Friends Tamil Chat

புதன், 6 மார்ச், 2013

06th March 2013 - நன்றியால் துதிபாடு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 மார்ச் மாதம் 6-ம் தேதி – புதன்கிழமை
நன்றியால் துதிபாடு
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. - (சங்கீதம் 103:2).

.
தன் தாயின் வயிற்றிலிருந்தது முதல் சப்பாணியாய் பிறந்து, அலங்கார வாசலில் அலங்கோலமாய் உட்கார்ந்து பிச்சை எடுத்து கொண்டிருந்த மனிதன் ஒருவன் இருந்ததை குறித்து அப்போஸ்தலர் நடபடிகள் 3-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். பிச்சையெடுப்பதை கூட அவனாக செய்ய முடியாது, அவனை யாராவது சுமந்துகொண்டு வர வேண்டும். ஆகவே யாராவது அலங்கார வாசலுக்கு தன்னை தூக்கி கொண்டு போக மாட்டார்களா என்று யாரையாவது எதிர்ப்பார்த்துதான் தன் வாழ்வை அவன் வாழ்ந்து கொண்டிருந்தான். யாராவது தன் நிலையை பார்த்து பிச்சை போட மாட்டார்களா என்று நாள்தோறும் மற்றவர்களை எதிர்ப்பார்த்தே தன் வாழ்நாளை கழித்து கொண்டு இருந்தவன் இந்த மனிதன்.

.

ஒருநாள் பேதுருவும், யாக்கோபும் அந்த ஆலயத்திற்கு வந்தபோது, அவர்களிடம் தனக்கு ஏதாவது கிடைக்குமா என்று ஆவலோடு அவர்களை பார்த்து தன் கைகளை ஏந்தினான். 'அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; வலதுகையினால் அவனைப் பிடித்துத்தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன்கொண்டது. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூடத் தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்' - (அப்போஸ்தலர் 3:6-8) என்று பார்க்கிறோம். பேதுருவும் யாக்கோபும் அவனது கைகளை பிடித்து இயேசுவின் நாமத்தில் எழுந்து நட என்றவுடன், அற்புத சுகமடைந்த அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தான் காண்பது கனவல்ல, நிஜம்தான் என்று அறிந்தவுடன் குதித்து எழுந்தான், நின்றான், நடந்தான், நடந்து, குதித்து, தேவனை துதிக்க ஆரம்பித்தான். பேதுரு யோவானோடு தேவாலயத்திற்குள் அமைதியாகவா அவர்களுடன் சென்றிருப்பான்? நிச்சயமாக இருக்காது, அவனது மகிழ்ச்சியின் சத்தத்தினால் அவனை சப்பாணியாய் கண்டவர்கள், ஓடிவந்து அவனுக்கு என்ன நேர்ந்தது என்று கண்டிருப்பார்கள், அட, சப்பாணி நடக்க ஆரம்பித்து விட்டானே என்று அவர்களும் ஆச்சரியத்துடன் அவனை பார்த்து கர்த்தரை துதித்திருப்பார்கள்.

.

பிரியமானவர்களே, இந்த சப்பாணியின் பரிதாப நிலையில் நாமில்லை. கைகள் கால்கள் திடமாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்கிறோம். மூன்று வேளையும் நன்றாக உண்கிறோம், நமது வேலையை நாமே பார்த்து கொள்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக தேவன் நம்மை பாவத்திலிருந்து மீட்டெடுத்துள்ளார். இது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி! நாம் வியாதியில் இருந்த நாட்கள் அதிகமா? ஆரோக்கியமாக இருந்த நாட்கள் அதிகமா? ஆரோக்கியம்தானே! அப்படியென்றால் நமது ஆரோக்கியத்திற்காக, கர்த்தர் நம்மை போஷித்ததற்காக, பாதுகாத்ததற்காக, ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் அவரை நன்றியுள்ள உள்ளத்தோடு தூதிக்கிறோம்? வியாதியில் வேதனைப்படும்போது, விடுதலைக்காக அவரை தேடிய அளவிற்கு ஆரோக்கியமாக உள்ள நாட்களில் நன்றி செலுத்துகிறோமா? கிரிக்கெட்டில் யாரோ ஒருவர் பெற்ற சாதனைக்கு வீடே அதிரும் வண்ணம் ஆரவாரம் செய்கிறோம். வீட்டிற்கு வரும் நணபர்களிடமும் அதை பற்றி பேசி மகிழ்கிறோம். ஆனால் தேவன் நமக்கு செய்தவைகளை நினைக்கும்போது நம் உள்ளம் ஆர்ப்பரிக்கிறதா? அதை வீட்டிற்கு வரும் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு தேவ நாமத்தை மகிமைப்படுத்துகிறோமா?

.

நாம் இல்லாதவைகளை நினைத்து ஏங்குவதை விட்டுவிட்டு தேவன் தந்திருக்கும் காரியங்களுக்காக அவரை துதிப்பபோம். ஆண்டவர் செய்த நன்மைகளை சந்தர்ப்பம் கிடைக்கும்போது, ஆலயத்திலோ, கூட்டத்திலோ சாட்கியாக பகிர்ந்து கொள்ளுங்கள். வெட்கப்பட வேண்டாம். தாவீது இராஜாவாயிருந்தும் தேவனை துதிக்கும்போது நடனமாடினானே, வெட்கப்படவில்லையே!

.

நம் ஆயுள் முழுவதும் தேவனுக்கு நன்றியறிதலுள்ளவர்களாக இருப்போம். தேவனுக்கு நன்றி செலுத்திவிட்டு நின்று விடாமல், அவருக்காய் ஏதாவது செய்ய முயலுவோம். அவர் செய்த உபகாரங்குளுக்கு பதிலாக நாம் எதையும் செய்துவிட முடியாது என்றாலும் அவரது ஏக்கமாகிய உலக மக்களின் இரட்சிப்பற்க்காக ஏதாவது ஒரு வகையில் ஊழியம் செய்து அவருக்கு நன்றியை தெரிவிப்போமா? ஆமென் அல்லேலூயா!

.

எத்தனையோ நன்மைகளை

என் வாழ்வில் செய்தவரே

அத்தனையும் நினைத்து நான்

அதிகமாய் நன்றி சொல்வேன்

..

நன்றி உமக்கு நன்றி

என் தேவா உமக்கு நன்றி

நன்றி சொல்ல வந்தேன் நாதா

என் நாவினால் துதிக்கிறேன்

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நாளிலும் நீர் எங்களுக்கு செய்த நன்மைகள் கோடி கோடி ஐயா. ஆனால் நாங்கள் இதுவரை நீர் செய்த நன்மைகளுக்கு நன்றி செலுத்தாமல் இருந்திருந்தால் தயவாய் எங்களுக்கு மன்னியும். நீர் செய்த நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணி நித்தமும் உம்மை நாங்கள் துதிக்க எங்களை ஏவியருளும். நன்றியறிதலுள்ளவர்களாக ஜீவிக்க கிருபை தருவீராக. நீர் எங்களுக்காக செய்த எந்த காரியத்தையும் மறவாதபடி என்றும் உம்மை துதிக்க கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

..

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.