற்றிருந்தால் அவற்றை அப்புறப்படுத்த ஆவியானவரை அனுமதித்து, ஒத்துழைக்க வேண்டியது மிக அவசியம். . பிரியமானவர்களே, பழைய பொருட்களில் சில நமக்கு வேண்டுமென்று வைத்திருந்தோமானால், அவை துரு பிடிக்கும்போது நம்மை காயப்படுத்தி விடும். அதுப்போல பழைய சுபாவங்களும், வேண்டாத சுபாவங்களும் நம்மை காயப்படுத்துவதோடு, பிறருக்கும் இடைஞ்சலாக இருக்கும். அரைகுறை அர்ப்பணிப்பும், அரைகுறை விசுவாசமும் நம்மை நட்டாற்றில் விட்டுவிடும்;. முழுமையான சுத்திகரிப்பிற்காக நம்மை தேவ கரத்தில் முழுமனதோடு விட்டுக் கொடுப்போம். புதுவாழ்வை பெற்றுக் கொள்வோம். ஆமென் அல்லேலூயா! . சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே பாவி நீசப்பாவி நானையா தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ . பரிசுத்தர் கூட்டம் நடுவில் ஜொலித்திடும் சுத்த ஜோதியே அரூபியே இவ்வேளையில் அடியார் நெஞ்சம் வாரீரோ |