அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான். - (யோசுவா 15:19). . தேவன் நம் ஒவ்வொருவருக்கும் தாலந்துகளையும், ஞானத்தையும் கொடுத்திருக்கிறார். அவை அக்சாள் திருமணமான போது அவளுடைய தகப்பன் அவளுக்கு கொடுத்த நிலத்தை போன்றது. ஆது அவளுக்கு சுதந்தரமாக கொடுக்கப்பட்டது. நாம் பிறந்த போதே நமக்கு தேவன் அருளிய தாலந்துகளை போன்றது. ஒரு சிலருக்கு இசை கருவிகளை வாசிக்கும் ஞானம் இருக்கலாம், சிலருக்கு அழகாக பாடல்களை இயற்றும் தாலந்து இருக்கலாம், சிலருக்கு பாடும் தாலந்து இருக்கலாம், இப்படி ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் ஒரு தாலந்து கொடுக்கப்பட்டிருந்தும், அதை அறியாதபடி, அல்லது அதை குறித்து கவலைப்படாதபடி, நாம் ஒன்றுமே அதை வளர்க்க பிரயாசப்படவில்லை என்றால், அது தண்ணீரில்லாத வறண்ட நிலத்தை போன்று இருக்கும். எப்படி வறண்ட நிலத்தில் ஒன்றுமே பயிர் செய்ய முடியாமலும், களைகளும் முட்களும் வளர்ந்து இருக்குமோ அப்படியே தாலந்துகளை உபயோகிக்காமல், இருந்தால் யாருக்கும் பிரயோஜனமில்லாதபடி பாழாகி கொண்டிருக்கும். . சிலருக்கு எனக்கு அந்த தாலந்து இல்லை, இந்த தாலந்து இல்லை என்று புலம்பி கொண்டு இருப்பார்களே ஒழிய தேவன் அவர்களுக்கென்று கொடுத்திருக்கிற தாலந்தை புதைத்து வைத்திருப்பார்கள். ஆக்சாள் அவளுக்கு வறண்ட நிலம்தான் சுதந்திரமாக கொடுக்கப்பட்டது என்றாலும், அவள் மனம் தளர்ந்து போய்விடவில்லை. தனக்கு கொடுக்கப்பட்ட வறண்ட நிலத்தில் என்ன செய்தால் அது பயிர் நிலமாக மாறும் என்பதை உணர்ந்து தன் தந்தையிடம், எனக்கு ஒரு ஆசீர்வாதம் வேண்டும் என்று கேட்கிறாள். எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான் என்று பார்க்கிறோம். அவள் கேட்டு கொண்டபடி நீர்ப்பாய்ச்சலான நிலத்தை மாத்திரமல்ல, மேற்புறத்திலிருந்தும் நீர் பாயும்படியாகவும், கீழ்ப்புறத்திலும் நீர் பாயும்படியாகவும், அவளுக்கு அந்த ஆசீர்வாதத்தை காலேப் தருகிறார். ஆக்சாள் அறிந்திருந்தாள், தனக்கு கிடைக்கும் இந்த தண்ணீரை கொண்டு, வறண்ட நிலத்தையும் அவள் மாற்றி, விளைச்சலுள்ள நிலமாக மாற்ற முடியும் என்று உணர்ந்து தன் தகப்பனிடம் கேட்டு பெற்று கொள்கிறாள். . இந்த சிறிய வேத பகுதியிலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம் உண்டு. தேவன் நமக்கு கொடுத்த தாலந்துகளை நாம் அவருக்கென்று உபயோகிக்க ஆரம்பிக்கும்போது ஒரு வேளை சில பிரச்சனைகளும், ஒருவேளை என்ன தாலந்து என்று கூட அறியாமலிருக்கலாம். நாம் தகப்பனிடம், எனக்கு என்ன தாலந்து கொடுத்திருக்கிறீர் ஆண்டவரே என்று கேட்டு, உம்முடைய கிருபையினால் என்னை நிரப்பும் என்று கேட்கும்போது, நிச்சயமாக தேவன் ஜீவத்தண்ணீருள்ள நதிகள் புரண்டோடும்படியாக அவருடைய நாம மகிமைக்கென்று நம்மை நிரப்புவார். . நான் கர்த்தரிடம் ஜெபித்த போது, ஆண்டவரே, நாங்கள் குடும்பமாக உமக்கென்று ஊழியம் செய்ய வேண்டும் என்று ஜெபித்தேன். என்ன ஆச்சரியம், நாம் நினைப்பதற்கும், வேண்டி கொள்வதற்கும் மிகவும் அதிகமாக நம்மிலே கிரியை செய்கிற தேவன், நிச்சயமாகவே குடும்பமாக கர்த்தருக்கென்று ஊழியம் செய்யும்படியாக எங்களை தாலந்துகளால் நிரப்பி, அநேகருக்கு எங்களை ஆசீர்வாதமாக வைத்திருக்கிறார். இது ஒரு நாளும் எங்களால் முடிந்ததென்றோ, எங்கள் ஞானத்தால் நடந்ததென்றோ சொல்லவே முடியாது. அவருடைய கிருபைக்காக ஜெபத்தோடு காத்திருந்த போது தேவன் கிருபையாய் இரங்கி பெரிய காரியத்தை தமது நாம் மகிமைக்காக செய்தார். . ஒருவேளை நீங்களும் கர்த்தருக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற வாஞ்சையோடு இருக்கிறீர்களா? சம்பூரணமாய் கொடுக்கிற தேவனிடத்தில் ஆவலோடு கேளுங்கள். ஒரு உலகப்பிரகாரமான தகப்பன், தனது மகளுக்கு அவள் வேண்டி கொண்டதை கொடுத்து ஆசீர்வதித்தார் என்றால், நமது பரம தகப்பன் நாம் வேண்டி கொள்வதை நமக்கு தராமல் போவாரா! நிச்சயமாக தருவார். மேற்புறத்திலிருந்து பரலோகத்தின் ஆசீர்வாதங்களையும், கீழ்ப்புறத்திலிருந்து உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களையும் அவரிடம் கேட்டு பெற்று கொள்வோம். அவருக்கென்று உழைப்போம்! கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக! ஆமென் அல்லேலூயா! . கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே ... ஜீவத்தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமே கனி தந்திட நான் செழித் தோங்கிட கர்த்தரின் கரத்தில் நித்தம் கனம் பெற்றிட |