அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன். - (யோபு 23:10). . தங்கம் சுத்திகரிக்கப்படும் ஆலையிலே அது சுத்திகரிக்கப்படும் முறையை நாம் கூர்ந்து கவனிப்போமானால் அது மிகவம் ஆச்சரியமாயிருக்கும். மாசு கலந்த நிலையிலிருக்கும் தங்கம் 1100 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் உருக்கப்பட்டு, 99 சதவிகிதம் தூய்மையான தங்கமாக மாற்றப்படுகிறது. அதிகப்பட்ச வெப்ப நிலையில் அந்த பொன் உருகி வரும்போது அதை கவனித்துக் கொள்ளும் தொழிலாளி மிகுந்த கவனமாயிருக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வெப்பம் அதிகமாகி விட்டாலும் தங்கமானது திரவமாகி யாருக்கும் பயன்படாமல் போய் விடும். . அப்படியென்றால் பொன்னின் சரியான பக்குவம் எது என்று எப்படி அறிந்து கொள்வது? அந்த பொன்னை சுத்திகரிக்கும்போது அந்த வேலை செய்யும் தொழிலாளியின் முகம் அதில் தெரிய ஆரம்பிக்கும். அந்த தங்கத்தில் தன் முகம் தெரிந்த உடனேயே அவர் அந்த சுத்திகரிப்பு வேலையை நிறுத்தி விடுவார். ஆம், அப்போது அந்த தங்கம் அழகிய ஆபரணம் செய்ய ஏற்றதாகி விட்டது, . விசுவாசிகளாகிய நம்முடைய ஒவ்வொருவருடைய வாழ்விலும் இப்படிப்பட்ட சுத்திகரிப்பை தேவன் செய்கிறார். நமக்குள் இருக்கும் மாம்சீக எண்ணம், ஜென்ம சுபாவம், சுயநீதி, பெருமை போன்ற கசடுகளை, அழுக்குகளை நம்மில் நின்று நீக்க கடுமையான அக்கினியிலே சோதிக்கிறார். என்றாலும் அவர் நம்மை திராணிக்கு மேலாக சோதிக்கிறதில்லை. திராணிக்கு மிஞ்சும்போது நம்மால் தாங்கமுடியாத நிலை ஏற்பட்டு, சோதனையின் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்று ஆண்டவருக்கே தெரியும். . அதே வேளையில் நம்மால் முடியும் என்ற நிலை கர்த்தருக்கு தெரியுமானால் இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள், இன்னும் கொஞ்சம் சகித்துக் கொள் என்று நம்மை திடப்படுத்துகிறார். பெலப்படுத்துகிறார், இறுதியில் அவர் விரும்பும் சுபாவ மாற்றம் நம்மில் ஏற்பட்டு, கிறிஸ்துவின் சாயல் நமக்குள்ளாக தெரிய ஆரம்பிக்குமானால் அதுவே உரிய பக்குவமாகும். ஆம் அப்போது நாம் சோதனையில் வெற்றி பெற்றுவிட்டோம் என்பது அர்த்தமாகும். . பிரியமானவர்களே, யார் யாரெல்லாம் தேவன் நம்மை புடமிடும்படி ஒப்புக்கொடுத்து, அவருடைய பலத்த கரத்திற்குள் பொறுமையாய் அடங்கியிருக்க கற்றுக் கொள்கிறோமோ அவர்களைக் கொண்டு, தேவன் பெரிய காரியங்களை நிச்சயமாக செய்ய முடியும். எப்படி சுத்திகரிக்கப்பட்ட பொன், அழகிய ஆபரணாக வடிவமைக்கப்படும்படியாக கம்பியாக நீட்டவும், வளைக்கவும், துண்டிக்கப்படவும், முறுக்கவும் தன்னை ஒப்புக்கொடுக்கிறதோ அப்படியே நாமும் நம்மை தேவனிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, தேவசாயல் நம்மில் பிரதிபலிக்கும். அப்போது தேவனின் திட்டம் நிறைவேற அவர் நம்மில் செய்யும் எந்த கிரியைக்கும் முறுமுறுக்காமல் அவருடைய திட்டத்திற்கும் சித்தத்திற்கும் நம்மை அர்ப்பணிப்போமாக! ஆமென் அல்லேலூயா! . தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன் தேவ சத்தம் என்னுள்ளில் பலமாக தொனிக்குதே . பொன்னை போல புடமிட்டாலும் பொன்னாக விளங்குவேன் என்றென்றென்றுமே திராணிக்கு மேல் சோதித்திடார் தாங்கிட பெலனளிப்பார் |