Friends Tamil Chat

ஞாயிறு, 3 மார்ச், 2013

03rd March 2013 - நேர்த்தியாய் செய்கிற தேவன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 மார்ச் மாதம் 3-ம் தேதி – ஞாயிற்றுக்கிழமை
நேர்த்தியாய் செய்கிற தேவன்
....

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார். - (பிரசங்கி 3:11).

.
சந்நியாசி ஒருவர் தனக்கு எண்ணெய் வேண்டுமென்று ஒரு ஒலிவ மரக்கன்றை நட்டார். அன்று இரவு ஜெபத்தில், 'கர்த்தாவே இந்த ஒலிவ மரக்கன்றின் மெல்லிய வேர்கள் தண்ணீர் குடித்து பெரிதாக, இதற்கு மழை தேவை. சிறு தூரலை அனுப்பும்' என்று ஜெபித்தார். தேவன் சிறு மழையை பெய்ய செய்தார். மறுநாள் 'ஆண்டவரே, என் மரத்திற்கு சூரிய வெப்பம் வேண்டும்' என்றார். சூரியனும் பிரகாசித்தது. இப்பொழுது 'இதன் பாகங்கள் உறுதிப்பட கடும் பனி வேண்டும்' என்றார். இதோ அந்த சின்ன மரத்தில் பனித்துளிகள் மின்னின. ஆனால் அந்த செடி சாயங்காலத்தில் வாடிப்போனது.

.

இந்த சந்நியாசி தன்னை போலொத்த மற்றொரு சந்நியாசியிடம் சென்று தன் கதையை சொன்னார். அந்த சந்நியாசி 'நானும் ஒரு சின்ன மரம் நட்டேன். இதோ பாரும் அது செழித்து ஓங்குவதை. நான் மரத்தை தேவனிடம் நம்பிக்கையாய் விட்டுவிட்டேன். அதை உண்டாக்கினவர் அதற்கு இன்னது தேவை என்பதை என்னை விட நன்றாக அறிவார். நான் ஒரு நிபந்தனையும் வைக்கவில்லை. தேவனே அதற்கு புயலோ, வெயிலோ, காற்றோ மழையோ எது தேவையோ அதை அனுப்பும். சிருஷ்டித்த நீர் அதன் தேவைகளை அறிவீர்' என்று ஜெபித்தேன் என்றார். இந்த அழகான உவமையை சார்லஸ் கவ்மேன் அம்மையார் தனது புத்தகமொன்றில் எழுதியிருந்தார்.

.

நம்முடைய பிதாவாகிய தேவன் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாய் செய்து முடிப்பவர். ஆனால் நாமோ தேவன் இப்படி இப்படித்தான் நம்முடைய வாழ்க்கையில் செயல்பட வேண்டும் அல்லது ஆசீர்வதிக்க வேண்டுமென்று எதிர்ப்பார்க்கிறோம். நாம் விரும்பும் காரியங்கள் நிறைவேறாமல், நாம் விரும்பாத காரியங்கள் நடக்கும்போது தேவன் என்னை மறந்து விட்டார் என்று நினைக்கிறோம்.

.

ஆபிரகாம் கூட இப்படி ஒரு சூழ்நிலையில் மனம் பதறி தேவனிடத்தில் விண்ணப்பம் செய்தார். சாராள் மூலம் தேவன் கொடுத்த வாக்குதத்தம் தாமதமானபோது, ஆகார் மூலம் ஒரு சந்ததியை உருவாக்கி, 'இஸ்மவேல் உமக்கு முன்பாக பிழைப்பானாக' என்று தேவனுக்கு ஒரு ஆலோசனை சொல்லி விண்ணப்பம் செய்கிறார். இதன் விளைவு அந்த ஆகாரின் நிமித்தமாகவும், மகன் இஸ்மவேலின் நிமித்தமாகவும் அவர் பெற்ற மனஉளைச்சல் ஏராளம். இன்னும் இஸ்ரவேலர் அதன் பலனை அனுபவித்து கொண்டு இருக்கின்றனர்.

.

பிரியமானவர்களே, நமது அன்றாட வாழ்விலும் அநேக காரியங்களில் 'தேவனே நீர் இப்படி செய்யும், இந்த படிப்பை படித்தால் தான் என் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்கும், எனக்கு வாழ்க்கை துணையாக வரும் பெண் இந்த குறிப்பிட்ட படிப்பை படித்திருந்தால் என் வாழ்க்கை நன்றாக இருக்கும்' என்று பலவிதமான ஆலோசனைகளை தேவனுக்கு கொடுத்து கொண்டேயிருக்கிறோம். நாம் விரும்புவுது தவறல்ல, ஆனால் அதைவிட மேலான காரியத்தை தேவன் திட்டமும் தெளிவுமாக நமக்காக முன்குறித்து வைத்துள்ளார். ஆகவே சகலத்தையும் நேர்த்தியாய் ஆளுகை செய்யும் தேவனை நம்பி அவர் சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்போம். அவர் நம்மை சரியான வழியில் நடத்துவார். ஆமென் அல்லேலூயா!

.

அவர் நேரத்தில் அவர் நேரத்தில்

அழகுற வனைகிறார் எல்லாம்

அவர் நேரத்தில்

தேவா காண்பியும் அன்றாடம்

கற்று தாரும் உம் வழியை

நீர் சொன்னதெல்லாம் செய்வோம்

உம் நேரத்தில்


ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நீர் சகலத்தையும் அதினதின் நேரத்தில் நேர்த்தியாய் செய்கிற தேவனாக இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்கள் வாழ்க்கையிலும் நீர் எங்கள் தேவைகளை அதினதின் நேரத்தில் சரியாய் கொடுத்து, அதிசயமாய் நடத்துகிற, நடத்த போகிற தயவிற்காக உமக்கு ஸ்தோத்திரம். நீர் எங்களை நடத்துவதற்கு தடையாய் எங்களிலே காணப்படுகிற எல்லா காரியங்களையும் எடுத்து போடும். நீரே வழிநடத்தும். உமக்கு சித்தமானதை எங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றுவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு

இந்த நாளில் பொதுவான ஜெபக்குறிப்புகளுக்காக

ஜெபிப்போம்.

.
1. எல்லா சபைகளையும் கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.

.
2. கர்த்தருடைய மணவாட்டி சபைகளாக ஒவ்வொரு சபையும் விளங்கத்தக்கதாகவும், அவருடைய வருகையில் எடுத்து கொள்ளப்படத்தக்கதாக ஆயத்தமாக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு சபையும் விளங்கத்தக்கதாகவும் ஜெபிப்போம்.

.
3. சபைகளில் ஊழியங்கள் பெருகத்தக்கதாக ஜெபிப்போம். சபை விசுவாசிகள் ஊழிய வாஞ்சையோடு, ஒருவருக்கொருவர் அன்போடும், தாழ்மையோடும், மற்றவர்களை கனத்தோடு எண்ணுகிறவர்களாகவும், ஆத்தும பாரத்தோடு ஜெபிக்கிறவர்களாகவும் விளங்க ஜெபிப்போம்.

.
4. சபை போதகர்களை கர்த்தர் பலமடங்கு ஆசீர்வதிக்கத்தக்கதாகவும், போதகர்களின் ஒவ்வொரு பிரசங்கங்களும், விசுவாசிகளை தட்டி எழுப்பத்தக்கதாகவும், சத்தியத்தை சத்தியமாக போதிக்கும் போதகர்களாக விளங்கவும் ஜெபிப்போம்.

.
5. ஒவ்வொரு சபையிலும் ஆத்துமாக்கள் பெருகத்தக்கதாகவும், சத்தியத்தை கேட்டு அதன்படி கீழ்ப்படியத்தக்க இருதயத்தை ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் தேவன் கொடுக்கத்தக்கதாகவும் ஜெபிப்போம்.

.

..
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.